திங்கள், 7 ஆகஸ்ட், 2017

ஆசிரியர்கள்- அரசு ஊழியர்கள் 22-ந்தேதி வேலைநிறுத்தம் என்று அறிவிப்பு.

புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர வேண்டும், 8-வது ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்த வேண்டும், அதுவரை இடைக்கால நிவாரணமாக 20 சதவீதம் வழங்க வேண்டும், சிறப்பு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆசிரியர்கள் சங்க கூட்டு நடவடிக்கைக்குழு (ஜாக்டோ) மற்றும் அரசு ஊழியர்கள் சங்கம் (ஜியோ) சார்பில் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் பெ.இளங்கோவன், ஜெ.கணேசன் ஆகியோர் நிருபர்களுக்கு 

அளித்த பேட்டியில் கூறியதாவது:-

அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் கோரிக்கைகளின் மீது பாராமுகமாக இருந்தால் கடுமையான போராட்டங்களுக்கு தயாராக வேண்டிய நிலை உருவாகும். ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு நிர்வாகிகளை அழைத்து பேசி கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு உரிய நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும். இல்லையென்றால் ஏற்கனவே எடுத்த தீர்மானங்கள் அடிப்படையில் வருகிற 22-ந்தேதி ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் நடத்தப்படும்.

அன்றையதினம் பள்ளி-கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் மூடப்படும். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் யாரும் வேலைக்கு செல்ல மாட்டார்கள். இதன்பின்னரும் அரசு கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வரவில்லை என்றால் செப்டம்பர் மாதம் 7-ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோம். அதில் இருந்து யாரும் பின்வாங்கமாட்டோம்.

இந்த போராட்டத்துக்கான ஆயத்த மாநாடுகளை மாவட்ட தலைநகரங்களில் வருகிற 26 மற்றும் 27-ந்தேதி நடத்த உள்ளோம்.  இவ்வாறு அவர்கள் கூறினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக