வியாழன், 27 ஜூலை, 2017

பள்ளிக் குழந்தைகளைப் பாதுகாக்க தமிழக அரசின் 5 அறிவுரைகள் வெளியீடு.

வாகனங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பாக ஏற்றி இறக்கி, பெற்றோரிடமோ அல்லது அனுமதிக்கப்பட்ட நபரிடமோ சேர்க்கப்பட்டதை ஓட்டுநர் உறுதிசெய்துகொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட ஐந்து அறிவுரைகளைத் தமிழக அரசு வழங்கியுள்ளது.

தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "பள்ளிப்  பேருந்தில் பயணிக்கும் பள்ளிக் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், அரசாணை எண் 727 (போ.வ.7) உள்துறை நாள் 30.09.2012 அன்று சிறப்பு விதிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில், நடப்பாண்டில் 28,615 பள்ளிப் பேருந்துகள் மாவட்டக் குழுவால் ஆய்வுசெய்யப்பட்டு, தகுதிச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஆட்டோ ரிக்‌ஷா, மேக்சி கேப் மற்றும் மோட்டார் கேப் வாகனங்களில் பயணிக்கும் பள்ளிக் குழந்தைகளின் நலனை முன்னிட்டு, அவ்வகை வாகனங்களுக்கு சில ஒழுங்குமுறைகள் போக்குவரத்துத்துறையில் சுற்றறிக்கை எண் 31/2012 நாள் 10.10.2012 வாயிலாக ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளது. அதன் விவரம்:
 பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் செல்லும் ஆட்டோ ரிக்‌ஷா, மேக்ஸிகேப் மோட்டார் கேப் போன்ற வாகனங்கள் உரிய வட்டாரப் போக்குவரத்து அலுவலரிடம் விண்ணப்பித்துப் பதிவுசெய்யப்பட்டிருக்க வேண்டும்.

* வாகனங்களின் உரிமையாளர்கள் அல்லது ஓட்டுநர்களால் பதிவுசெய்யப்படுவதற்காக சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பத்தில், உரிய பள்ளியின் முதல்வர் அல்லது தலைமை ஆசிரியரிடம் மேலொப்பம் பெற்றிருக்க வேண்டும்.
* இவ்வாகனங்களில் 12 வயதிற்குட்பட்ட குழந்தைகளை ஏற்றிச் செல்லும்போது, அனுமதிக்கப்பட்ட இருக்கை அளவைவிட 1.5 மடங்குக்கு அதிகமாக குழந்தைகளை ஏற்றிச் செல்லக்கூடாது.

* வாகனத்தின் முன்புறமும் பின்புறமும் ‘On School Duty’ என ஆங்கிலத்திலும் "பள்ளிப் பணிக்காக" எனத் தமிழிலும் எழுதப்பட்ட பலகை பொருத்தப்பட்டிருக்க வேண்டும்.
* வாகனங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பாக ஏற்றி இறக்கி, பெற்றோரிடமோ அல்லது அனுமதிக்கப்பட்ட நபரிடமோ சேர்க்கப்பட்டதை ஓட்டுநர் உறுதி செய்துகொள்ள வேண்டும். மேலும், பள்ளிக் குழந்தைகள் பாதையைக் கடந்துசெல்வதற்கு உதவிட வேண்டும்.
மேற்படி அறிவுரைகள், போக்குவரத்துத்துறை மற்றும் காவல்துறை அலுவலர்களால் செயலாக்கம் செய்யப்பட்டும் தவறு நடக்கும் பட்சத்தில், வாகன ஓட்டுநர் மற்றும் உரிமையாளர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. பள்ளி முதல்வர்கள், பெற்றோர்கள், வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் பள்ளிக் குழந்தைகளை வாகனங்களில் அழைத்துச் செல்லும்போது, பள்ளிக் குழந்தைகள் பாதுகாப்பில் உரிய கவனம் செலுத்திட, மேற்கண்ட அறிவுரைகளைத் தவறாது பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்" என்று கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக