வியாழன், 21 செப்டம்பர், 2017

அரசு பள்ளி ஆசிரியர்களின் பிளஸ் 2 சான்றிதழ் சரிபார்ப்பு.

தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின், பிளஸ் 2 சான்றிதழை சரிபார்க்க, அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். மத்திய அரசின், கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, ஒன்று முதல், 10ம் வகுப்பு வரை பாடம் நடத்தும், பட்டதாரி மற்றும் டிப்ளமா ஆசிரியர்கள், அரசின் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். 2009ல், இந்த கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்தன.

ஏற்கனவே நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள், ஐந்து ஆண்டுகளில், ஆசிரியர் தகுதித் தேர்வை முடிக்க அவகாசம் வழங்கப்பட்டது. 2014ல், அவகாசம் முடிந்தும், ஏராளமான ஆசிரியர்கள், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை. அதனால், அவகாசத்தை, 2019 வரை, மத்திய அரசு நீட்டித்துள்ளது. இதன்படி, தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத தனியார் பள்ளி ஆசிரியர்கள், மத்திய அரசின் தேசிய திறந்த நிலை பள்ளியான, என்.ஐ.ஓ.எஸ்., அமைப்பில், டிப்ளமா கல்வியியல் படிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களில், பிளஸ் 2வில், 50 சதவீத மதிப்பெண் பெறாதோர், என்.ஐ.ஓ.எஸ்., டிப்ளமா படிப்பில் தேர்ச்சி பெற உத்தரவிடப்பட்டுஉள்ளது.
எனவே, தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றும், 65 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களின், பிளஸ் 2 சான்றிதழ்களை சரிபார்க்குமாறு, மாவட்ட அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். 


இதில், 50 சதவீத தேர்ச்சி பெறாதோர், மத்திய அரசின் படிப்பை, 2019 மார்ச், 31க்குள் முடிக்காவிட்டால், பணியில் இருந்து நீக்கப்படுவர் என, எச்சரிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக