வெள்ளி, 17 மார்ச், 2017

🌺🌺🌺 மன அமைதிக்கு மார்கஸ் அரேலியஸ் .

🎯அரசாள்பவர்கள் தத்துவஞானிகளாக இருப்பது மிக மிக அபூர்வம். அப்படி வரலாறு பதிவு செய்திருக்கும் நபர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அதிலும் சக்கரவர்த்தியாக ஒரு சாம்ராஜ்ஜியத்தையே ஆண்டவர் என்றால் இரண்டாம் நூற்றாண்டில் (26-4-121 முதல் 17-3-180) வாழ்ந்த ரோமானிய சக்கரவர்த்தியான மார்கஸ் அரேலியஸைத் தவிர வேறு யாரும் பெரிய அரச பதவியுடன் தத்துவ ஞானியாகவும் பிரகாசித்ததில்லை.

🎯ஹெராடியன் (Herodian) என்ற வரலாற்றாசிரியன் கூறுகிறான். “தான் ஒரு ஞானி என்பதை வார்த்தைகளாலும், அறிவுரையாலும் தெரிவித்தது மட்டுமல்லாமல் பண்புகளாலும், வாழ்ந்த முறையாலும் உணர்த்திய மார்கஸ் அரேலியஸ் வரலாறு கண்ட சக்கரவர்த்திகளில் தனித் தன்மை வாய்ந்தவரே”


🎯அகண்ட சாம்ராஜ்ஜியத்தை ஆள்வது எந்தக் காலத்திலும் சுலபமாகவோ, மன நிம்மதிக்குத் தகுந்ததாகவோ இருந்ததில்லை. ரோமானிய சாம்ராஜ்ஜியமும் அதற்கு விதிவிலக்கல்ல. மார்கஸ் அரேலியஸ் நிர்வாகத்தை நடத்த அடுத்தவர்களை விட்டு விடவில்லை. போர் புரிய தளபதிகளை அனுப்பி விட்டு தத்துவ ஞானத்தில் ஆழ்ந்து விடவில்லை. ஆட்சி புரிவதிலும், போர் புரிவதிலும் அவர் நேரடியாகப் பங்கு வகித்தவர். அவருடைய ஒரே மகன் பண்புகளில் அவருக்கு ஏற்ற மகனாக இருக்கவில்லை. ஆட்சி, நிர்வாகம், போர், குடும்பப் பிரச்னைகள் – இத்தனைக்கும் நடுவில் அவர் தனக்கு அறிவுரையாக தானே சொல்லிக் கொண்டவை இன்றும் தத்துவஞானத்தில் தலைசிறந்த நூலாக கருதப்படுகிறது.

🎯மன அமைதிக்கான அறிவுரையாகவும், ஆட்சி நலன், ஆன்மீகம் குறித்த உயர் கருத்துகளைக் கொண்டதாகவும் “எனக்கு (To Myself)” என்ற தலைப்பில் ஆழ்ந்த சிந்தனையுடன் கூறிக்கொண்ட அந்த அறிவுரைகள் அவர் காலத்திற்குப் பின் “தியானங்கள் (Meditations)” என்ற பெயர் மாற்றத்துடன் பிரபலமாக ஆரம்பித்தது. மகா ப்ரெடெரிக் (Frederick the Great) போன்ற மாமன்னர்கள், கதே (Goethe) போன்ற தத்துவ ஞானிகள், மற்றும் பல்வேறு அறிஞர்கள் முதல் பாமரர்கள் வரை பலருக்கும் அறிவு விளக்காக விளங்கிய அந்த நூலில் மன அமைதிக்கு மகத்தான அறிவுரைகள் கூறப்பட்டுள்ளன. அவற்றில் மிக முக்கியமான அறிவுரைகளை இனி பார்ப்போம்.

🎯வாழ்க்கை முறையில் ஒழுங்கும் அமைதியும் இருந்தால் தானாக மன அமைதி கிடைத்து விடும் என்பது மார்கஸ் அரேலியஸின் முக்கியமான சிந்தனையாக இருந்தது. அவர் கூறுகிறார்:

🎯எல்லா காரியங்களும், எண்ணங்களும் ஒரு தர்மத்திற்குள் அடங்கி நிற்கும்படி செய்து கொள்வாயாக! அதுவே அமைதிக்கு வழி.

🎯மனமொவ்வாத செயலைச் செய்யாதே. சமூக நன்மைக்கு மாறுபாடாகவாவது விவேகக் குறைவாகவாவது மனப் புகைச்சலுடன் நடந்து கொள்ள வேண்டாம். பேச்சுத் திறமையால் உண்மையை மறைக்க வேண்டாம். வீண் பேச்சு பேச வேண்டாம். பிறர் காரியத்தில் பயனின்றி தலையிட வேண்டாம். உனக்குள் உள்ள பரம்பொருளைக் கௌரவிப்பாயாக. எந்த நிமிடமும் உலகத்தை விட்டுப் பிரிய தயாராக இரு. சாட்சியாவது உத்தரவாவது வேண்டப்படாத சத்தியவானாக இரு. உள்ளத்தில் சாந்தத்தை வளர்த்துக் கொள்.

🎯நமது கட்டுப்பாட்டில் இல்லாத விஷயங்கள் குறித்தும் நம்மால் மாற்ற முடியாத விஷயங்கள் குறித்தும் கவலை கொள்வது சிறிதும் அறிவுடைமை அல்ல என்பதையும் அவற்றை ஏற்றுக் கொள்வது மிக அவசியம் என்றும் அவர் சில இடங்களில் அழகாகக் கூறுகிறார்:

🎯விதியால் வந்த சுகமும் விலக்க முடியாத துக்கமும் உலகத்தை நடத்தும் தெய்வம் கொடுத்த வரப்பிரசாதமென்று வணக்கத்துடன் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

🎯எது நேர்ந்தாலும் “இது ஆண்டவன் செயல். இது நெய்யும் வஸ்திரத்தில் ஊடும் பாவு போல உலக வாழ்வின் இயல்பில் நெய்யப்பட்ட ஒரு சம்பவம். இதை நான் ஏன் துக்கமாக பாவிக்க வேண்டும்?’ என்று கேட்டுக் கொள்.

🎯நமக்கு முன்பும் பின்பும் கணக்கிட முடியாத காலம் இருக்கையில் நீர்க்குமிழி போன்ற இந்த நிலையில்லாத குறுகிய வாழ்க்கைக்கு மிக அதிக முக்கியத்துவம் கொடுத்து கவலை கொள்வது அர்த்தமில்லை என்கிறார் மார்கஸ் அரேலியஸ்.

🎯உலகில் எவ்வளவு விரைவில் எல்லாம் அழிந்து விடும் பார். கழிந்து போன யுகங்கள் கணக்கற்றவை. வருங்காலமும் அளவற்றது. இதற்கிடையில் புகழ் என்றால் என்ன? உன் புகழ் ஒரு சிறு குமிழி போன்ற பொருளில்லாத ஆரவாரமே அல்லவா?

🎯முந்தியும் பிந்தியும் ஆதியந்தமற்ற அகண்ட கால அளவுகள் இருக்க மத்தியில் வரும் இந்த அற்பங்களைப் பொருட்படுத்துவது என்ன அறியாமை!

🎯எதைப் பற்றியாவது மிகக் கவலை கொண்டவர்களையும் பெரிய புகழ் பெற்றவர்களையும் நினைத்துப் பார். அவர்கள் எல்லோரும் இப்போது எங்கே? அவர்களது பெருமையும் பகைமையும் இப்போது எங்கே? புகையும் சாம்பலுமாகிப் போன கதை தான். அக்கதையைக் கூட ஒரு சிலர் தான் சொல்கிறார்கள். அது கூட விரைவில் மறக்கப்பட்டு விடும்.

🎯அடுத்தவர்களால் மன நிம்மதியை இழப்பது நம் வாழ்வில் அதிகம் நடக்கிறது. இன்னும் சொல்லப் போனால் நம் மன நிம்மதியின்மைக்குக் காரணமே அடுத்தவர்கள் தான் என்று நம்பும் அளவில் பெரும்பாலோர் இருக்கிறோம். அப்படிப்பட்டோருக்கு அருமையாக மார்கஸ் அரேலியஸ் சொல்கிறார்.

🎯எவனாவது ஒருவன் வெட்கமின்றி நடந்து கொண்டு அதற்காக நீ கோபம் கொண்டாயானால் உடனே உலகில் வெட்கமின்றி நடப்பாரே இல்லாதிருக்க முடியுமா? என்று கேட்டுக் கொள். இல்லை எனில் ஏன் கவலைப்படுகிறாய்?

🎯அறியாதவன் அறியாதவனைப் போலத் தானே நடப்பான். இதில் என்ன அதிசயம். அதனை எதிர்பாராதது உன் பிழையே.

🎯வெள்ளரிக்காய் கசக்கிறதா தூர எறிந்து விடு. வழியில் முள்ளா விலகிப் போ. அதை விட்டு விட்டு வெள்ளரிக்காய் ஏன் கசக்கிறது, முள் ஏன் தோன்றியது என்ற ஆராய்ச்சியில் இறங்குவது அறிவீனம்.

🎯எல்லாம் எண்ணங்களே என்பதால் எண்ணங்களை சரி செய்தால் எல்லாமே சரியாகி விடும், அமைதி கிடைக்கும் என்று கூறுகிறார் மார்கஸ் அரேலியஸ்:

🎯ஒரு துன்பம் நேரிடின் அதைப் பற்றி எண்ணுவதை விடு. எண்ணுவதை விட்டால் துன்பம் நேரிட்ட நினைவு போகும். அந்த நினைவு நீங்கிய பின் துன்பம் எங்கே?

🎯இன்பமும் துன்பமும் உள்ளத்தின் ஆதினமே; உள்ளத்தின் எண்ணங்களே அவைகளுக்குக் காரணம் என்ற உண்மையை அறிந்து நடந்தாயானால் கடவுளைக் குறை கூறவோ, மனிதர்களை வெறுக்கவோ மாட்டாய்.

🎯மொத்தத்தில் இயற்கையாகவும் எளிமையாகவும் வாழ முற்படுவது மனிதன் மன நிம்மதியாக இருக்க மிகவும் உதவும் என்கிறார். எனவே இயற்கையிலிருந்து பாடங்களைக் கற்றுக் கொள்ளுமாறு கூறுகிறார்:

🎯மரத்தில் உண்டாகிக் கீழே விழுந்து போகும் பழத்தைப் பார். தன் வாழ்க்கையை எவ்வளவு சந்தோஷமாகவும் லகுவாகவும் நடத்தி மரத்திலிருந்து நழுவி தான் பிறந்த மண்ணில் மறுபடி அடங்கிப் போகிறது. அதைப் பின்பற்றுவாயாக!

🎯இது போன்ற இதயத்தை அமைதிப்படுத்தும் எத்தனையோ எண்ணங்களையும், அதற்கான வழிமுறைகளையும் அவர் தன் தியானங்கள் நூலில் கூறியுள்ளார். மன அமைதி இழந்து தவிக்கும் மனிதர்கள் அவர் நூலை அடிக்கடி படிப்பதும், உணர்வதும், கடைபிடிப்பதும் இழந்த அமைதியை திரும்பப் பெற கண்டிப்பாக உதவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக