தமிழகத்தில், 'இ - சேவை' மையங்கள் வாயிலாக அளிக்கப்படும் சேவைகளில், மேலும், 300 சேவைகள் கூடுதலாக இடம்பெற உள்ளன,'' என, தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர், மணிகண்டன் கூறினார்.
'பிக்கி' எனும், இந்திய தொழில் வர்த்தக பேரமைப்பு சார்பில், 'ஆன்-லைன்' வர்த்தகம் குறித்த கருத்தரங்கை, சென்னையில் நேற்று துவக்கி வைத்து, அமைச்சர் பேசியதாவது:
தமிழகம், அறிவு மற்றும் தொழில் திறத்தில், சிறந்து விளங்குவதால், ஐ.டி., எனும் தகவல் தொழில்நுட்ப துறையில், முக்கிய மையமாக விளங்குகிறது. சிறு தொழில் செய்வோருக்கும் பயிற்சி வழங்கப்படுகிறது. மேலும், 12 ஆயிரத்து, 524 கிராம ஊராட்சிகளுக்கும், 'இன்டர்நெட்' இணைப்பு வழங்கும் பணி நடந்து வருகிறது.
இது தவிர, சாதாரண மக்களுக்கும், ஐ.டி.,துறையின் பலன் சென்றடையும் நோக்கில், மாநிலம் முழுவதும், 11 ஆயிரத்து, 117 இ - சேவை மையங்களை துவங்கியுள்ளோம். அங்கு, பல்வேறு சான்றிதழ்கள் உட்பட, 195 சேவைகள் வழங்கப்படுகின்றன. இதனால், காலவிரயம் தவிர்க்கப்பட்டுள்ளது. இத்துடன் மேலும், 300 சேவைகள் கூடுதலாக வழங்கப்படவுள்ளன.
இவ்வாறு அமைச்சர் பேசினார்.
இதில், பிக்கி தலைவர், ரூபன் ஹாப்தே, தொழில்நுட்ப குழு அமைப்பாளர், ராஜாராம் வெங்கட் ராமன், 'வேலிங்க்ரோ' நிறுவன தலைவர், அருண், 'எல்காட்' மேலாண் இயக்குனர், சுடலைக்கண்ணன் ஆகியோர் பேசினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக