வெள்ளி, 30 ஜூன், 2017

மருத்துவ படிப்பில் 85 சதவீத இடஒதுக்கீடு தடை விதிக்க ஐகோர்ட்டு மறுப்பு.

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். ஆகிய மருத்துவப் படிப்புகளுக்காக தமிழக அரசு கடந்த 22-ந்தேதி ஒரு அரசாணை வெளியிட்டது. அதில், தமிழகத்தில் உள்ள மருத்துவ படிப்புகளில் உள்ள இடங்களில் 85 சதவீதம் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கும், மீதமுள்ள 15 சதவீதம் சி.பி.எஸ்.இ. உள்ளிட்ட மத்திய பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கும் வழங்கப்படும்’ என்றும் கூறப்பட்டிருந்தது.


இந்த அரசாணையை ரத்துசெய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில், தஞ்சாவூரை சேர்ந்த தர்னிஷ்குமார் உள்பட பல மாணவர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

அந்த மனுவில், ‘மருத்துவ படிப்பில் சேரும் மாணவர்களிடையே எந்த ஒரு பாகுபாடும் இருக்கக்கூடாது என்பதற்காகத் தான் ‘நீட்’ தேர்வு நாடு முழுவதும் கொண்டுவரப்பட்டுள்ளது. அந்த தேர்வில் பெறப்பட்ட மதிப்பெண் அடிப்படையில் தான் மருத்துவ படிப்புக்கான மாணவர்கள் சேர்க்கை நடைபெறவேண்டும். ஆனால், மாணவர்களிடையே பாகுபாட்டை ஏற்படுத்தும் விதமாக தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இந்த அரசாணையால், சி.பி.எஸ்.இ. மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். எனவே, இந்த அரசாணையை ரத்து செய்வதுடன், இடைக்கால தடை விதிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்குகள் நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வக்கீல்கள், ‘இந்த அரசாணை தேவையில்லாமல் பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த அரசாணைக்கு தடைவிதிக்க வேண்டும்’ என்று வாதிட்டனர்.


அப்போது அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் ஆர்.முத்துகுமாரசாமி ஆஜராகி, இந்த வழக்கிற்கு தமிழக அரசின் கருத்தை கேட்டு தெரிவிப்பதாக கூறினார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, தமிழக அரசின் கருத்தை கேட்காமல், அரசாணைக்கு இடைக்கால தடை எதுவும் விதிக்க முடியாது என்று கூறி விசாரணையை ஜூலை 5-ந்தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக