வெள்ளி, 28 ஜூலை, 2017

தலைமுடி அளவுக்கதிகமா உதிர்ந்து சொட்டையாகுதா?

முடி உதிர்தல் பிரச்சனை பெரும்பாலனோருக்கு இருக்கிறது. பெண்களை இந்த பிரச்சனை அதிகமாக தாக்குவதில்லை.
ஆனால் ஆண்கள் வாழ்க்கை முறை, மாத்திரைகள், சத்தான உணவு இல்லாமை, பராமரிப்பு குறைவு , பரம்பரை பிரச்சனை ஆகியவற்றின் காரணமாக சொட்டை விழுகின்றது.

இந்த பிரச்சனையை போக்க ஆயுர்வேத முறையில் பல தீர்வுகள் உள்ளன. இவற்றை ஒரு முறை மட்டுமே செய்து விட்டு பலனை எதிர்பார்ப்பது முட்டாள் தனம். தொடர்ந்து செய்து உண்மையான பலனை அனுபவியுங்கள்.

1. கீழே ஊற்ற வேண்டாம்

நாம் வீண் என நினைத்து கிழே ஊற்றும் சாதம் வடித்த தண்ணீர் ஏராளமான சத்துகள் அடங்கியுள்ளன. இந்த சாதம் வடித்த நீருடன் (வடிகஞ்சி) சீகைக்காய் பவுடரைக் கலந்து தேய்த்து வாரத்திற்கு இரண்டு முறை குளிக்க வேண்டும். இதனால் முடி அடர்த்தியாக வளரும். முடிக்கு பளபளப்பும் கிடைக்கும்.

2. ஊட்டச்சத்து

முடி வளர்ச்சிக்கு உடலில் தேவையான ஊட்டச்சத்து இருக்க வேண்டியது மிகமிக முக்கியம். சந்தைகளில் கிடைக்கும் பல எண்ணெய்களையும், ஷாம்புகளையும் உபயோகிப்பதை காட்டிலும் சத்தான ஆகாரங்கள் முடி வளர்ச்சிக்கு உதவும். பச்சைக் காய்கறிகளை நிறைய சாப்பிடுவதும் கறிவேப்பிலை, நெல்லிக்காய், பால், பழங்கள், முளைக்கட்டிய தானியங்கள், வெண்ணெய், கோதுமை உணவுகள், சோயாபீன்ஸ், பருப்பு வகைகளை நிறைய உணவாகக் கொள்வதும் முடியை நன்கு வளர்த்திட ஏதுவாகும்.

3. செம்பருத்தி

செம்பருத்திப்பூவின் சாறை முடி உதிர்ந்த இடத்தில் தேய்த்து வர முடி நன்றாக வளரும். ஆலிவ் ஆயிலை முதல் நாள் இரவு சூடாக்கி தலையில் தேய்த்து மறுநாள் காலையில் குளித்தால், முடி பளபளப்பாகவும், நன்றாகவும் வளரும்.

4. தைலம்

தாமரை இலையை அரைத்துச் சாறெடுத்து நல்லெண்ணெயுடன் கலந்து தைலமாக காய்ச்சிக் கொள்ளவும். இதனை தலை சொட்டையான இடத்தில் தேய்த்துவர, அந்த இடத்தில் முடி கருகருவென வளர்ந்துவிடும். தாமரைப்பூ கஷாயத்தை காலை, மாலை குடித்து வர நரை முடி அகன்று முடி கருமையாக வளரும்.

5. கீழாநெல்லி

வழுக்கையில் முடி வளர கீழாநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும்.

6. வெந்தயம்

வெந்தயத்தை தண்ணீர்விட்டு அரைத்து , அந்த விழுதை தலையில் தேய்த்து, அரைமணிநேரம் கழித்து குளிக்க வேண்டும். அடிக்கடி இவ்வாறு செய்வதால் முடி கொட்டாது. நன்றாக வளரும்.

7. பாதாம் எண்ணெய்

பாதாம் எண்ணெயை தினசரி முடியின் வேர்கால்களில் இட்டு நன்றாக மசாஜ் செய்து வர முடி நன்றாக வளரும்.

8. இயற்கை முறை

தலைமுடியை நெல்லிக்காய் பொடி அல்லது சிகைக்காய் கொண்டு மசாஜ் செய்து அலசிவாருங்கள். முடி வளர்ச்சி உண்டாகும். முடிக்கு ஷாம்பு உபயோகிப்பதாக இருந்தால், இயற்கை ஷாம்புகளை கொண்டு முடியை அலசுங்கள்.

9. மலச்சிக்கல்

மலச்சிக்கல் இருந்தால், உடல் சூடு அதிகமாகி, உடலில் பித்தம் அதிகரித்து, தலைமுடி கொட்ட ஆரம்பித்துவிடும். எனவே மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.

10. நேர்வாளங்கொட்டை

சொட்டையான இடத்தில் முடி வளர நேர்வாளங்கொட்டையை உடைத்து பருப்பை எடுத்து நீர் விட்டு மைய அரைத்து சொட்டை உள்ள இடத்தில் தடவிவர முடிவளரும்.

11. கொத்தமல்லி

கொத்தமல்லி இலைச்சாற்றினைக் கொண்டு, தலைமுடியின் வேர்க்காலில் மசாஜ் செய்து வந்தால் தலைமுடி கருமையாய் வளரும். தேங்காய் எண்ணெய்யுடன் சிறிது எலுமிச்சைச்சாறு கலந்து தலையில் மசாஜ் செய்துவர, முடி நன்கு வளரும்.

12. வேப்பிலை

ஒரு கைப்பிடி வேப்பிலையை எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேக வைத்த நீரைக் கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும். தலைமுடிக்கு எந்த பிரச்சனையும் வராது.

13. முடி உதிர்வு

குறைய கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நிற்கும். வெந்தயம், குன்றிமணி பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்திற்கு பின் தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.

14. புழுவெட்டு

புழுவெட்டு மறைய நவச்சாரத்தை தேனில் கலந்து தடவினால் திட்டாக முடிகொட்டுதலும் புழுவெட்டும் மறையும்.

15. முடி கருமையாக

முடி கருப்பாக ஆலமரத்தின் இளம்பிஞ்சு வேர், செம்பருத்தி பூ இடித்து தூள் செய்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி ஊறவைத்து தலைக்கு தேய்த்து வர முடி கருப்பாகும்.

16. மினுமினுக்க..!

தலை முடி கருமை மினுமினுப்பு பெற அதிமதுரம் 20 கிராம், 5 மில்லி தண்ணீரில் காய்ச்சி ஆறிய பின் பாலில் ஊறவத்து 15 நிமிடம் கழித்து கூந்தலில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைத்து குளிக்க வேண்டும்.

17. செம்பட்டை போக!

செம்பட்டை முடி நிறம் மாற மரிக்கொழுந்து இலையையும் நிலாவரை இலையையும் சம அளவு எடுத்து அரைத்து தலைக்கு தடவினால் செம்பட்டை முடி நிறம் மாறும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக