செவ்வாய், 1 ஆகஸ்ட், 2017

ஆக.31க்குள் ஆதார் எண் இணைக்கப்படாத பான் கார்டுகள் ரத்தாகும்... வருகிறது அடுத்த செக்!

குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் ஆதார் எண்ணை பான் எண்ணுடன் இணைக்காதவர்களின் பான் அட்டைகள் ரத்து செய்யப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க காலக்கெடு ஆகஸ்ட் 31வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மத்திய வருவாய் செயலாளர் ஹஷ்முக் ஆதியா இந்தத் தகவலைக் கூறியுள்ளார். தனி நபர்கள் வைத்திருக்கும் நிரந்தர வருமான வரி கணக்கு எண் என்று சொல்லப்படும் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம். அப்படி ஆதார் எண் இணைக்கப்படாத பான் அட்டைகள் ரத்து செய்யப்படும். ஆதார் எண்ணை இணைப்பதற்கான கலாக்கெடு விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில் மத்திய நேரடி வரிகள் வாரியம் ஆதார் எண்ணை பான் அட்டையுடன் இணைப்பதற்கான காலக்கெடுவை ஆகஸ்ட் 31 வரை நீட்டித்துள்ளது. குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் பான் அட்டை வைத்திருப்பவர்கள் தங்களது ஆதார் எண்ணை பான் எண்ணுடன் இணைக்க வேண்டியது கட்டாயமாகும்.

2017 - 18 நிதிக் கொள்கையில் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்கள் தங்களது ஆதார் எண்ணை கட்டாயம் தெரிவிக்க வேண்டும் என்று சட்டத்திருத்தம் கொண்டு வந்திருந்தார். இதே போன்று ஆதார் எண்ணை கட்டாயம் பான் அட்டையுடன் இணைக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

ஒரு நபரே பல பான் கார்டுகளை வைத்து வருமான வரி கணக்கு தாக்கல் செய்து வரி ஏய்ப்பு செய்கிறார்களா என்பதை கண்காணிப்பதற்காக இந்த திருத்தம் கொண்டு வரப்பட்டது.
உச்சநீதிமன்றம் அண்மையில் அளித்த உத்தரவில் வருமான வரி கணக்கு தாக்கலுக்கு ஆதார் கட்டாயமில்லை என்று கூறியிருந்தது. எனினும் இதை செயல்படுத்துவதற்கு சில நிபந்தனைகளையும் விதித்திருந்தது.

நாட்டிலுள்ள 2 கோடி வரி செலுத்துவோர் ஆதார் எண்ணை பான் அட்டையுடன் இணைத்துள்ளனர். ஏறத்தாழ 25 கோடி பேரிடம் பான் அட்டைகள் உள்ளன, மொத்தம் 111 கோடி மக்களுக்கு ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக