ஞாயிறு, 23 ஜூலை, 2017

ஸ்மார்ட் கார்டு கிடைக்காதவர்கள் செய்யவேண்டியவை!!!

சென்னையில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு ஸ்மார்ட் கார்டு கிடைக்கவில்லை என்றால் www.tnpds.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் எனத் தமிழக அரசு நேற்று (ஜூலை,21) அறிக்கை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் ரேஷன் கார்டுக்கு பதிலாக ஸ்மார்ட் கார்டு வழங்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் படி, கடந்த ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் ஸ்மார் கார்டு வழங்கப்பட்டு வருகிறது. சென்னையில் சில குடும்ப அட்டைதாரர்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளை இதுவரை பெறவில்லை என தெரிவித்துள்ளனர். எனவே, இது வரை ஸ்மார் கார்டுகளை பெறாத குடும்ப அட்டைதாரர்கள் www.tnpds.gov.in என்ற இணைய முகவரியில் பயனாளர் நுழைவு பகுதியில் குடும்ப அட்டைக்குப் பதிவு செய்யப்பட்ட செல்பேசி எண்ணைப் பதிவு செய்து நுழையலாம்.

அதைத் தொடர்ந்து, பயனாளரின் செல்பேசி எண்ணுக்கு ஒன் டைம் பாஸ்வோர்டு (ஓ.டி.பி) அனுப்பப்படும். அதை பதிவு செய்தால் திரையில் ஸ்மார்ட் கார்டு விபர மாற்றம் பகுதி தோன்றும். அதில், குடும்ப தலைவரின் புகைப்படம் மற்றும் இதர விவரங்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் முறையாகப் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதா என்பதைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

முறையாகப் பதிவு செய்யப்படவில்லை என்றால், விவரங்கள் திருத்தம் செய்ய வேண்டும். அதன் பின்னர் மின்னணு குடும்ப அட்டை அச்சிடப்படும்.

*அட்டைதாரர் இணைய வசதி மூலமாக www.tnpds.gov.in என்ற இணையதளத்தில் புகைப்படத்தினை பதிவேற்றம் செய்யலாம் அல்லது TNEPDS என்ற செல்பேசி ஆப்-ஐ பயன்படுத்தி திருத்தங்கள் மேற்கொண்டு புகைப்படத்தினை பதிவேற்றம் செய்யலாம்.

*அரசு இ-சேவை மையம் மூலமாகவும் திருத்தங்கள் மேற்கொள்ளலாம்.

*இணைய வசதி இல்லாதவர்கள் , ரேஷன் கடைகளில் குடும்ப அட்டை நகலுடன் தங்கள் புகைப்படத்தை ஒட்டி ரேஷன் கடை பணியாளரிடம் வழங்கலாம்.

*அட்டைதாரரின் பகுதிக்குட்பட்ட உணவுப் பொருள் வழங்கல் உதவி ஆணையாளர் அலுவலகத்தில் புகைப்படத்தை தங்களின் விவரங்களுடன் குடும்ப அட்டை நகலில் ஒட்டி வழங்கலாம்.

சரியான விவரங்கள் மற்றும் புகைப்படம் இல்லாததால் ஸ்மார்ட் கார்டுகள் அச்சிடப்படவில்லை. அச்சிடப்படாத அட்டைதாரர்கள் விபரம் ரேஷன் கடைகளில் ஒட்டி விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக