வெள்ளி, 30 ஜூன், 2017

மருத்துவ படிப்பு விண்ணப்பத்தில் குழப்பம் : விபரங்கள் நிரப்ப முடியாமல் திணறல்.

மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பங்களில் கேட்கப்பட்ட விபரங்களை நிரப்ப, போதிய இடம் இல்லாததால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

'நீட்' தேர்வு அடிப்படையில் தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., மாணவர் சேர்க்கை நடக்க உள்ளது. அரசு, சுயநிதி மருத்துவ கல்லுாரிகளில் உள்ள இடங்களுக்கு விண்ணப்பம் வினியோகம் நடக்கிறது. மதுரை உட்பட 22 அரசு மருத்துவக் கல்லுாரிகளில் இந்த விண்ணப்பங்கள் வினியோகிக்கப்படுகின்றன.


 சில பகுதிகளில் வழங்கப்பட்ட விண்ணப்பங்களில், ஓ.எம்.ஆர்., படிவம் மற்றும் எவ்வாறு நிரப்ப வேண்டும் என்ற விபரங்கள் கொண்ட புத்தகம் கடந்தாண்டுக்கு உரியவை.வயது தகுதியாக, 'டிச.,31, 2017ன்படி 17 வயது பூர்த்தியானவர் இதற்கு விண்ணப்பிக்கலாம்' என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், ஓ.எம்.ஆர்., ஷீட்டில் மாணவர் பிறந்த தேதியை குறிப்பிட கட்டங்களை கறுப்பு நிறத்தில் நிரப்பும்போதும் ஆண்டு குறிப்பிடும் இடத்தில், 2000 மற்றும் அதற்கு மேல் பிறந்தவர் ஆண்டை குறிப்பிட முடியவில்லை. 1999 வரை பிறந்தவர் மட்டுமே குறிப்பிடும் வகையில் கட்டங்கள் இடம் பெற்றுள்ளன. '2', '0' ஆகிய எண்களை குறிப்பிட வழி இல்லை.

அதேபோல், விண்ணப்பத்தில் 10 இலக்கம் கொண்ட பதிவு எண் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், படிவத்தில் 'ரெஜிஸ்டர்/ரோல் நம்பர்' என குறிப்பிட்டு எட்டு இலக்கம் எழுதுவதற்கு மட்டும் 
இடம் உள்ளது.
இதுகுறித்து மாணவர்கள் கூறியதாவது:இந்த ஆண்டு மருத்துவ படிப்பு, மாணவர்களுக்கு கடும் சோதனையாக மாறிவிட்டது. 'நீட்' தேர்வு குறித்த தமிழக அரசு நிலைப்பாட்டால் கடைசி வரை குழப்பம் தான் ஏற்பட்டது. கணினி நடைமுறை மூலம் தான் விண்ணப்பம் ஏற்கப்படும். 
அப்போது ஓ.எம்.ஆர்., படிவத்தில் சிறு பிழை இருந்தாலும் கூட விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். இப்பிரச்னை குறித்து சுகாதாரத்துறை செயலர் கவனிக்க வேண்டும். சுயநிதி மருத்துவ கல்லுாரிகளில் நிர்வாக ஒதுக்கீடுக்கான விண்ணப்பங்களும், தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கூறினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக