தமிழகத்தில் பாடத்திட்டத்தை மாற்றியமைக்க நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். இதையடுத்து அக் குழுவின் செயல்பாடுகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய பள்ளிக்கல்வித் துறை செயலருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
ராமநாதபுரம் மாவட்டம், கேணிக்கரை செய்யது அம்மாள் மேல்நிலைப்பள்ளி தாளாளர் பாபு அப்துல்லா, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், இந்தியாவில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கு நீட் எனும் நுழைவுத் தேர்வை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. நீட் தேர்வில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படுகின்றன. இதனால் மாநில பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்கள் நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற முடியவில்லை.
தமிழகத்தில் சிபிஎஸ்இ பாடத் திட்டம் அமலில் இருந்தால் நீட் போன்ற தேர்வுகளில் தமிழக மாண வர்கள் அதிகளவில் வெற்றி பெறு வர். எனவே, தமிழகத்திலிருக்கும் அனைத்து அரசு மற்றும் மெட்ரிக் குலேஷன் பள்ளிகளிலும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை அமல்படுத்த உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு, நீதிபதிகள் கே.கே. சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் வாதிடு கையில், “தமிழகத்தில் கல்வித் தரத்தை மேம்படுத்தும் வகையில் பாடத்திட்டத்தை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது” என்றார்.
இதையடுத்து பாடத்திட்ட நிபுணர் குழுவின் உறுப்பினர்கள், குழுவின் செயல்பாடுகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய பள்ளிக்கல்வித்துறை செயலருக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஆகஸ்ட் 3-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக