குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளரை பாஜக அறிவித்துள்ளது. பிஹார் மாநில ஆளுநராக உள்ள ராம்நாத் கோவிந்த் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
ராம்நாத் கோவிந்த் உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் தேஹாத்தில் அக்டோபர் 1 1945-ல் பிறந்தார். தலித் பின்னணியைக் கொண்டவர்.
ராம்நாத் கோவிந்த் அடிப்படையில் ஒரு வழக்கறிஞர். டெல்லி உயர் நீதிமன்றத்திலும் பின்னர் உச்ச நீதிமன்றத்திலும் வழக்கறிஞராக பணியாற்றியிருக்கிறார். மொத்தம் 16 ஆண்டுகள் வழக்கறிஞராக இவர் பணியாற்றியிருக்கிறார்.
1994-ம் ஆண்டுதான் அவர் அரசியலில் அடியெடுத்துவைத்தார். முதன்முதலாக உத்தரப் பிரதேசத்திலிருந்து 1994-ல் அவர் ராஜ்யசபா எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார். தொடர்ச்சியாக இருமுறை அதாவது 2006-ம் ஆண்டுவரை அவர் எம்.பி.,யாக பணியாற்றினார். தனது பதவிக்காலத்தின்போது கிராமப்புறங்களில் கல்விக்கான அடிப்படை கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக அடிக்கடி குரல் கொடுத்திருக்கிறார். அவரது குரலின் எதிரொலியாக உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட் மாநிலங்களின் பல்வேறு பின்தங்கிய பகுதிகளில் பள்ளிகள் கட்டப்பட்டன.
இதுதவிர பல்வேறு நாடாளுமன்ற நிலைக்குழுக்களின் உறுப்பினராகவும் அவர் செயல்பட்டுள்லார். தாழ்த்தப்பட்டோர் / பழங்குடியினருக்கான நாடாளுமன்ற நிலைக்குழு, சமூக நீதிக்கான நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினராக அவர் செயல்பட்டிருக்கிறார்.
2002 அக்டோபரில் நடந்த ஐ.நா., பொதுக்குழு கூட்டத்தில் அவர் இந்தியப் பிரதிநிதியாகக் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது பாஜக சார்பில் தேசிய ஜனநாய கூட்டணியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ராம்நாத் கோவிந்த் வரும் 23-ம் தேதி வேட்புமனுவை தாக்கல் செய்யவிருக்கிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக