சனி, 1 ஜூலை, 2017

பான் - ஆதார் இணைப்பில் குழப்பம் நீடிப்பு.



புதுடில்லி: 'ஜூலை 1க்குள், 'பான்' எனப்படும் நிரந்தர கணக்கு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்காதோரின் பான் கார்டுகள் முடக்கப் படும்' என வெளியான தகவலால், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து, மத்திய அரசு இன்னும் சரியான விளக்கம் அளிக்காத தால், மக்கள் மத்தியில் குழப்பம் நீடிக்கிறது.
மத்திய, மாநில அரசின் சில திட்டங்களின் கீழ் பலன் அடைய, ஆதார் எண் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு அமைப்பினர், சமூக ஆர்வலர்கள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில், வழக்கு தொடரப்பட்டுள்ளது.

எனினும், 'அரசின் மானிய திட்டங்களில் ஊழல் நடப்பதை தடுக்க, ஆதார் எண் கட்டாயமாக்கப் படுவது அவசியம்' என, மத்திய அரசின் சார்பில் எடுத்துரைக்கப்பட்டு உள்ளது. 

தவிர, 'நாட்டில் பெரும்பாலானோருக்கு ஆதார் எண் வழங்கப் பட்டுள்ளதால், இதில் எவ்வித சிரமமும் ஏற்படாது' என்றும், மத்திய அரசு, கோர்ட்டில் தெரிவித்துள்ளது. இதன் படி, சில முக்கிய திட்டங்களுக்கு ஆதார் எண் சமர்ப்பித்தலை கட்டாயமாக்க, சுப்ரீம் கோர்ட் ஒப்புதல் வழங்கியுள்ளது.:


இதையடுத்து, 'அரசின் நலத்திட்டங்களை பெற, ஆதார் எண் பெற்றவர்கள், ஆதார் எண்ணையும், பதிவு செய்து காத்திருப்போர், அதற்கான ஒப்புகை சீட்டு எண்ணையும் தர வேண்டும்.
'ஆதார் பதிவு செய்யாதோர், அரசின் அங்கீகரிக்கப் பட்ட ஏதேனும் ஒரு அடையாள அட்டை நகலை சமர்ப்பித்து, அரசு திட்டங்களின் கீழ் பலனைஅடைய லாம்; அவர்கள், விரைவில், ஆதார் எண் பெற பதிவு செய்ய வேண்டும்' எனவும் மத்திய அரசின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், 'வங்கிக் கணக்கு வைத்திருப்போர் அனைவரும், இந்த ஆண்டு இறுதிக்குள், வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும்' என, ஆர்.பி.ஐ., அறிவுறுத்தி உள்ளது. இதேபோல், வருமான வரி கணக்கு தாக்கலில் முக்கிய அம்சமாகத்திகழும், 'பான்' எனப்படும், நிரந்த கணக்கு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, 'ஜூலை 1க்குள், நிரந்தர கணக்கு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்காதோரின் பான் கார்டுகள் முடக்கப்படும்' என, சமூக வலைதளங்களிலும், சில இணையதளங்களிலும் தகவல் வெளியானது. எனினும், இது குறித்த முழு விபரம் அறியாத பலரும், நேற்று அவசர அவசரமாக, தங்கள் பான் எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்கும்முயற்சியில் ஈடுபட்டனர். 

இதனால், வருமான வரித்துறை இணையதளம், சிறிது நேரம் முடங்கியது.பான் - ஆதார் இணைப்பு குறித்து எழுந்துள்ள சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், மத்திய அரசின் சார்பிலோ, வருமான வரித்துறையின் சார்பிலோ, இதுவரை எவ்வித அதிகாரபூர்வ தகவலும் வெளியாகாததால், பொதுமக்களிடையே குழப்பமும், பீதியும் நீடிக்கிறது.
இது குறித்து, வருமான வரித்துறை வட்டாரங்கள் கூறியதாவது: ஜூலை, 1 முதல்,நிரந்தர கணக்கு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது. இந்த தகவல் தவறாக புரிந்து கொள் ளப்பட்டு, 'ஜூலை 1க்குள் இணைக்க வேண்டும்' என்ற வகையில் தவறான தகவல் பரவியுள்ளது. ஏற்கனவே, பான் அட்டை மற்றும் ஆதார் அட்டை பெற்றவர்கள், தங்கள் நிரந்தர கணக்கு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க அறிவு றுத்தப்பட்டுள்ளனர். பான் அட்டை பெற்று, இதுவரை ஆதார் எண் பெறாதோர், கூடிய விரைவில் ஆதார் எண் பெற பதிவு செய்யும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
'ஜூலை 1க்குள் நிரந்தர கணக்கு எண்ணையும், ஆதார் எண்ணை யும் இணைக்காதோர் பான் கார்டுகள் முடக்கப் படும்' என, சமூக வலைதளங்களில் பரவும் தகவல் முற்றிலும் தவறானது. இது குறித்து, பொதுமக்கள் பீதியடைய வேண்டாம்.இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக