புதன், 20 செப்டம்பர், 2017

ஆச்சரியப் பள்ளி `QR CODE’ மூலம் ஆன்லைன் தேர்வு - ஆச்சரியங்களை நிகழ்த்தும் நடுநிலைப் பள்ளி.

க்யூ ஆர்’ கோடு மூலம் மாணவர்கள் ஆன்லைன் தேர்வு எழுதுகின்றனர்; ஸ்மார்ட் வகுப்பறையில் உள்ள தொடுதிரையை மாணவர்களே கையாள்கின்றனர்; கணினி ஆய்வகத்தில் டிஜிட்டல் முறையிலான கல்வி கற்க மாணவர்கள் பயிற்றுவிக்கப்படுகின்றனர்.



இவ்வாறு தனியார் பள்ளிகளையெல்லாம் விஞ்சும் அளவில் திருப்பூர் மாவட்டம் சுண்டக்காம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தகவல் தொழில்நுட்பம் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. இதன் காரணமாக தனியார் பள்ளிகளில் பயின்ற இந்த கிராமத்தின் பெரும்பகுதி மாணவர்கள் இப்போது இந்த அரசுப் பள்ளியில் சேர்ந்து விட்டனர்.
   
பல அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகள் தொடங்கிய பிறகே அங்கு மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால் சுண்டக்காம்பாளையத்தில் உள்ள இந்த அரசு நடுநிலைப் பள்ளியில் தமிழ் வழி வகுப்புகள் மட்டுமே உள்ளன. எனினும் தமிழ் வழியில் இங்கு பயிலும் மாணவர்களின் கற்றல் திறன் மிகச் சிறப்பாக இருப்பதால், ஆண்டுக்கு ஆண்டு அதிக அளவிலான மாணவர்கள் இந்தப் பள்ளிக்கு வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் சுண்டக்காம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்களுடன் ஆசிரியர்கள்.
“நவீன தகவல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி கற்றல், கற்பித்தல் நடவடிக்கைகள் நடைபெறுகின்றன; இதனால் மாணவர்களிடம் கற்றல் ஆர்வம் அதிகரிக்கிறது; பாடங்களை புரிந்துகொண்டு படிக்கிறார்கள்; மேலும் இயல்பாகவே அவர்களிடம் கற்றல் திறன் மிக வேகமாக வளர்கிறது; இந்த வளர்ச்சிப் போக்கை பெற்றோர்களாலும் உணர முடிகிறது; அதனால்தான் எங்கள் பள்ளிக்கு அதிக மாணவர்கள் வருகின்றனர்” என்று பள்ளி ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
வகுப்பறை நடவடிக்கைகளில் மிகச் சிறப்பாக தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தியதற்கான தேசிய விருது இந்தப் பள்ளி ஆசிரியர் வெ.நேசமணிக்கு கிடைத்துள்ளது. கடந்த 5-ம் தேதி புதுடெல்லியில் நடைபெற்ற விழாவில் குடியரசு துணைத் தலைவரிடமிருந்து இந்த விருதை நேசமணி பெற்றார்.
சுண்டக்காம்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளி வகுப்பறைகளில் நவீன தகவல் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படும் விதம் பற்றி அவர் கூறியதாவது:
அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் வழங்கப்பட்ட லேப் டாப்களை மாணவர்கள் பயன்படுத்த முதலில் கற்றுக் கொடுத்தோம். உதாரணமாக தமிழிலோ, ஆங்கிலத்திலோ செய்யுள் பாடல்களைக் காகிதத்தில் எழுதும் ஒரு மாணவன், வெறும் 4 வரிகள் மட்டுமே எழுதினால், அதே மாணவன் லேப் டாப்பில் எழுதும்போது 6 முதல் 8 வரிகள் வரை எழுதுவதை பார்க்க முடிந்தது. லேப் டாப் கருவியைப் பயன்படுத்த வேண்டும் என்ற ஆர்வத்தில், வழக்கத்தை விட கூடுதல் முயற்சி செய்து மனப்பாடப் பகுதிகளை படிப்பதையும், கணக்குகளை சரியாக செய்ய முயற்சிப்பதையும் கண்டோம்.
கணினிவழிக் கற்றலில் ஈடுபட்டுள்ள மாணவர்கள்.
நோட்டுகள், தேர்வுத் தாள்களில் எழுதுவதை விடவும் கம்ப்யூட்டரில் எழுதுவதில் மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டினர். குறிப்பாக கற்றல் திறனில் பின்தங்கிய அல்லது மெதுவான கற்றல் திறன் உள்ள மாணவர்களிடம் கற்றல் வேகம் அதிகரிப்பதை உணர முடிந்தது.
ஆகவே, இன்னும் சில கம்ப்யூட்டர்களை கூடுதலாக வாங்கி, மாணவர்கள் கம்ப்யூட்டர் பயன்படுத்துவதை அதிகப்படுத்தினோம். இப்போது எங்கள் பள்ளியில் புரொஜக்டர் வசதியுடன் கூடிய மூன்று ஸ்மார்ட் வகுப்பறைகள் உள்ளன. அதில் ஒரு ஸ்மார்ட் வகுப்பறையில் தொடுதிரை வசதி உள்ளது. பாடப் புத்தகங்களில் உள்ள பல பாடங்களை அனிமேஷன் பட வடிவில் உருவாக்கியுள்ளோம். புத்தகங்களில் படிக்கும் பாடங்களை காட்சி வடிவில் பெரிய திரைகளில் பார்க்கும்போது மாணவர்கள் பாடங்களை மிக எளிதாக புரிந்து கொள்கின்றனர்.
அதேபோல் தேர்வுக்கான கேள்வித் தாள்களை டிஜிட்டல் முறையில், அதாவது ‘க்யூ ஆர்’ கோடு வடிவில் தயாரிக்கிறோம். ‘க்யூ ஆர்’ கோடு படத்தை வகுப்பறை சுவற்றில் ஒட்டி விடுவோம். ஆண்ட்ராய்டு தொழில்நுட்ப வசதியுடன் கூடிய செல்போன்களை மாணவர்களிடம் கொடுத்து விடுவோம்.
மாணவர்கள் சுவற்றில் ஒட்டப்பட்டிருக்கும் ‘க்யூ ஆர்’ கோடு படத்தை செல்போன் மூலம் ஸ்கேன் செய்வார்கள். உடனே கேள்வித் தாளை அவர்கள் பார்க்க முடியும். அதே செல்போனில் கேள்விகளுக்கு கீழ் மாணவர்கள் பதிலளிக்கலாம். எல்லா கேள்விகளுக்கும் பதிலளித்த பிறகு ‘சமர்ப்பி’ என்ற பொத்தானை கிளிக் செய்தால் மாணவர்கள் அளித்த விடை சர்வரில் சேமிக்கப்பட்டு விடும். மேலும், மாணவர்கள் அப்போதே வேறொரு பொத்தானை கிளிக் செய்து தாங்கள் அளித்த விடை சரிதானா என்பதையும், மொத்தம் எத்தனை மதிப்பெண்கள் என்பதையும் தெரிந்து கொள்ள முடியும்.
இவ்வாறு உடனுக்குடன் விடைகளை மதிப்பீடு செய்ய முடிவதால், மாணவர்கள் தாங்கள் செய்த பிழைகளை உடனே உணர்ந்து, சரி செய்து கொள்ள முடிகிறது. அது மட்டுமின்றி, அதிகபட்ச கேள்விகளுக்கு சரியான பதிலை எழுத வேண்டும் என்பதில் எல்லா மாணவர்களுமே கூடுதல் அக்கறை செலுத்துகின்றனர்.
இதுபோன்ற தேர்வுகளை செல்போனில் எழுதுவது சற்று சிரமமாக உள்ளது. ஆகவே, ஆண்ட்ராய்டு வசதி கொண்ட டேப் (Tab) மாணவர்களுக்கு வழங்க திட்டமிட்டுள்ளோம். இதற்கு நன்கொடையாளர்கள் யாராவது கிடைப்பார்களா என தேடி வருகிறோம்.
இவ்வாறு ஆசிரியர் நேசமணி கூறினார்.
தலைமை ஆசிரியர் காளியப்பன்
2010-ம் ஆண்டு இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியராக சு.காளியப்பன் பொறுப்பேற்றார். அதன்பிறகே இங்கு பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. “தனியார் பள்ளிகளுடன் போட்டி போடுவது என்பது எங்களது இலக்கு அல்ல; மாறாக உலகத்தரம் வாய்ந்த தரமாக கல்வியை, எங்கள் கிராமத்துக் குழந்தைகளுக்கு இந்த அரசுப் பள்ளியிலேயே வழங்க வேண்டும் என்பதே நோக்கம்” என்கிறார் காளியப்பன்.
எங்கள் பள்ளியில் யோகா வகுப்புகள் நடைபெறுகின்றன. பாடப் புத்தகங்களில் உள்ள கருத்துகளை மாணவர்களே நாடகங்களாக, பாடல்களாக, கதைகளாக மாற்றுகின்றனர். மாணவர்களின் இத்தகைய படைப்பாற்றலை வெளிப்படுத்த வெள்ளிக்கிழமை தோறும் நடைபெறும் வெள்ளிமன்றம் சிறந்த மேடையாக அமைகிறது. இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை நடைபெறும் இலக்கிய மன்றக் கூட்டங்களில் எழுத்தாளர்களுடன் சேர்ந்து எங்கள் மாணவர்களும் உரையாற்றுகின்றனர்”
இவ்வாறு பன்முகத் திறன்களை வளர்க்க சுண்டக்காம்பாளையம் பள்ளியில் உள்ள ஏற்பாடுகள் பற்றி தலைமை ஆசிரியர் காளியப்பன் சொல்லிக் கொண்டே போகிறார்.
தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கெல்லாம் வழிகாட்டும் ஆச்சரியப் பள்ளியாக திகழ்வதால், இந்தப் பள்ளிக்கு இப்போது உள்ளூர் மாணவர்கள் மட்டுமின்றி தாளப்பதி, ஓட்டுவிளாங்காடு, செஞ்சேரியம்பாளையம், அண்ணாநகர், செங்காளிபாளையம், புதுவலசு, எம்ஜிஆர் நகர், காட்டுவலசு என சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் வருகின்றனர்.
தலைமை ஆசிரியரை தொடர்பு கொள்ள : 98657 79126

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக