செவ்வாய், 8 ஆகஸ்ட், 2017

சொந்த வீடு, A/C, ஃபிரிட்ஜ், கார் இருக்கா? - மத்திய அரசு விரைவில் பகீர் அறிவிப்பு!!

4 அறைகள் கொண்ட சொந்த வீடு ஏ.சி. பிரிட்ஜ், வாஷிங்மெஷின், சொந்தமாக,டூவீலர்,  கார் வைத்து இருப்பவர்கள் மத்திய அரசின் நலத் திட்ட உதவிகள் வழங்கத் தேவையில்லை என்று மத்திய அரசுக்கு விவேக் தேவ்ராயின் தலைமையிலான சமூக பொருளாதார ஆய்வறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இதன்படி நகர்புறங்களில் இருக்கும் ஒவ்வொரு 10 வீடுகளில் 6 வீடுகளைச் சேர்ந்தவர்கள் மட்டுமே மத்திய அரசின் சமூக நலத்திட்ட உதவிகளைப் பெற தகுதியானவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 எச்.ஆர். ஹசிம் தலைமையில் அமைக்கப்பட்ட குழு, நகர்புற ஏழைகள் குறித்து ஆய்வறிக்கையை கடந்த 2012ம் ஆண்டு,டிசம்பரில் தாக்கல் செய்தது. இதில் நகர்புறங்களில் உள்ள 41 சதவீத மக்களே மத்திய அரசின் சமூக நலத்திட்ட உதவிகளைப் பெற தகுதியானவர்கள் என அறிக்கை அளித்தது. ஆனால், அந்த அறிக்கையை மத்திய அரசு ஏற்றுக்கொள்ளவில்லை.
இதையடுத்து, விவேக் தேவ்ராய் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அந்த குழு சமூக பொருளாதார ஆய்வறிக்கையை சமீபத்தில் அரசிடம் தாக்கல் செய்தது. இதில் நகர்புறங்களில் வசிப்பவர்களில் 59 சதவீதம் பேர் அரசின் நலத்திட்ட உதவிகளைப்பெறதகுதியானவர்கள். நகர்புறங்களில் உள்ள 10 வீடுகளில் 6 வீடுகளைச் சேர்ந்தவர்களுக்கு நலத் திட்ட உதவிகள் பெறும் தகுதி இருக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில், நகர்புறங்களில் வாழும் மக்களில் 4 அறைகள் கொண்டவீட்டை சொந்தமாக வைத்து இருப்பவர்கள், நான்கு சக்கர வாகனங்கள் வைத்து இருப்பவர்கள், ஏ.சி., பிரிட்ஜ், வாஷிங்மெஷின், இரு சக்கரவாகனம் ஆகியவை வைத்து இருப்பவர்கள் மத்திய அரசின் சமூக நிலத்திட்ட உதவிகளுக்குள் கொண்டு வர வேண்டியதில்லை என பரிந்துரைத்துள்ளது.

மேலும், யாருக்கெல்லாம் சமூக நலத்திட்ட உதவிகள் வழங்கலாம், அந்த தகுதியுடைய பிரிவினர் குறித்தும் பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் குடியிருக்கும் பகுதி, தொழில், சமூகத்தில் அவர்கள் நிலை ஆகியவற்றை அடிப்படையாக வைத்து பயனாளிகள் பகுக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி, சொந்தமாக வீடு இல்லாதவர்கள், குடிசையில் வசிப்போர், வருமானம் இல்லாதவர்கள், வீட்டில் சம்பாதிக்கும் வகையில் ஆண்கள் இல்லாதவர்கள் ஆகியோர் நலத்திட்ட உதவிகளைப் பெறத் தகுதியானவர்கள். மற்ற வீடுகள் நலத்திட்ட உதவிளைப் பெறத் தகுதியானவர்களா என்பது குறித்து ஆய்வு செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக