புதன், 22 மார்ச், 2017

மாரடைப்புக்கு இவன் எமன்.

மாரடைப்பு பல ரகம். படபடப்பு, மூச்சு திணறல், கொட்டும் வியர்வை, நெஞ்சு வலி, நகரும் கை வலி சில அறிகுறிகள்.

எந்த அறிகுறியும் இல்லாமல் தாக்கும் மாரடைப்பும் உண்டு. யாராலும் கண்டுபிடிக்க முடியாது. திடீரென நெஞ்சு அடைக்கும். சுருண்டு விழுவார்கள். இதயம் நின்றுவிடும். உயிர் பிரிந்து விடும்.

சைலன்ட் அட்டாக் என்பார்கள். டாக்டர்களாலும் கண்டுபிடிக்க முடியாது. ஏகப்பட்ட டெஸ்ட் எடுக்க சொல்வார்கள். எதிலாவது அறிகுறி தெரிந்தால் சொல்வார்கள்.

எந்த சோதனையும் செய்யாமல் சைலன்ட் அட்டாக் வரப்போவதை முன்கூட்டியே கண்டு பிடிக்க வழி தெரிந்துவிட்டது இப்போது. வழிகாட்டி பெரிய விஞ்ஞானியோ நோபல் விருது பெற்றவரோ இல்லை.

நமது ஓசூர் சிறுவன் ஆகாஷ் மனோஜ். பத்தாம் வகுப்பு மாணவன். உலகம் பூராவும் நாளை அவன் படத்தோடு செய்தி வரப் போகிறது. நமது டாக்டர் வாசகர்களுக்கு இன்றே. இப்போதே.

“எங்க தாத்தா ரொம்ப ஆரோக்யமா இருந்தார். அவருக்கு டயபெடிஸ், பிளட் பிரஷர் இருந்தது. ஆனா ரொம்ப கன்ட்ரோல்ல வச்சிருந்தார். திடீர்னு ஒருநாள் பேசிட்டு இருந்தப்ப அப்படியே சுருண்டு விழுந்து செத்து போனார். நிமிஷத்துல எல்லாம் முடிஞ்சுருச்சு. சைலன்ட் ஹார்ட் அட்டாக்னு டாக்டர்கள் சொன்னாங்க.

“அது என்னானு படிக்க ஆரமிச்சேன். பெங்களூர்ல உள்ள இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ்ல இருக்கிற லைப்ரரிக்கு போய் இதயம் சம்மந்தமான எல்லா மேட்டரையும் படிக்க ஆரமிச்சேன். வெளிநாட்டு பத்திரிகைகள், புத்தகங்கள் எல்லாம் அங்க வரும். எல்லாத்தையும் படிச்சேன். இப்ப எனக்கு 15 வயசு. ஆனா டாக்டர்களுக்கு ஹார்ட் பத்தி கிளாஸ் எடுக்கிற அளவுக்கு பேச முடியும்.

“ரத்தத்துல இருக்கிற FABP3 அப்டீங்ற ஒரு ப்ரோட்டீன் அதிகமாகும்போது சைலன்ட் அட்டாக் வருதுனு தெரிஞ்சுது. அது ஒரு நெகடிவ் புரதம். அதனால, பாசிடிவ் புரதம் மூலமா அதை ஈர்க்க முடியும். அதாவது பக்கத்துல இழுத்து அடையாளம் காண முடியும். மணிக்கட்டு அல்லது காதுக்கு பின்னால ஒட்டிக்கிற மாதிரி சின்ன ஸ்டிக்கர் மாதிரி ஒரு சிலிக்கான் பேச் தயாரிச்சேன்.

”அதை ஒட்டிகிட்ட உடனே அதுல இருந்து பாசிடிவ் எலக்ட்ரிக் இம்பல்ஸ் உற்பத்தியாகி ரத்த நாளங்கள ஊடுருவும். அங்க நெகடிவ் புரதம், அதாவது  FABP3 இருந்தா உடனே பேச் அதை இழுக்கும். அது எந்த அளவு இருக்குனு பேச் காட்டிக் கொடுக்கும். அதிகமா இருந்தா அந்த நபருக்கு சைலன்ட் அட்டாக் வரப் போகுதுனு அர்த்தம். உடனே டாக்டரை பாக்கணும்” என்று விவரிக்கிறான் மனோஜ்.

பிளாஸ்திரி மாதிரி இருக்கும் இந்த கருவிக்கு தன் பெயரில் காப்புரிமை கேட்டு மனு கொடுத்திருக்கிறான் ஆகாஷ் மனோஜ்.

பன்னாட்டு மருந்து கம்பெனிகள் எத்தனை கோடி வேண்டுமானாலும் கொட்டிக் கொடுத்து இதன் உற்பத்தி உரிமையை வாங்க தயாராக இருக்கும் நிலையில், மனோஜ் ஐடியா வேறு மாதிரி இருக்கிறது.

“எனக்கு பணம் பெருசுல்ல. என் தாத்தா மாதிரி இனிமே யாரும் சலன் ட் ஹார்ட் அட்டாக் வந்து சாகக் கூடாது. அதனால மத்திய அரசு மூலமா  மலிவான விலையில் இத உற்பத்தி செஞ்சு எல்லாருக்கும் கிடைக்க செய்யணும்னு ஆசை” என்கிறான்.

பூர்வாங்க சோதனைகள் முடிந்து மனிதர்களிடம் சோதிக்கும் கட்டத்தை மனோஜின் சிலிக்கான் பேச் எட்டியிருக்கிறது. ஜனாதிபதி பிரணாப் இளம் கண்டுபிடிப்பாளர் விருதும் பாராட்டு பத்திரமும் அளித்திருக்கிறார். +2 முடித்ததும் அவன் விரும்பிய கார்டியாலஜி துறையில் சேர்த்துக் கொள்ள டெல்லி எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி தயாராக இருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக