ஞாயிறு, 13 ஆகஸ்ட், 2017

விழிப்புணர்வு இல்லாததால் பயன்பெறுவோர் குறைவு: காஸ் சிலிண்டர் விபத்துக்கு இழப்பீடு பெறுவது எப்படி? - எண்ணெய் நிறுவன அதிகாரிகள் விளக்கம்.

தமிழகத்தில் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய3 பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களையும் சேர்த்து மொத்தம் 1.80 கோடி சமையல் எரிவாயுசிலிண்டர் வாடிக்கையாளர்கள் உள்ளனர்.
 
வீட்டு உபயோகத்துக்காக சிலிண்டர்களைப் பயன்படுத்துபோது சில நேரங்களில் எதிர்பாராத விதமாக விபத்துகள் நடக்கின்றன.தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (என்சிஆர்பி) தகவலின்படி, நாடு முழுவதும் கடந்த 2015-ம் ஆண்டு மட்டும் 2,390 விபத்துகள் நடந்துள்ளன. இதில், 3,400 பேர் உயிரிழந்துள்ளனர். 83 பேர் காயமடைந்துள்ளனர். தமிழகத்தைப் பொறுத்தவரை 356 பேர் உயிரிழந்துள்ளனர். 61 பேர் காயமடைந்துள்ளனர்.இவ்வாறு, விபத்து ஏற்பட்டால் பாதிக்கப்படுவோருக்கு இழப் பீடு வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது. ஆனால் இதுகுறித்து நுகர்வோருக்கு போதிய விழிப்புணர்வு இல்லாததால் அந்தத் திட்டத்தால் பயன்பெறுவோரின் எண்ணிக்கை குறை வாக உள்ளது. 

ஆண்டுக்கு ரூ.6,000 பிரீமியம் 
இதுதொடர்பாக இந்தியன் ஆயில் நிறுவன உயர் அதிகாரி ஒருவர் ‘தி இந்து’விடம் கூறியதாவது: சிலிண்டர் விபத்தால் பாதிக்கப்படும் வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு வழங்க ஏதுவாக ஒவ்வொரு முகவரிடம் இருந்தும் ஆண்டுக்கு ரூ.6,000-த்தை பிரீமியம் தொகையாக எண்ணெய் நிறுவனங்கள் வசூலிக்கின்றன. இதற்காக, வாடிக்கையாளர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படுவது இல்லை. இந்த இன்சூரன்ஸ் திட்டம் குடும்பத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் பொருந்தும்.சம்பந்தப்பட்ட நுகர்வோரின் பதிவு செய்யப்பட்ட முகவரியில் விபத்து நடந்திருந்தால் மட்டுமே இழப்பீடு பெற முடியும். மேலும், வீட்டுக்குப் பயன்படுத்தப்படும் சிலிண்டரை வணிக ரீதியாகப் பயன்படுத்தி இருக்கக்கூடாது.விபத்து நிகழ்ந்தால் வாடிக்கையாளர்கள் உடனடியாக விநியோகஸ்தருக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும். பின்னர், சம்பந்தப்பட்ட எண்ணெய் நிறுவனத்துக்கு விபத்து குறித்து விநியோகஸ்தர் தகவல் தெரிவிப்பார். அதைத் தொடர்ந்து, காப்பீட்டு நிறுவனத்தின் மதிப்பீட்டாளர் சம்பவம் நடந்த இடத்துக்குச் சென்று விபத்துக்கான காரணத்தை ஆய்வு செய்வார்.பின்னர், காப்பீட்டு நிறுவனம் சேத விவரங்களை மதிப்பிட்டு, இழப்பீட்டுத் தொகையை எண்ணெய் நிறுவனங்கள் வழியாக பாதிக்கப்பட்டோருக்கு வழங்கும்.
 

என்னென்னஆவணங்கள்? 
விபத்தின்போது காயங்கள் ஏற்பட்டால் மருத்துவச் செலவுகளுக்கான கட்டண ரசீதுகள், மருத்துவரின் மருந்து பரிந்துரைச் சீட்டுக்கள் உள்ளிட்ட அசல் மருத்துவ ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். இறப்பு ஏற்பட்டால் உயிரிழந்தவரின் இறப்புச் சான்றிதழ், பிரேதப் பரிசோதனை அறிக்கை ஆகியவற்றின் அசலை சமர்ப்பிக்க வேண்டும்.இதுதவிர, விபத்தின்போது வீடு, கட்டிடம் மற்றும் வாகனங்கள் ஆகியவற்றுக்கு சேதம் நேர்ந்தாலும் இழப்பீடு கோர முடியும்.
 

உடனடி நிவாரணம் 
விபத்தின்போது ஏற்படும் உயிரிழப்புக்கு அதிகபட்சம் ஒருவருக்கு ரூ.6 லட்சம்வரை இழப்பீடு வழங்கப்படும். மருத்துவச் செலவாக ஒரு நபருக்கு அதிகபட்சம் ரூ.2 லட்சம் வழங்கப்படும். அதில், உடனடி நிவாரணமாக அதிகபட்சம் ரூ.25 ஆயிரம் வழங்கப்படும்.சொத்துக்கள் சேதத்துக்கு அதிகபட்சம் ரூ.2 லட்சம் இழப்பீடு பெறலாம். அந்தவகையில், கடந்த 3 ஆண்டுகளில் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் சென்னை மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் ஏற்பட்ட விபத்துகளில் பாதிக்கப்பட்ட 25 பேருக்கு மொத்தம் ரூ.35 லட்சம் இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக