புதன், 5 ஜூலை, 2017

காந்தி கிராம பல்கலையில் புதிய பட்டப்படிப்பு துவக்கம் : துணைவேந்தர் தகவல்.

காந்தி கிராம கிராமிய பல்கலையில் வேலைவாய்ப்புள்ள 'பால் உற்பத்தியும், தொழில்நுட்பமும்' எனும் புதிய பட்டப்படிப்பு இந்த ஆண்டு முதல் துவங்க உள்ளதாக துணைவேந்தர் நடராஜன் தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் கூறியதாவது: இந்த பல்கலையில் மத்திய அரசின் தொழில் முனைவோர் மேம்பாட்டு மைய அனுமதியுடன் 'பால் உற்பத்தியும், தொழில் நுட்பமும்' என்ற மூன்று ஆண்டு புதிய பட்டப்படிப்பு துவக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இப்பாடப்பிரிவில் பிளஸ் 2 அறிவியல், கலை பாடங்களில் தேர்ச்சி பெற்றவர்கள் சேரலாம். 


செயல்முறை பாடங்கள் : இந்த பட்டப்படிப்பில் கறவைமாடு வளர்த்தல், பராமரிப்பு, பால் உற்பத்தி, பாலை மதிப்பு கூட்டிய பொருட்களாக மாற்றுதல் போன்ற பாடங்கள் உள்ளன. இப்படிப்பு 80 சதவீதம் தொழிற்சாலைகளில் செய்முறையாகவும், 20 சதவீதம் பாடங்களாகவும் இருக்கும்.

சான்றிதழ் படிப்புகள் : ஒரு ஆண்டில் 25 மாணவ, மாணவியர் சேர்க்கப்படுவர். மூன்றாண்டு படிப்பில் சேரும் மாணவர்கள், ஒரே ஆண்டில் படிப்பை முடித்து கொள்ள விரும்பினால் டிப்ளமோ சான்றிதழும், இரண்டு ஆண்டுகளில் படிப்பை நிறைவு செய்தால் அட்வான்ஸ் டிப்ளமோ சான்றும், மூன்றாண்டுகளும் நிறைவு செய்தால் பட்டப்படிப்பு சான்றிதழும் வழங்கப்படும் என்பது இதன் சிறப்பு. இவ்வாறு அவர் கூறினார்.

வேலைவாய்ப்பு ஏராளம் : டீன் சீத்தாலட்சுமி கூறியதாவது: உணவு பாதுகாப்பு சட்டம் நடைமுறைக்கு வந்ததால் பாலில் தரக்கட்டுப்பாடு மேம்படுத்த வேண்டியுள்ளது. இதனால் இத்துறையில் ஏராளமான வேலை வாய்ப்புகள் உள்ளன.மாடு வளர்ப்பு முறையில் இருந்து பால் கறவை, பதப்படுத்துதல், மதிப்பு கூட்டுதல் போன்ற தொழில் நுட்பங்கள் வேண்டியுள்ளது. இதனால் ஆவின் மற்றும் தனியார் பண்ணைகளில் வேலைவாய்ப்பு அதிகம். இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக