சனி, 18 மார்ச், 2017

#இலக்கியத்தேன்துளி002#

வான்குருவியின் கூடு , வல்லரக்கு ,தொல்கரையான்,
தேன்சிலம்பி யாவர்க்கும் செய்யஅரிதால் -  யாம்பெரிதும்
வல்லோமே என்று வலிமைசொல வேண்டாங்காண்
எல்லார்க்கும் ஒவ்வொன்று எளிது .

                                                            - ஔவையாரின் தனிப்பாடல் .

தூக்கணாங்குருவியின் கூடு - அது தொங்கும் அதியசம்... உயர்ந்த
மரக்கிளையில்- முள்மரத்தில் -எளிதில் யாரும் எட்டமுடியா இடத்தில் தான் அது கூடுகட்டும்.. குஞ்சுகளுக்கு தனியறை... ஈரகளிமண்ணை உள்ளே வைத்து அதில் மின்மினிகளை ஒட்டி வைத்து இரவில் வெளிச்சத்திற்கு செய்யப்பட்ட ஏற்பாடு... அப்பப்பா எவ்வளவு அறிவு...

அரக்குப்பூச்சி தருகின்ற அரக்கு...

அற்ப கரையான் கட்டுகின்ற அற்புதமான புற்று...

தேனி கட்டுகின்ற ஒழுங்கு அறுங்கோண வடிவ அறைகளால் ஆன தேன்கூடு...

கட்டிய வலையிலே வசித்துக் கொண்டு அங்கிருந்தபடியே தனக்கு தேவையான உணவை சாமர்த்தியமாக பெறுகின்ற சிலந்திப்பூச்சி ...

இவற்றின் திறமைகள் எல்லாராலும் செய்ய இயலாது.. ஆறறிவு பெற்றுள்ளோம் என்று பெருமைபேசும் மனிதனால் மேற்கண்ட உயிரினங்கள் பெற்றுள்ள எந்த திறனையும் ஒருநாளும் பெற இயலாது...

இம்மண்ணில் பிறந்த அனைத்து உயிரினங்களும் தத்தமக்கே உரிய தனித்துவமான சிறப்புகளுடன் வாழ்கின்றன... அதனால் ஒருவர் தான் பெற்றுள்ள திறமை அடுத்தவரிடம் இல்லையே என்று ஏளனம் செய்வதோ... என்னிடம் உள்ள ஆற்றலைப் பார்த்தீரா என்று தற்பெருமை கொண்டு தருக்கித் திரிவதோ ஒருபோதும் செய்தல் கூடாது...

எல்லோரிடமும் ஏதோ ஒரு தனித்திறன் உண்டு... அத்துடன் வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக