ஆசிரியர்களின் பணிப்பதிவேட்டில் பல்வேறு பதிவுகள் விடுபட்டுள்ளதால் அவைகளை கணினிமயமாக்குவதில் சிக்கல் எழுந்துள்ளது. தமிழகம் முழுவதும் தொடக்கக் கல்வித்துறையின் கீழ் 38 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. இதில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இவர்களது பணிப்பதிவேடு உள்பட அனைத்து பதிவேடுகளும் உதவி தொடக்கக்கல்வி அலுவலகம் மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது. கடந்த டிசம்பரில் ஆசிரியர்களின் பணிப்பதிவேடுகளை கணினியில் பதிவேற்றம் செய்து, டிஜிட்டல் முறையில் பராமரிப்பதற்கான பணி தொடங்கப்பட்டது. அதற்கு முன்னதாக ஆசிரியர்களின் பணிப்பதிவேட்டில் எவ்வித விடுதலும் இல்லாமல் பதிவுகள் சரி செய்யப்பட வேண்டும் என, தொடக்கக்கல்வி இயக்குநரகம் சார்பில் உத்தரவிடப்பட்டது.
இதையடுத்து ஆசிரியர்களிடம் பதிவேடு வழங்கப்பட்டு விடுதல்களை சரி செய்யும் முகாம் மாவட்டந்தோறும் நடத்தப்பட்டது. இதில் பல்வேறு பதிவுகள் விடுபட்டதால் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பதிவுகள் இல்லாத காலக்கட்டத்தில் பணியாற்றிய அதிகாரிகள்தான், பதிவுகளை சரி செய்து தர வேண்டுமென உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள் தெரிவித்தனர். இதனால் மேலும் சிக்கல் ஏற்பட்டது. தற்போது வரை பதிவுகள் சரி செய்யும் பணியே முடிவடையவில்லை. இதனால் கருவூலம் மூலம் கணினிமயமாக்குவதில் மேலும் தாமதம் ஏற்படும் நிலை நிலவுகிறது.
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சிவகங்கை மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டியன் கூறுகையில், ‘‘பணிப்பதிவேடு என்பது ஊதியம், பணி மாறுதல், பதவி உயர்வு, கல்வித்தகுதி, வாரிசுதாரர் நியமனம் உள்ளிட்ட அனைத்து விபரங்களும் இருக்கும் மிக முக்கிய ஆவணமாகும். அதில் பதிவுகள் விடுபட்டதற்கு அதிகாரிகள்தான் பொறுப்பு. 6 மாதத்திற்கு ஒரு முறை ஆசிரியர்கள் பணிப்பதிவேட்டை முறையாக பெற்று நகல் எடுக்கலாம் என்ற விதி உள்ளது. எனினும் பல்வேறு அலுவலகங்களில் இது கடைபிடிக்கப்படுவதில்லை. அவ்வாறு செய்திருந்தால் விடுதல்கள் அப்போதே சரி செய்யப்பட்டிருக்கும். எனவே, விடுபட்ட பதிவுகள் அனைத்தையும் அதிகாரிகள் உடனடியாக சரி செய்ய வேண்டும். கணினிமயமாக்கலை மேலும் தாமதப்படுத்தாமல் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக