ஞாயிறு, 16 ஜூலை, 2017

மாவுப்பூச்சி மேலாண்மை :

உலகில் பல வகையான மாவுப் பூச்சிகள் உள்ளன. அவற்றில் ஒரு வகையான மாவுப்பூச்சிகள்தான் பாராகாக்கஸ் மார்ஜினேட்டஸ் (Para Coccus marginatus) எனும் பப்பாளி மாவுப்பூச்சி. இப்பூச்சியின் தாக்குதல் தமிழ்நாட்டில் முதன் முதலாக ஜுலை 2008 ஆம் ஆண்டு கோயமுத்தூர் பகுதியில் பப்பாளியில் கண்டறியப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்திலும் இப்பூச்சியின் தாக்குதல் காணப்படுகிறது.


இப்பூச்சிகள் பப்பாளியை மட்டும் அல்லாது மல்பரி, மரவள்ளி, பருத்தி, கொய்யா, கத்தரி, தக்காளி, செம்பருத்தி, செவ்வந்தி, போன்ற பயிர்களையும், களைச்செடிகளையும் தாக்குகிறது எதிர்காலத்தில் மக்காச்சோளம் போன்ற பிற பயிர்களையும் தாக்கக்கூடும். காற்று, பறவைகள், விலங்குகள், தண்ணீர் மற்றும் மனிதர்களால் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எளிதில் பரவக்கூடும்.

மாவுப்பூச்சி வேகமாக பரவக் காரணங்கள் :

இப்பூச்சியின் உடல் முழுவதும் மெழுகு மற்றும் மாவு போன்ற வெள்ளை நிறப் பொருளால் கவரப்பட்டிருப்பதால் இதனை எளிதில் கட்டுப்படுத்த முடியவில்லை.

அயல்நாட்டு பூச்சி என்பதாலும் அதற்கு இயற்கை எதிரிகள் இல்லாத காரணத்தாலும் இப்பூச்சிகள் மிக வேகமாக பரவி வருகிறது. ஒரு வருடத்தில் இம்மாவுப்பூச்சி 15 முறை இனப்பெருக்கம் செய்கிறது. மேலும் இவை அதிக முட்டையிடும் திறன் கொண்டது. ஒரு பூச்சி 500 முதல் 600 முட்டைகள் ஒரு வருடத்தில் இடும். இதனால் இதன் எண்ணிக்கை அதிக அளவில் பெருகி மிகுந்த சேதாரத்தை ஏற்படுத்துகிறது.

மாவுப்பூச்சி தாக்குதலின் அறிகுறிகள் :

* இலையின் அடிப்பகுதி குருத்து, கிளைகள் மற்றும் தண்டுப் பகுதிகளில் வெள்ளையாக அடைபோல மாவுப்பூச்சிகள் படர்ந்திருக்கும்.

* சிவப்பு மற்றும் கருப்பு எறும்புகளின் நடமாட்டம் இருக்கும்.

* பளபளப்பான ஒட்டும் தன்மை கொண்ட தேன் போன்ற கழிவுகளும் அதன்மேல் கரும்பூசண வளர்ச்சியும் காணப்படும் அதிக தாக்குதலில் செடிகள் இலைகள் வாடி கருகிவிடும்.

* இப்பூச்சிகளை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை முறையை கடைப்பிடிக்க வேண்டும்.
களைகளை அகற்றி வயல்களை சுத்தமாக வைக்க வேண்டும்.

* பூச்சிகள் தாக்கப்பட்ட செடிகள் மற்றும் களைச்செடிகளை பூச்சிகள் அதிகம் பரவாமல் பிடுங்கி அழிக்கவும்.

* வெயில் குறைவாக ( காற்றில் ஈரப்பதம் அதிகமாக உள்ளபோது) இதன் தாக்குதல் இருக்கும் இந்த நாட்களில் வெர்டிசீலியம் லெகானி எனும் உயிரியல் பூச்சி கொல்லியை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 5 கிராம் என்ற விகிதத்தில் ஒட்டும் திரவத்தை சேர்த்து பயன்படுத்தலாம். ( இதனை மல்பரியில் பயன்படுத்தக் கூடாது)

இயற்கை வழி மேலாண்மை :

மாவுப்பூச்சியை கட்டுப்படுத்த நன்மை செய்யக் கூடிய பொறிவண்டுகள் கிரிப்டோலிமஸ் அல்லது ஸ்கிம்னஸ் என்ற வண்டுகளை ஒரு ஏக்கருக்கு 500 முதல் 600 வண்டுகள் வாங்கி தோட்டத்தில் விட வேண்டும்.

அல்லது ஒரு லிட்டர் தண்ணீருக்கு வேப்பங்கொட்டை கரைசல் 5மில்லி என்ற அளவில் கலந்து தெளிக்கலாம் அல்லது மீன்எண்ணெய் சோப்பு ஒருலிட்டர் தண்ணீருக்கு 15 கிராம் அவற்றுடன் ஒட்டும் திரவம் 5 முதல் 10 மில்லிவரை கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம்.

அல்லது இஞ்சி 250 கிராம் பூண்டு 250 கிராம் பச்சை மிளகாய் 250 கிராம் மூன்றையும் சேர்த்து அரைத்து இரண்டு லிட்டர் கோமியம் சேர்த்து இரண்டு நாட்கள் ஊறவைத்து இந்த கரைசலில் 300 மில்லி 10 லிட்டர் தண்ணீர் என்ற விகிதத்தில் கலந்து அவற்றுடன் ஒட்டும் திரவம் சேர்த்து 10 நாட்கள் இடைவெளியில் தேவைக்கேற்ப தெளித்து கட்டுப்படுத்தலாம்.

அல்லது அரைக்கிலோ அறுவாள்மனைத்தழை 2 லிட்டர் தண்ணீர் என்ற விகிதத்தில் கலந்து நன்றாக கொதிக்கவைத்து ஒரு லிட்டராக சுண்டியவுடன் இறக்கி ஆறவைத்து 20 கிராம் பெருங்காயத்தூள் சேர்த்து 10 லிட்டருக்கு ஊற்றி தெளித்தாள் மாவுப்பூச்சி கட்டுப்படுகிறது.

குறிப்பு - இவை 10 லிட்டர் தண்ணீருக்கு அதாவது ஒரு டேங்கிற்கு மட்டும் மேலும் கூடுதலாக வேண்டும் என்றால் நாம் எவ்வளவு அடிக்கின்றோமோ அந்த விகிதத்திற்கு அரிவாள்மனைத்தழை – தண்ணீர், பெருங்காயம் கூடுதலாக தேவைக்கேற்ப சேர்த்துக் கொள்ள வேண்டும்.                    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக