தேர்தல் கமிஷன், புதிய "சாப்ட்வேர்' அறிமுகம் செய்துள்ளதால், ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் வாக்காளர் பெயர் இடம்பெறும் குழப்பத்துக்கு, முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது;
திருப்பூர் மாவட்டத்தில், திருப்பூர் வடக்கு, தெற்கு, அவிநாசி, பல்லடம், காங்கயம், தாராபுரம், மடத்துக்குளம், உடுமலை என, எட்டு சட்டசபை தொகுதிகள் உள்ளன. மொத்தம், 10 லட்சத்து, 84 ஆயிரத்து, 693 ஆண்கள்; 10 லட்சத்து, 86 ஆயிரத்து, 801 பெண்கள்; 244 திருநங்கைகள் என, 21 லட்சத்து, 71 ஆயிரத்து, 738 வாக்காளர்கள் உள்ளனர்.
சுருக்க முறை திருத்த பணிக்காக, வாக்காளர் வரைவு பட்டியல், அக்.,3ல் வெளியிடப்பட்டது. தொடர்ந்து, பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்த பணி நடந்தது. மாவட்ட அளவில், 32 ஆயிரத்துக்கும் அதிகமான விண்ணப்ப படிவங்கள் பெறப்பட்டுள்ளன. பட்டியலை சீர்படுத்த ஏதுவாக, ஓட்டுச்சாவடி அலுவலர்கள் வீடு வீடாக சென்று ஆய்வு நடத்தி வருகின்றனர்.இதுவரை, மாநில அளவிலான இணையதளத்தில், வாக்காளர் பட்டியல் இணைக்கப்பட்டிருந்தது. இந்தாண்டு முதல், இந்திய தேர்தல் கமிஷனின் இணையதளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. பெயர் சேர்ப்பு மற்றும் நீக்க பணிகளை மேற்கொள்ள, பிரத்யேகமான "சாப்ட்வேர்', இந்தாண்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதுவரை, ஏற்கனவே பெயர் இடம்பெற்றுள்ள தொகுதி அல்லது பாகம் விவரம், தேர்தல் பிரிவினருக்கு தெரியவராது. புதிய "சாப்ட்வேர்' மூலமாக, படிவம்-6 விண்ணப்ப படிவ விவரத்தை, கம்ப்யூட்டரில் பதிவு செய்து, "ஆன்லைனின்' இணைத்ததும், வாக்காளர் பெயர் மற்றும் தந்தை பெயர் ஒரே மாதிரியாக உள்ள வாக்காளர் விவரம், தெரிந்து விடுகிறது.அத்துடன், ஏற்கனவே மற்றொரு தொகுதியில் பெயர் இடம் பெற்றிருந்தாலும், அந்த விவரமும் தெரிந்து விடும். இதன்மூலம், ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் பெயர் இடம்பெறும் குழப்பத்துக்கு, முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:புதிய வாக்காளர் பெயர் சேர்ப்பில், 18 முதல், 21 வயது வரையுள்ளவர் பெயரை சேர்க்க கட்டுப்பாடு இல்லை. இடம் பெயரும் வாக்காளர் பெயரை, மற்றொரு தொகுதியில் இணைக்க, சில கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளன. புதிய சாப்ட்வேர் மூலமாக, ஒரே "இன்ஷியல்' மற்றும் பெயருடன் இருக்கும், வாக்காளர் விவரம் தெரிந்துவிடும். கள ஆய்வு நடத்தி, உறுதி செய்த பிறகே, அவர் பெயர் சேர்க்கப்படும்.
புதிய "சாப்ட்வேர்' மூலம், விண்ணப்ப தாரரின் படிவத்தை பதிவு செய்ததும், விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக, சம்பந்தப்பட்ட நபரின் மொபைல் எண்ணுக்கு, எஸ்.எம். எஸ்., சென்றுவிடும்.வாக்காளர் பதிவு அலுவலர் ஒப்புதல் கொடுத்ததும் மற்றொரு எஸ்.எம். எஸ்., அனுப்பப்படும்; நிறைவாக, பெயர் சேர்க்கப்பட்டதாக கூறி, வரிசை எண், பாகம் எண், வாக்காளர் அட்டை எண்ணுடன், எஸ்.எம்.எஸ்., அனுப்பி வைக்கப்படும். மாவட்டத்தில் உள்ள, 7.29 லட்சம் வீடுகளில், 64 சதவீதம், கள ஆய்வு நிறைவடைந்துள்ளது.இவ்வாறு, அதிகாரிகள் தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக