மறைந்த தமிழக முதல்வர், ஜெயலலிதாவிற்கு பிடித்த இதிகாச பாத்திரம் பீஷ்மர். 'எப்போது விரும்புகிறேனோ, அப்போது தான் நான் மரணம் அடைய வேண்டும்' என்று பிடிவாதமாக, அர்ஜுனன் எய்த அம்பு படுக்கையில் படுத்து உயிர்விட்டவர் பீஷ்மர்.
இவரின் மதி நுட்பமும், தியாகமும், வைராக்கியமும், ஜெயலலிதாவை கவர்ந்திருக்கும். பீஷ்மர் விரும்பிய போது அவரது மரணம் நிகழ்ந்தது. ஆனால் ஜெயலலிதா மரணம்... தனி ஆளாய், மிகப்பெரிய ஆளுமையாய் ஆட்சி செய்தவர். அவர் ராஜ்ஜியத்தில் அவரே அரசி, அவரே மந்திரி! எல்லா முடிவுகளையும் அவரே எடுத்தார். என்றாலும், எல்லாரையும் போல, எமன் அவரை காவுகொள்ளப் போகும் நாளை, அவர் அறிந்திருக்கவில்லை. அந்த நாள், 2016, டிச., 5. ஜெ., இல்லாத தமிழகத்திற்கு இன்று ஓராண்டு!
திரை உலகிலும், அரசியல் அரங்கிலும், ஆட்சி அதிகாரத்திலும் இவரது சாதனைகளுக்கு நிகர் இவரே! பதினைந்து வயதில் திரைக்கு வந்தவர். ஆடவும், பாடவும் தெரிந்த அபூர்வ நடிகை. 80 வெள்ளி விழாப் படங்களை தந்த தென்னிந்திய நாயகி என்ற பெருமை பெற்றவர். திரை நாயகியாக இருந்து, இந்திய அளவில் தேர்தல் மூலம் முதல்வரான முதல் நடிகை.
எதிலும் முதன்மை
ஒன்றரை கோடி தொண்டர்கள் உடைய, அ.தி.மு.க.,வின் பொதுச் செயலராக, 29 ஆண்டுகள் இருந்தவர். கட்சி நிறுவனர், எம்.ஜி.ஆருக்கு கூட கிடைக்காத கவுரவம் இது.
இந்திய அளவில் நீண்ட காலம் பதவி வகித்த இரண்டாவது பெண் முதல்வர். முதலாமவர், ஷீலா தீட்ஷித்.
தமிழகத்தில் தேர்தல் மூலம் முதல்வரான முதல் பெண்.
தமிழகத்தின் முதல் இளம் முதல்வர். அதாவது, 43 வயதில், முதல்வராகி விட்டார்.
தமிழகத்தில் அதிக முறையாக, அதாவது ஆறு முறை, முதல்வராக பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டவர்.
எம்.ஜி.ஆருக்கு பிறகு தொடர்ச்சியாக, இரண்டு முறை முதல்வர் பதவி வகித்தவர்.
தமிழகத்தின் முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவர்.
அசாத்திய துணிச்சல்
ஆண்கள் கோலோச்சிய தமிழக அரசியல் களத்தில், இவரது ஒரே பார்வையில் அத்தனை ஆண்களும் அடங்கி, கைகட்டி, வாய் பொத்தி நின்றனர். இவர் முன்னால், கட்சியில் நிர்வாகிகள் யாருக்கும், போர்க்குரல் இல்லை; ஆட்சியில் எந்த அதிகாரிக்கும் அதிருப்தி குரல் இல்லை. 'இவர் ஒரு சர்வாதிகாரியோ' என்ற விமர்சனம் எழுந்த போது, அதற்கும் பதில் சொன்னார்.
'ஆம் நான் சர்வாதிகாரி தான்! ஒரு இயக்கத்தின் தலைவர், வலிமை உள்ளவராக இருந்தால் தான் தலைமை பொறுப்பை வகிக்க முடியும். ஓர் ஆண் அப்படி விளங்கினால், 'வலிமையானவர்' என்று போற்றுவீர்கள்; பெண் அவ்வாறு இருந்தால், அது சர்வாதிகாரமா?' என்றார்.இவரின் இந்த அசாத்திய துணிச்சலை, இவரது அரசியல் எதிரிகள் கூட பாராட்டுவர்.
கொண்ட கொள்கையில் உறுதி, வானம் இடிந்து விழுந்தாலும் வருந்தாத மனம், 'நான் நினைப்பதே சரி' என்ற அசாதாரண கர்வம், 'நல்லது என்றாலும், கெட்டது என்றாலும், நானே முடிவெடுப்பேன்' என்ற திடமான தீர்மானம் அனைத்தும், ஜெயலலிதாவின் ஸ்பெஷல்!
இந்த, 'பிளஸ்' குணாதிசயங்களே, பல நேரங்களில், அவரது. 'மைனஸ்' ஆனது தனிக்கதை. தனிஆளாய் அவர் தனக்குள் போட்டுக் கொண்ட திரை, அவரது தனிப்பட்ட வாழ்க்கை முறை, மரணத்திற்கு பிறகும் விடை தெரியாத கேள்விகளாய் நீளுகின்றன.
மரணமே சர்ச்சையானது பெரும் சோகம். சொத்துக்களுக்கு யார் வாரிசு, சொந்தம் கொண்டாடி வருபவர்கள் யார் என்ற கேள்விகளுக்கு பதிலளிக்க இன்று, ஜெ., இல்லை.
'பீனிக்ஸ்' பறவை
அரசியல்வாதிகள் அடிக்கடி சொல்வர்... 'தோல்வியால் துவள மாட்டோம்; பீனிக்ஸ் பறவையாக எழுந்து வருவோம்' என்று! அது யாருக்கு பொருந்துமோ இல்லையோ, ஜெ.,க்கு நன்கு பொருந்தியது.
நிஜமாய் இவர் ஒரு பீனிக்ஸ் பறவையே! சிறைக்குள் கைதியாக சென்ற போதும், மீண்டும் கோட்டைக்கு வர முடிந்தது. ஊழல் வழக்குகளால் உருக்குலைந்த போதும், மக்கள் மனங்களில் மீண்டும் குடியேறி, வெற்றியை வசமாக்க முடிந்தது. இதற்கு அவரது போராட்டக்குணமும், அசாத்திய துணிச்சலுமே காரணம்.
ஐந்தாண்டு காலம், 1991 - 96ல் முதல்வராக இருந்து, ஒரு சட்டசபை தொகுதிக்குள் தானே தோற்ற போதும், வழக்குகள் சூழ்ந்த போதும், சராசரி பெண்ணாக துவண்டு விடவில்லை. அரசியலில் இருந்து ஓடிவிடவில்லை. போராடி துளிர்த்து, சிலிர்த்து எழுந்தார். மீண்டும், மீண்டும் முதல்வரானார். தளராத தன்னம்பிக்கை காரணமாக, 'பிரதமர் வேட்பாளர்' என்று, கட்சியினர் கொண்டாட காரணமானார்.
எம்.ஜி.ஆரே கூட்டணி இல்லாமல் போட்டியிட தயங்கிய காலங்கள் உண்டு; ஆனால் 2014 லோக்சபா தேர்தலில், தனித்தே போட்டியிட்டு தன்னிகரில்லா வெற்றியும் பெற்றார். ஒட்டுமொத்த இந்தியாவும், மோடியை கொண்டாடிய நேரத்தில், 'மோடியா, இந்த லேடியா' என்று, இங்கிருந்தே சவால் விட்டார்.
'என் கண்ணுக்கு எட்டியவரை எதிர்க்கட்சிகளே இல்லை' என்று எள்ளிநகையாடினார். அதை தேர்தலில் நிரூபிக்கவும் செய்தார். அப்போது எதிர்க்கட்சியினர் கருத்துச் சொல்ல கூட திராணியின்றி திகைத்து நின்றனர். இப்போது, 'திடீர் அரசியல்வாதிகளாக' மாறத்துடிக்கும் நடிகர்கள் கூட, ஜெ., ஆட்சியில் மவுனம் காத்தனர். இதுவே ஜெ., என்ற தனிநபரின் தன்னிகரில்லா ஆளுமை.
சாதனைகள்
முல்லைப்பெரியாறு அணை விவகாரம், காவிரி நீர் விவகாரங்களில் ஜெ.,யின் செயல்பாடுகள் ஆகியவை, பாராட்டத்தக்கவை. இந்த விவகாரத்தில், அண்டை மாநிலங்களே, ஜெ.,யின் போராட்டக் குணத்தோடு போட்டி போட தயங்கின.என்கவுன்டரில் ரவுடிகளை ஒழித்தது, வீரப்பனை கொன்றது, ஆட்சியில் தலையிட்டால், கட்டப்பஞ்சாயத்து செய்தால், கட்சியினரே ஆனாலும், 'கம்பி' எண்ண வைத்தது, ஜாதி, மதக்கலவரங்களை ஒடுக்கியது, கந்துவட்டி கொடுமையை தடுக்க சட்டம் கொண்டு வந்தது...
லாட்டரியை ஒழித்தது, மகளிர் போலீஸ் ஸ்டேஷன்கள் கொண்டு வந்தது, மகளிர் சுயஉதவிக் குழுக்களை உருவாக்கியது, ஏழைகளுக்கு தாலிக்கு தங்கம் வழங்கியது, அரசே கேபிள் நிறுவனம் துவங்கியது, கோவில்களில் அன்னதானம் வழங்கியது...
மழைநீர் சேகரிப்பை கட்டாயமாக்கியது, விலையில்லா அரிசி, மாணவர்களுக்கு லேப் - டாப், சைக்கிள் வழங்கியது என, ஜெ., ஆட்சியின் நிறைகள் ஏராளம்.
ஒன்மேன் ஆர்மி
இறந்த பின் நடக்கிற பல வருமான வரித்துறை ரெய்டுகள், அதுவும் வாழ்ந்த வீட்டிலேயே நடந்த சோதனை, சூழ்ந்திருந்தவர்களிடம் பிடிப்பட்ட கோடிக்கணக்கான சொத்துக்கள் இவை எல்லாம், ஜெ., மீது படிந்திருக்கும், நீக்க முடியாத கறைகள்...
ஒரு தலைவிக்கு இது பெருங்குறை! இவை எல்லாம் ஜெ.,க்கு தெரிந்து நடந்ததா, தெரியாமல் தான் நடந்தது என்பது தான், அவரது நிர்வாகத் திறமையை விமர்சனத்திற்குள்ளாக்குகிறது.
அ.தி.மு.க., எப்போதும், 'ஒன்மேன் ஆர்மியாக' இருக்க வேண்டும் என்று விரும்பிய, ஜெ., தனக்கு அடுத்து, வலிமை வாய்ந்த ஒருவரை உருவாக்கவில்லை. விளைவு, ஜெ., இறந்ததும் கட்சி இரண்டாகி, மூன்றாகி, இரண்டாகி நிற்கிறது.
இரட்டை இலையையும் இழந்து, ஒரு வழியாய் கிடைத்திருக்கிறது. கட்சியின் சொத்துக்கள் யார் பெயரில் இருக்கிறது என்பதே மர்மம். கட்சிக்கு நாளிதழ் இல்லை; தொலைக்காட்சி இல்லை. சரியான தலைவனை தேடும் தொண்டன், எம்.ஜி.ஆர்., உருவாக்கிய கட்சியின் எதிர்காலம் என்ன ஆகும் என, ஏங்குகிறான்.
என்றாலும், எத்தனை சர்ச்சைகள் வந்தாலும், அ.தி.மு.க., தொண்டர்களுக்கு அவர், எப்போதும், 'அம்மா' தான். அம்மாவுக்கான இடத்தை அவர்கள் இன்னொருவருக்கு தர தயார் இல்லை. ஜெ., இல்லாத தமிழக அரசியல், ஓராண்டில் அல்லோகலப்பட்டதை திரும்பி பார்த்தாலே, அவர் ஏற்படுத்தி சென்றிருக்கும் வெற்றிடத்தை உணர முடியும்.
'மார்க்ரெட் தாட்சர் போல, இந்திரா போல' என்று, ஜெயலலிதாவை ஒப்பிடலாம். 'ஆனால் ஜெயலலிதா போல' என்று இன்னொருவரை ஒப்பிட முடியாது; அது தான் ஜெயலலிதா!
கடந்து வந்த பாதை
1948: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, கர்நாடகாவின் மைசூரில் பிப்., 24ல், பிறந்தார்.
1961: எபிசில் என்ற ஆங்கில படம் மூலமாக சினிமாவில் அறிமுகம்.1964: கன்னட படத்தில் அறிமுகம்.
1965: வெண்ணிற ஆடை என்ற படத்தின் மூலம், தமிழ் படங்களில் அறிமுகம்.
1965: தெலுங்கு படத்தில் அறிமுகம்.
1968: இந்தி படத்தில் அறிமுகம்.
1972: பட்டிக்காடா பட்டணமா என்ற படத்துக்காக, 'சிறந்த தமிழ் நடிகைக்கான பிலிம்பேர் விருது' பெற்றார்.
1982: எம்.ஜி.ஆர்., துவக்கிய அ.தி.மு.க., வில் உறுப்பினரானார்.
'பெண்ணின் பெருமை' என்ற தலைப்பில், முதன்முறையாக, அ.தி.மு.க., கட்சித் கூட்டத்தில் உரை.
1982: கொள்கை பரப்பு செயலராக, எம்.ஜி.ஆரால் தேர்வு.1983: திருச்செந்துார் இடைத்தேர்தலில், அ.தி.மு.க., வேட்பாளரை ஆதரித்து, முதன்முறையாக பிரசாரம்.
1984: ராஜ்யசபா எம்.பி., ஆனார்.
1984: சட்டசபை தேர்தலில், எம்.ஜி.ஆர்., வெளிநாட்டில் சிகிச்சை. ஜெ.,வின் சூறாவளி சுற்றுப்பயணத்தால், அ.தி.மு.க., வெற்றி.
1987: எம்.ஜி.ஆர்., மறைவுக்குப் பின், அ.தி.மு.க., இரண்டாக பிரிவு; இரட்டை இலை சின்னம் முடக்கம்.1989: சட்டசபை தேர்தலில் போடி தொகுதியில் வெற்றி பெற்று, முதன்முறை, எம்.எல்.ஏ., ஆனார். இவரது அணி, 27 இடங்களில் வென்றது. தமிழகத்தின் முதல் பெண் எதிர்க்கட்சி தலைவரானார்.
1989: அ.தி.மு.க., மீண்டும் ஒன்றானது; இரட்டை சிலை சின்னம் கிடைத்தது; ஜெ., பொதுச் செயலர் ஆனார்.
1991: பர்கூர், காங்கேயத்தில் வெற்றி பெற்றார். முதல் முறையாக தமிழக முதல்வர் ஆனார். தேர்தல் மூலம் வெற்றி பெற்ற தமிழகத்தின் முதல் பெண் முதல்வர் என்ற பெருமை பெற்றார்.
1991: லோக்சபா தேர்தலில் இவரது தலைமையிலான கூட்டணி, 39 இடங்களிலும் வெற்றி.
1996: இரண்டாவது எதிர்க்கட்சி தலைவர்2001: இரண்டாவது முறை தமிழக முதல்வர்.2002: மூன்றாவது முறை தமிழக முதல்வர்.
2006: எதிர்க்கட்சி தலைவர்2011: நான்காவது முறையாக தமிழக முதல்வர்.
2014 செப்., : சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை.
2015 மே: வழக்கில் இருந்து விடுதலை
2015 மே: ஐந்தாவது முறையாக தமிழக முதல்வர்.
2016: ஆறாவது முறையாக தமிழக முதல்வர்.
2016: டிச., 5ல் மறைந்தார்.
சாதனை வெற்றி!
ஜெயலலிதா தன் தேர்தல் வரலாற்றில், 2015ல் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை ஈட்டினார். 1 லட்சத்து, 50 ஆயிரத்து, 722 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
36 ஆண்டுகள்!
கடந்த, 1977ல் முதல்வரான, எம்.ஜி.ஆர்., அடுத்து வந்த, 1980 தேர்தலில் வெற்றி பெற்றார். இதன் பின், தமிழக அரசியலில் யாருமே தொடர்ந்து ஆட்சி அமைக்கவில்லை. 36 ஆண்டுகளுக்குப்பின், 2011ல் முதல்வராக இருந்த ஜெயலலிதா, 2016 தேர்தலிலும் வெற்றி பெற்று சரித்திர சாதனை படைத்தார்.
எடுத்த சபதம் முடிப்பேன்!
தமிழக சட்டசபை வரலாற்றில், 1989 மார்ச் 25 மறக்க முடியாத நாள். பட்ஜெட் உரையில் முதல்வர் கருணாநிதி - எதிர்க்கட்சி தலைவர் ஜெயலலிதா இடையே கடும் விவாதம் ஏற்பட்டது.
இது மோதலாக மாறியது. தி.மு.க., அமைச்சரால், ஜெ., தாக்கப்பட்டார். அப்போது, 'இனிமேல் நான் சட்டசபைக்கு வரும்போது முதல்வராகத் தான் வருவேன்' என, சபதமேற்றார். அதன்படி, 1991 ஜூன் 24ல் முதல்வராகி, சபதத்தை நிறைவேற்றினார்.
உழைப்பு... உயர்வு!
வாழ்க்கையில் சவால்களை சந்திப்பது, ஜெ.,வுக்கு பிடிக்கும். இவர் கூறுகையில், 'ஒரு சவால் எடுத்துக் கொண்டால், எதிலும் உற்சாகமாக ஈடுபட முடியும்.
'டான்சிலும் சரி, சினிமாவிலும் சரி, பிடிக்காவிட்டாலும் கடுமையாக உழைத்தேன். அதனால் முன்னணி நடிகையாக உயர்ந்தேன். என் மனம் பரிபூரணமாக விரும்பியதால் அரசியலில் இறங்கினேன்' என்றார்.
காவிரி தாய்!
காவிரியில் இருந்து தமிழகத்துக்கு, ஆண்டுக்கு, 205 டி.எம்.சி.,(1 டி.எம்.சி = 100 கோடி கன அடி) தண்ணீர் தரவேண்டும் என, 1991ல், காவிரி நடுவர் மன்றம் தீர்ப்பு வழங்கியது. 'இதை மத்திய அரசின் அரசிதழில் வெளியிட வேண்டும்' என, ஜெயலலிதா தொடர்ந்து போராடி வந்தார். இறுதியில், 2013 பிப்., 20ல் மத்திய அரசு அரசிதழில் வெளியிட்டது. இதன் மூலம் காவிரி டெல்டா மக்களின் வாழ்வாதாரத்துக்கு, வழி ஏற்படுத்தினார்.
இது ஜெ., ஸ்டைல்!
தன் மேடை பேச்சு குறித்து, ஜெ., கூறுகையில், 'பொதுக்கூட்டங்களில் குட்டிக் கதைகள், நகைச்சுவை உதாரணங்கள் சொல்வது என் வழக்கம். 'மக்கள் ரசிக்கின்றனர். பொதுக்கூட்டங்களில் நான், வளவளவென்று பேசுவது இல்லை. குறிப்பெடுத்து பேசுகிறேன்' என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக