சனி, 12 ஆகஸ்ட், 2017

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகைக்கு அனுமதி.

ஓய்வூதியம் கோரி விண்ணப்பித்துள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு, விரைவில் உதவித்தொகை வழங்கும் வகையில், ஆணை வெளியிட, அரசு முடிவு செய்துள்ளது.

தலைமை செயலகத்தில், சமூகநலத் துறை அமைச்சர் சரோஜா தலைமையில், நேற்று முன்தினம், மாற்றுத்திறனுடையோர் சங்கங்களின் கூட்டு இயக்கம் அளித்த கோரிக்கைகள் குறித்த, ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் விபரம்:
 மாதாந்திர உதவித்தொகையை பெற விரும்பும் பயனாளிகளுக்கு, ஏ.டி.எம்., கார்டு வழங்கப்படும். தனியாக, வங்கிக் கணக்கு துவங்க வலியுறுத்தப்படாது
 பல்வேறு மாவட்டங்களில், ஓய்வூதியம் கோரி, 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பித்து உள்ளனர். அவர்களுக்கு, விரைவில் உதவித்தொகை அனுமதித்து, ஆணை வழங்கப்படும்
 மாதாந்திர ஓய்வூதிய முன்வரிசைப் பட்டியலை, அனைவரும் பார்க்கும் வகையில், ஆன்லைனில் வெளியிடப்படும்
 தற்போது, வருவாய் துறையில் உள்ள, உதவித்தொகை அனுமதிக்கும் நடைமுறை எளிதாக்கப்படும்
 அனைத்து மாவட்டங்களிலும், வட்டார அளவில், முகாம்கள் நடத்தி, மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்க, நடவடிக்கை எடுக்கப்படும்
 அனைத்து மாவட்டங்களிலும், ஒருங்கிணைப்புக் குழு கூட்டம், மாதந்தோறும் நடத்தப்படும். 40 - 75 சதவீதத்திற்கு மேல், பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு, பராமரிப்பு உதவித்தொகை வழங்குவது குறித்து, முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்
 மாதாந்திர உதவித்தொகை பெற, வருமான உச்ச வரம்பாக, ஐந்து லட்சம் ரூபாய் நிர்ணயிக்கவும், 18 வயதிற்கு கீழ் உள்ள, தகுதியான மாற்றுத்திறனாளிகளுக்கு, உதவித்தொகை வழங்குவது குறித்தும் முடிவு செய்யப்படும்.
இவ்வாறு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக