செவ்வாய், 5 டிசம்பர், 2017

1,100 ஆண்டுகளுக்கு முன்னரே நதி நீர் இணைப்பை செயல்படுத்திய பாண்டிய மன்னன்!

இந்திய சாம்ராஜ்யங்களில் வேறு எந்த ராஜ்ஜியத்திற்கும் இல்லாத நெடும் வரலாறு பாண்டியர்களுக்கு இருக்கிறது. இவர்கள் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கினர் என வரலாற்று கூற்றுகள் மூலம் அறியப்படுகிறது. அதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு தான் இந்த செயல். ஆம்! இன்று நவீன தொழில்நுட்பங்கள் இருந்தும் இந்தியாவில் நதி நீர் இணைப்பை செயல்படுத்த மத்திய அரசு தடுமாறும் நிலையில். 1,100 ஆண்டுகளுக்கு முன்னரே நதி நீர் இணைப்பை செயல்படுத்தி பஞ்சத்தை ஒழித்து நாட்டை செழிப்படைய செய்துள்ளனர் பாண்டியர்கள்...

9ம் நூற்றாண்டு! ஏறத்தாழ 1,100 வருடங்களுக்கு முன்னர் 9ம் நூற்றாண்டிலேயே நதிநீர் இணைப்பை செயல்படுத்தியுள்ளனர் பாண்டியர்கள். இது தான் இந்தியாவிலேயே நடந்த முதல் நதிநீர் இணைப்பாக இருக்க கூடும் என்கிறார்கள் நீர் மேலாண்மை நிபுணர்கள்.

ஏன்? எதற்கு? இந்த நதி நீர் இணைப்பு ஏன் நடந்தது? எதற்காக செயற்படுத்தப்பட்டது என்பதற்கும் காரணங்கள் இருக்கின்றன. மேற்கு தொடர்ச்சி மலையின் தெற்கில் உருவாகிறது பரலை ஆறு , இதன் மற்றொரு பகுதியில் இருந்து உருவாகிறது பழையாறு.

பஞ்சம்! பழையாறு பரலை ஆற்றினை விட சிறியது ஆகும். கோடை காலங்களில் பழையாற்றில் நீர் வரத்து குறைந்து போகும் நிலை உண்டாகி நாஞ்சில் நாட்டு மக்கள் பஞ்சத்தில் அடிப்பட்டு போயினர். இதே சமயத்தில், பரலை ஆறு வற்றாத நதியாக வருடம் முழுக்க ஓடி, நதி நீர் கடலில் கலந்து வீணாகிக் கொண்டிருந்தது.

இரண்டாம் ராஜசிம்மனிடம் கோரிக்கை! நாஞ்சில் நாட்டு மக்கள், பழையாறு பஞ்சம் மற்றும் பரலை ஆற்று நீர் வீணாவதை பாண்டிய மன்னனான இரண்டாம் ராஜசிம்மனிடம் கூறி. இந்த இரு ஆறுகளை இணைத்தால் நாஞ்சில் நாட்டில் பஞ்சம் தீரும் என கோரிக்கை வைத்தனர்.
திட்டம் வகுத்த மன்னன்! மக்களின் கோரிக்கையை ஏற்ற பாண்டிய மன்னன், பழையாற்றுக்கு நடுவே இருபது அடி உயரத்தில் அணை கட்டினார். மேலும், பெரும் பாறைகளை குடைந்து இரண்டு மையில் தூரத்திற்கு கால்வாயும் அமைக்கப்பட்டது. இதனால், பரலை ஆற்று நீர் பழையாற்றுக்கு கொண்டுவரப்பட்டது.

செழித்த நாஞ்சில் நாடு! இந்த இரண்டு நதி நீர் இணைப்பிற்கு பிறகு தான் நாஞ்சில் நாடு செழிக்க துவங்கியது, விவசாயம் மேலோங்கியது மக்கள் நல்வாழ்வு பெற்றனர். மேலும் இதுப்பற்றிய குறிப்புகள் திருவிதாங்கூர் ஆவணங்களில் இருக்கின்றன.

ஆங்கிலேயர்கள் பாராட்டு! இந்த திட்டத்தை பற்றி அறிந்து ஆங்கிலேயர்களே பாண்டிய மன்னனை பாராட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. பின்வந்த பாண்டிய மன்னர்கள் பழையாற்றில் 13 தடுப்பணைகள் கட்டினர்.

வலிமை! இந்த தடுப்பணைகள் பெரும் பாறைகள் கொண்டு இணைக்கப்பட்டு, இணைப்பு பகுதியில் ஈயத்தை ஊற்றி வலிமைப்படுத்தி கட்டப்பட்டுள்ளது. ஏறத்தாழ 1,100 வருடங்களுக்கு முன்னர் இப்படி ஒரு நதிநீர் இணைப்பு சம்பவம் நடந்துள்ளது ஆச்சரியத்தை வரவைக்கிறது.
மத்திய, மாநில ஆட்சியாளர்கள்! மேலும், இப்போது சிறந்த தொழில்நுட்ப வசதிகள் இருந்தும் கூட தற்போதைய மத்திய, மாநில ஆட்சியாளர்கள் நதி நீர் இணைப்பை கிடப்பில் போட்டு வைத்துள்ளது வருத்தத்தை வரவைக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக