புதன், 23 ஆகஸ்ட், 2017

பிளஸ் 2 தேர்வில் மாற்றமில்லை.

'பிளஸ் 2 பொதுத் தேர்வு மதிப்பெண் மற்றும் வினாத்தாள் முறையில், மாற்றம் இல்லை' என, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது. பிளஸ் 1 வகுப்புக்கு, இந்த ஆண்டு முதல், பொதுத் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. மேலும், தேர்வுக்கான மதிப்பெண்கள், பாட வாரியாக தலா, 200 என்பது, 100 ஆக மாற்றப்பட்டு உள்ளது. அது போல, பிளஸ் 2 தேர்வுக்கு மாற்றம் உண்டா என, மாணவ மாணவியரும் குழப்பத்தில் உள்ளனர். ஆனால், இந்த ஆண்டு, பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு, பொதுத் தேர்விலும், வினாத்தாள் மதிப்பெண் முறையிலும், மாற்றம் இல்லை என, அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

இது குறித்து, அதிகாரிகள் கூறியதாவது: பழைய முறைப்படியே, இந்த ஆண்டு, பிளஸ் 2 பொதுத் தேர்வு நடக்கும். மாணவர்களுக்கு வழங்கப்பட்ட, 'புளூ பிரின்ட்' அடிப்படையில், கேள்விகள் அமையும். சிந்திக்கும் வகையிலும், சிக்கலுக்கு தீர்வு காணும் வகையிலும், பதில் எழுத, சில வினாக்கள் இடம் பெறும். தேர்வுக்கான மதிப்பெண்ணில், இந்த ஆண்டு மாற்றம் இல்லை.
எனவே, மாணவர்கள் குழப்பமின்றி, பழைய தேர்வு முறையின்படி பயிற்சி பெறலாம். தமிழக பெற்றோர் - ஆசிரியர் கழகம் வெளியிட்ட, வினா வங்கிகளை பயன்படுத்தியும் பயிற்சி எடுக்கலாம். 'நீட்' போன்ற தேசிய நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறும் வகையில், மாணவர்களை, ஆசிரியர்கள் தயார்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக