போலி பதிவுகள் மற்றும் மோசடியை தடுக்கும் வகையில் வரும் அக்டோபர் முதல் டிரைவிங் லைசென்சு எடுப்பதற்கு ஆதார் கார்டு அவசியம் என்று மத்திய அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
மத்திய, மாநில அரசுக்களின் பல்வேறு வகையான நலதிட்டங்களை பெறுவதற்கு ஆதார் கார்டு கட்டாயம் ஆக்கப்பட்டு வருகிறது. இவ்வரிசையில் புதிதாக ஓட்டுநர் உரிமம் (டிரைவிங் லைசென்ஸ்) பெறுவதற்கும் தற்போது ஆதார் எண் அவசியமாக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
இருசக்கர மற்றும நான்கு சக்கர, கனரக வாகனங்கள் ஓட்டுவதற்கான லைசென்சு பெறும் முறையில் மாற்றம் கொண்டு வர மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் முடிவு செய்துள்ளது. அதன்படி புதிய டிரைவிங் லைசென்சு மட்டுமின்றி ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள லைசென்சுகளை புதுப்பிப்பதற்கும் ஆதார் அட்டை அவசியமாகிறது.
இதன்மூலம் போலி லைசென்சு பயன்படுத்துவதை தடுப்பது மட்டுமின்றி போக்குவரத்து குற்றங்களையும் தடுக்க முடியும். போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனங்களை ஓட்டுவோர் மீது எளிதாக நடவடிக்கை எடுக்க இது உதவும்.
நாடு முழுவதும் அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களிலும் ஆதார் எண் இணைக்கப்பட்டால் போக்குவரத்து குற்றங்களில் ஈடுபடும் ஒரு வாகனமானது எந்த மாநில வாகனமாக இருந்தாலும் இதனை எளிதில் கண்டுபிடிக்க முடியும்.
அத்துடன் ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறுவிதமான லைசென்சு முறைகள் பின்பற்றப்படுகின்றன. இதில் உள்ள குறைகளை களைய ஆதார் எண் அவசியமாக்கப்படுகிறது. இதன் மூலம் நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் ஒரே சீரான முறையில் டிரைவிங் லைசென்ஸ் வழங்க முடியும்.
மேலும் ஒருவரே ஒன்றுக்கும் மேற்பட்ட டிரைவிங் லைசென்சு பெற்று மோசடியில் ஈடுபடுவதை தடுக்கவும், இத்திட்டம் பயன் உள்ளதாக இருக்கும் இத்திட்டம் அக்டோபர் மாதம் அமலுக்கு வரும்
இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக