ஞாயிறு, 25 ஜூன், 2017

போலியோ எனும் இளம்பிள்ளைவாதம் மற்றும் எலும்பு முறிவு உள்ளிட்ட எலும்பு சம்பந்தப்பட்ட நோய்களுக்கு உலகத் தரம் வாய்ந்த சிகிச்சை முற்றிலும் இலவசம்.


           திருமலா திருப்பதி தேவஸ்தானம் (TTD) சார்பில் BIRRD [Hospital - Balaji Institute of Surgery, Research and Rehabilitation for the Disabled], Tirupathi மருத்துவமனை கீழ் திருப்பதியில் இயங்கி வருகின்றது. இங்கு எலும்பு சம்பந்தப்பட்ட நோய்கள் அனைத்திற்கும் சிகிச்சை அளிக்கப்படுகின்றது. உலகத்தரம் வாய்ந்த சிகிச்சை முற்றிலும் இலவசம். (ISO தரச்சான்றிதழ் பெற்ற திருமலா திருப்பதி தேவஸ்தான (TTD) சேவைகள் பற்றி அறியாதவர் இல்லை)


 நடக்க இயலாமல் தவழ்ந்து செல்லும் போலியோவால் பாதிக்கப்பட்டவரையும் நடக்க வைக்கும் அதிசயம். கைகால்களை இழந்தவர்களுக்கு இலவச மாற்று உறுப்புகள் பொருத்தப்படுகின்றது.

            எப்படி அணுக வேண்டும்

                 பாதிக்கப்பட்டவரை அழைத்துக் கொண்டு திங்கள் புதன் வெள்ளி ஆகிய தினங்களில் காலை 6 மணிக்கு மருத்துவமனையில் இருக்குமாறு செல்ல வேண்டும்.  முதலில் டோக்கனை பெற்றுக் கொண்டு நமது காலைக்கடன்களை முடித்துக் கொண்டு காத்திருப்பு அறைக்கு 8 மணிக்குள் வந்துவிட வேண்டும். 8 மணிக்கு பதியத் துவங்குவார்கள். 9 மணிக்கு மருத்துவரிடம் அனுப்பத் துவங்குவார்கள். ஒரே நேரத்தில் நோயாளிகளைப் பரிசோதிக்க பல மருத்துவர்கள் இருந்தாலும் கூட்டம் மிக அதிகமாக இருப்பதால் தாமதமாகும். சோதனை செய்து பாதிப்பின் தன்மையைப் பொறுத்து சிகிச்சையை நிர்ணயம் செய்வார்கள்.

             முடக்கு நீக்க அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தால், கால இடைவெளியைக் (தேதி)  குறிப்பிட்டு அனுப்பிவிடுவார்கள்.

            குறிப்பிட்ட நாளுக்கு 4 நாட்கள் முன் பின்னாக அங்கே சென்று உள் நோயாளியாக சேர்ந்து கொண்டால் 2 நாட்களில் அனைத்து பரிசோதனைகளையும் முடித்து அறுவை சிகிச்சைக்கு தயார் செய்துவிடுவார்கள். பின் அறுவை சிகிச்சையை முடித்து கட்டு போட்டு 2 நாட்கள்  தங்க வைத்திருந்து, கட்டு பிரிக்க தேதி குறிப்பிட்டு அனுப்பி விடுவார்கள்.

            மீண்டும் அவர்கள் குறிப்பிடும் தேதியில் [சுமார் 45 நாட்கள் கழித்து] சென்றால் கட்டைப் பிரித்து பரிசோதிக்கின்றனர்.  தேவைப்பட்டால் காலிபர் எனப்படும் ஷூவுக்கு சிபாரிசு செய்கின்றனர். அங்கு சென்று அளவு கொடுத்துவிட்டு ஊர் திரும்ப வேண்டியதுதான். அவர்கள் குறிப்பிடும் நாளில் சென்று [இலவசமாக] காலிபர் வாங்கி நடந்து பயிற்சி பெற்று குறைகள் இருப்பின் நீக்கி ஊர் வந்து சேர வேண்டியதுதான்.
               
                 மிகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டும் தேவைப்பட்டால் 2ம் தடவை அறுவை சிகிச்சைக்கு வரச் சொல்வார்கள். 2 கால்களும் பாதிக்கப்பட்டிருந்தால் ஒவ்வொன்றாக சீர் செய்வார்கள்.
வசதிகள்

          சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுவோருக்கு முதல் தரமான உணவு (திருப்பதி தேவஸ்தான உணவு பற்றி யாவரும் அறிந்ததே), தங்கும் இடம்,  மருத்துவம் பரிசோதனைகள் இலவசம். சேர்ந்த பாலின பாதுகாவலருக்கு உடன் தங்க அனுமதி உண்டு. மாற்று பாலினத்தவர் தங்குவதற்கு தனியே இலவச தங்கும் விடுதி உண்டு.

 அறுவை சிகிச்சை TO கட்டு பிரிக்கும் காலமான 45 நாட்களில் ஊருக்கு வந்து திரும்புவது சிரமம் என நினைப்பவர்களுக்கு தங்கும் இடம் இலவசம்.

           எப்படி செல்வது

           திருப்பதி பேருந்து நிலையம்  ரயில் நிலையம் அல்லது அலிப்பேரியிலிருந்து ஆட்டோவில் சிம்ஸ் ஹாஸ்பிடல் என்று சொன்னால் கொண்டு போய் விடுகின்றனர்.

அறுவை சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுவோர் எடுத்துச் செல்ல வேண்டியவை

             பிலாஸ்டிக் வாளி, குவளை, தட்டு, டம்ப்ளர், மாற்று உடைகள், உணவு வாங்க சிறு பாத்திரங்கள் சில, டீ வாங்க பாத்திரம், பெட்ஷீட் 3

                 கவனத்தில் கொள்ள வேண்டியவை

                         அறுவை சிகிச்சைக்குப் பின் ஊரில் சாப்பிட என அவர்கள் எழுதிக் கொடுக்கும் மருந்து மாத்திரைகளை அங்கேயே இலவசமாக வாங்கிக் கொள்வது நல்லது. இங்கு கிடைப்பதில்லை.

                     தகுதி

   பாதிப்பு மட்டுமே. சிபாரிசு தேவையில்லை. ஜாதி மதம் மொழி இனப் பாகுபாட்டிற்கு இடமில்லை.
5 வயது முதல் 55 வயதுவரை உள்ளோருக்கு அனுமதி.

அறுவை சிகிச்சைக்குப் பின் தேவைப்பட்டால் ரயில் / பேருந்து நிலையம் வரை ஆம்புலன்ஸில் இலவச சர்வீஸ்.

இதுபோன்ற சிறப்பான போலியோ எலும்பு அறுவை சிகிச்சை இந்த மருத்துவமனை தவிர கோவை கங்கா மருத்துவமனை மற்றும் ஹரியானா மாநிலத்தில் ஒரு தனியார் மருத்துவமனை ஆகிவற்றில் மட்டுமே செய்யப்படுகின்றன. ஆனால் அந்த மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு ரூ 5 லட்சம் வரை செலவாகும் ஆனால் இங்கு (TTD) முற்றிலும் இலவசம்.

இதை பகிர்வதன் மூலம்  உங்களாலும் உதவ முடியும்.  சிலரின் வாழ்விலாவது ஒளி ஏற்ற முடியும் என்பதோடு எம் பெருமான் திருமலைவாசனின் அருள் கிடைக்கப்பெறுவோமாக.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக