புதன், 14 ஜூன், 2017

IAS Exam - முதல்நிலை தேர்வு எழுதுவோர் கவனத்துக்கு.

புதுடில்லி: ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., உள்ளிட்ட அரசு உயர் பதவிக்கான முதல்நிலை தேர்வு எழுதுவோர், அதற்கான அனுமதி அட்டையை முன்னதாகவே, இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளும்படி, யு.பி.எஸ்.சி., எனப்படும், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவுறுத்தியுள்ளது.

ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., போன்ற குடிமைப் பணிகளுக்காக, யு.பி.எஸ்.சி., எனப்படும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் ஒவ்வொரு ஆண்டும் தேர்வுகளை நடத்துகிறது. முதல்நிலை தேர்வு, முக்கிய தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு என, மூன்று நிலைகளைக் கொண்டது இந்தத் தேர்வு.
கடந்த, 2016ம் ஆண்டில் நடந்த முதல்நிலைத் தேர்வில், 4.59 லட்சம் மாணவர்கள் பங்கேற்றனர். அதில், 1,099 பேர் ஐ.ஏ.எஸ்., உள்ளிட்ட பதவிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டுக்கான முதல்நிலைத் தேர்வு, வரும், 18ல் நடக்க உள்ளது.
தேர்வு எழுத உள்ளோருக்கு பல்வேறு அறிவுரைகளை தெரிவித்து, தேர்வாணையம் நேற்று வெளியிட்ட செய்தியில் கூறியுள்ளதாவது:
கடந்த சில ஆண்டுகளைப் போலவே, இந்த ஆண்டுக்கான முதல்நிலை தேர்வுக்கான அனுமதி அட்டையை, இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து, 'பிரின்ட்' எடுத்து கொள்ள வேண்டும்.
கடைசிநேர நெரிசலை தவிர்க்க, முன்னதாகவே, பிரின்ட் செய்து, அதில் ஏதாவது தவறு இருந்தால், உடனடியாக தேர்வாணையத்தின் பார்வைக்கு கொண்டு வர வேண்டும். தேர்வறையில் செய்யக் கூடியவை, செய்யக் கூடாதவை குறித்த அறிவுரைகள் அடங்கிய பக்கத்தையும் முழுமையாக படித்து தெரிந்து கொள்ள 
வேண்டும்.
விடைத்தாளில், தேர்வு எண் உள்ளிட்ட விபரங்களில், ஏதாவது தவறு இருந்தால், அந்த விடைத்தாள் நிராகரிக்கப்படும். 
தேர்வு எழுத வரும்போது, மொபைல்போன், லேப் - டாப், கால்குலேட்டர் போன்ற மின்னணு சாதனங்களை எடுத்து வரக் கூடாது. அவ்வாறு எடுத்து வந்தால், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் விபரங்களுக்கு, தேர்வாணையத்தின் www.upsconline.nic.in என்ற இணையதளத்தை 
பார்க்கவும்.இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக