சனி, 24 ஜூன், 2017

NEET - தேர்வு முடிவு.. தமிழக மாணவர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி.

தமிழக மாணவர்களை மிகவும் பதைபதைப்புக்கு, மானபங்கத்திற்கும் உள்ளாக்கிய நீட் தேர்வின் முடிவுகள்  (23.6.2017) வெளியாகியுள்ளன. எதிர்பார்த்தது போலவே, தமிழகத்துக்கு இத்தேர்வு சாதகமாக அமையவில்லை. 


இந்தியா முழுவதும் 11,38,890 பேர் நீட் தேர்வை எழுத விண்ணப்பித்தார்கள். இதில் மாணவர்கள், 4,97,043. மாணவிகள் 6,41,839. திருநங்கைகள் 8 பேர். விண்ணப்பித்தவர்களில் 48,805 பேர் தேர்வை எழுதவில்லை. தேர்வு எழுதிய 10,90,085 பேரில் தேர்ச்சி பெற்றவர்கள் 6,11,539 பேர். மாணவர்களின் எண்ணிக்கை, 2,66,221. மாணவிகள், 3,45,313. தேர்வெழுதிய 8 திருநங்கைகளில் 5 பேர் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். 

4,78,546 பேரை மருத்துவப் படிப்புக்குத் தகுதியில்லாதவர்கள் என்று நிராகரித்திருக்கிறது இந்தத் தேர்வு. நீட் தேர்வை எழுதிய 80 சதவீதம் பேர் ஆங்கிலத்தில்தான் எழுதினார்கள். 10 சதவீதம் பேர் இந்தியில் எழுதினார்கள். 15,206 மாணவர்கள் மட்டுமே தமிழில் தேர்வை எழுதினார்கள். தமிழகத்தைச் சேர்ந்த பெரும்பாலான மாணவர்கள் ஆங்கிலத்தில்தான் தேர்வை எழுதியுள்ளார்கள். ஆங்கிலம், இந்தி தவிர்த்து, குஜராத்தியில் 47,853 மாணவர்களும், பெங்காலியில் 34,417 மாணவர்களும் தேர்வை எழுதினார்கள். 

தேர்ச்சி பெற்றுள்ள 6,11,739 பேரில் எஸ்.சி. பிரிவைச் சேர்ந்தவர்கள் 14,637 பேர் தான். எஸ்.டி. பிரிவைச் சேர்ந்தவர்கள் 6,028 பேர். அகில இந்திய அளவில் பஞ்சாபைச் சேர்ந்த நவ்தீப் சிங் முதலிடத்தைப் பிடித்திருக்கிறார். மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஆர்சித் குப்தா இரண்டாம் இடத்தையும், மனீஷ் முல்சந்தானி மூன்றாம் இடத்தையும் பிடித்திருக்கிறார்கள். நான்காம் இடத்தை கர்நாடகாவைச் சேர்ந்த சந்தீப் சதானந்தா பிடித்திருக்கிறார். கேரளாவைச் சேர்ந்த டெரிக் ஜோசப் 6-வது இடத்தையும், தெலுங்கானாவைச் சேர்ந்த லக்கீம்ஷெட்டி அர்னாவ் திரிநாத் 12-வது இடத்தையும் பிடித்திருக்கிறார்கள். டாப்-25 இடத்துக்குள் தென்னிந்தியாவைச் சேர்ந்த 7 பேர் மட்டுமே இடம் பிடித்திருக்கிறார்கள். 

தமிழக மாணவர் ஒருவர்கூட அதில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக