தமிழகத்தில், 2016, அக்., 20க்கு முன் உருவான அங்கீகாரமில்லா மனைகளை, ஆறு மாத காலத்திற்குள் வரன்முறை செய்யும், அரசின் புதிய திட்டம் இறுதி வடிவம் பெற்றுள்ளது.
தமிழகத்தில் அங்கீகாரமில்லா மனைகள் விற்பனை பதிவுக்கு விதிக்கப்பட்ட தடையில் சில பகுதிகள் தளர்த்தப்பட்டுள்ளன. இதன் பின்னணியில், அங்கீகாரமில்லா மனைகளை வரன்முறை செய்யும் திட்டத்தை, தமிழக அரசு இறுதி செய்து உள்ளது. இதன்படி, பதிவு சட்டத்தில், 22 - ஏ பிரிவு திருத்தத்தை அமல்படுத்த அரசாணை பிறப்பிக்கப்பட்ட, 2016 அக்., 20ஐ, தகுதி நாளாக கொண்டு, வரன்முறை திட்டம் செயல்படுத்தப்படும். இந்த தேதிக்கு முன் உருவான அங்கீகாரமில்லா மனைகள், தகுதி அடிப்படையில் வரன்முறை செய்யப்படும்.
இது குறித்து, நகரமைப்புத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
●அரசாணை பிறப்பிக்கப்பட்ட நாளில் இருந்து, ஆறு மாதத்திற்குள் மனை உரிமையாளர்கள், ஆன்லைன் முறையில், விண்ணப்பிக்க வேண்டும்
●மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகங்களே வரன்முறை செய்யும் வகையில், விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன
●சென்னையில், சி.எம்.டி.ஏ., உறுப்பினர் செயலரும், பிற பகுதிகளில் நகரமைப்புத்துறை இயக்குனரும், வரன்முறை பணிகளை மேற்பார்வையிடுவர்
●பரிசீலனை கட்டணம் மனைக்கு, 500 ரூபாய்; வரன்முறை கட்டணம் மாநகராட்சிகளில், ஒரு சதுர மீட்டருக்கு, 110 ரூபாய், நகராட்சிகளில், 65 ரூபாய், பேரூராட்சி, ஊராட்சிகளில், 40 ரூபாய் என, நிர்ணயிக்கப்பட்டுள்ளது
●வளர்ச்சி கட்டணம், மாநகராட்சிகளில் ஒரு சதுர மீட்டருக்கு, 700 ரூபாய், நகராட்சிகளில், 400 - 500 ரூபாய், பேரூராட்சி, ஊராட்சிகளில், 250 ரூபாய்.
● ஓ.எஸ்.ஆர்., எனப்படும், திறந்தவெளி இடம் ஒதுக்காத மனைகளுக்கான கட்டணம், மொத்த பரப்பளவில், 10 சதவீத அளவுக்கு, பதிவுத்துறையின் வழிகாட்டி மதிப்பு அடிப்படையில், கட்டணம் செலுத்த வேண்டும்
● இதில், 2012 மார்ச், 31க்கு முன் பதிவு செய்யப்பட்ட மனைகளுக்கு, 2007 ஆக., 1ல் அமலுக்கு வந்த வழிகாட்டி மதிப்பும், அதற்கு பிந்தைய மனைகளுக்கு, தற்போது நடைமுறையில் இருக்கும் வழிகாட்டி மதிப்பும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
●விண்ணப்பங்களை ஆய்வு செய்வது, மனைகளின் தகுதியை கள ஆய்வு செய்வது என, வரன்முறை பணிக்கும், வழிகாட்டி விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. அரசின் இறுதி ஒப்புதல் கிடைத்தவுடன் இந்த விதிமுறைகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக