தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படுகிற அரசு சட்ட கல்லூரிகளில் 2017-2018 கல்வி ஆண்டில் பி.ஏ., எல்.எல்.பி., 5 ஆண்டு சட்ட படிப்பு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் வழங்கும் பணி நேற்று தொடங்கியது.
இந்த விண்ணப்பங்களை சென்னை ஆர்.ஏ.புரம், எண்.5, டாக்டர் டி.ஜி.எஸ். தினகரன் சாலையில் ‘பூம்பொழில்’ வளாகத்தில் அமைந்துள்ள பல்கலைக்கழக அலுவலகத்திலும், சம்பந்தப்பட்ட கல்லூரிகளிலும் நேரில் பெறலாம்.
இந்தப் படிப்பில் சேர வயது வரம்பு இல்லை.
புதிதாக 3 கல்லூரிகள்
சென்னை, செங்கல்பட்டு, வேலூர், திருச்சி, கோவை, மதுரை, திருநெல்வேலி ஆகிய 7 இடங்களில் உள்ள அரசு சட்ட கல்லூரிகளில் 5 வருட பி.ஏ.,எல்.எல்.பி. படிப்பில் 1,052 இடங்களும், 3 ஆண்டு எல்.எல்.பி., படிப்பில் 1,262 இடங்களும் உள்ளன.
கடைசி நாள்
5 ஆண்டு பி.ஏ.,எல்.எல்.பி. படிப்பில் சேர சென்னையில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டபல்கலைக்கழகத்தில் மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் ஆர்வத்துடன் வந்து விண்ணப்பத்தை பெற்றுச்சென்றனர். மாணவ, மாணவிகள் விண்ணப்பங்கள் பெறுவதற்கு பல கவுண்ட்டர்கள் திறக்கப்பட்டு உள்ளன.
5 வருட பி.ஏ.,எல்.எல்.பி. படிப்பில் சேர விண்ணப்பம் வரும் 23-ந்தேதி வரை கொடுக்கப்படும். அன்றுதான் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவம் சமர்ப்பிக்கவும் கடைசி நாள்.
3 வருட படிப்பு
3 வருட எல்.எல்.பி., படிப்பில் சேர வரும் 7-ந்தேதி முதல் விண்ணப்பம் கொடுக்கப்படும். விண்ணப்ப வினியோகத்துக்கு அடுத்த மாதம் 17-ந்தேதி கடைசி நாள். அன்றுதான் பூர்த்தி செய்யப்பட்ட படிவம் சமர்ப்பிக்கவும் கடைசி நாள்.
மாணவ, மாணவிகள் விண்ணப்பங்களை சமர்ப்பித்த பிறகு பரிசீலிக்கப்பட்டு, கலந்தாய்வுக்கு அழைப்பு அனுப்பப்படும். மாணவ, மாணவிகள் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையில் கலந்தாய்வு நடத்தப்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக