ஞாயிறு, 13 ஆகஸ்ட், 2017

14 ஆயிரம் விதை பந்து தயாரிப்பு அரசு பள்ளி மாணவர்கள் சாதனை.

நாமக்கல்,:ஏரியில் வீசுவதற்காக, நாமகிரிப்பேட்டை அரசு பள்ளி மாணவர்கள், 14 ஆயிரம் விதை பந்துகளை தயாரித்துள்ளனர்.
 
நாமக்கல் மாவட்டம்,நரசிம்மன் காட்டில் அட்டை கரடு பகுதியில், 100 ஏக்கரில் தென்றல் ஏரி உள்ளது. இங்கு, 20 ஆண்டுகளுக்கு முன், பல்வேறு மரங்கள் இருந்தன.

வறட்சி, ஆக்கிரமிப்பு ஆகியவற்றால், அவை முழுவதும் அழிந்தன.அதுமட்டுமின்றி, நீர் வழிப்பாதையில் ஏற்பட்ட ஆக்கிரமிப்பால், மழை நீரும் ஏரிக்கு வருவதில்லை. சுற்றியுள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டு, நிலத்தடி நீர்மட்டமும் குறைந்தது.சுற்றுவட்டார மக்கள், 'வேக் பார் லேக்' என்ற பெயரில், ஏரியை மீட்க திட்டமிட்டனர். முள் மரங்களை வெட்டி, துார் வாருவதுடன், பனை மரங்கள் நட்டு, நீர்வழிப்பாதையை உருவாக்க முடிவு செய்தனர். அப்பகுதியை சுற்றியுள்ள கரட்டுப் பகுதியை பசுமையாக்கும் விதமாக, விதை பந்துகளை வீசவும் தீர்மானித்தனர்.நாமகிரிப்பேட்டை, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் மூலம், விதை பந்துகள் தயார் செய்ய, ஏற்பாடு செய்யப்பட்டது. தலைமை ஆசிரியர் மணி மற்றும் ஆசிரியர்கள் ஒருங்கிணைப்பால், மாணவர்கள் தயார் செய்த, 14 ஆயிரம் விதை பந்துகள், நேற்று முன்தினம், 'வேக் பாக் லேக்' நிர்வாகி கார்த்திக்கிடம் ஒப்படைக்கப் பட்டன.கார்த்திக் கூறுகையில், ''இப்பணி மூலம், ஏரியை சுற்றிலும் பசுமையான காடுகளை உருவாக்க முடியும். அதுமட்டுமின்றி, நான்கு நீர் வழித்தடங்களை ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளோம். இதனால், 2 கோடி லிட்டர் மழைநீரை ஏரியில் சேகரிக்க முடியும்,'' என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக