ஞாயிறு, 16 ஜூலை, 2017

கல்வி என்னும் வெடிவைத்து தகர்த்த புரட்சியாளன்.

பலத்த மழை.. மிக அடர்த்தியாக மிக வேகமாக அது கொட்டிக்கொண்டிருந்தது.. அந்த சிறுவன் மட்டும் புத்தகப்பையை நெஞ்சில் அணைத்தபடி.மழையின் ஊடே அந்த அகலமான வீதியில் நடந்து போய்க்கொண்டிருந்தான்.சில நிமிடங்களுக்கு முன்னதாக இன்று எவ்வளவு மழை பெய்தாலும் நான் கட்டாயம் பள்ளிக்குபோவேன் என்று சக பள்ளி தோழர்களோடு அவன் சவால் விட்டிருந்தான்..


மழை அசுர வேகத்தோடு அடித்தது.. அதை தாங்கமாட்டதவனாய் அந்த வீதியில் ஒரு வீட்டு வாசலில் அவன் ஒதுங்கி நின்று மழையை வேடிக்கை பார்த்துகொண்டிருந்தான்.. அவன் பிஞ்சி கால்கள் ஊறி இருந்தது.

"பளார்" என ஒரு சத்தம்.. அடுத்த வினாடி இவன் வீதியில் மழையில் கிடந்தான்.. வாசலில் நின்ற அந்த பெண் மேலும் கூச்சலிட்டாள்.. "என்ன தைரியம் இருந்தால் என் வீட்டு வாசலில் நிற்பாய்.. நீ ஒரு மகார்.

இப்போது அவன் புத்தகபையில் முழுவதுமாக தண்ணீர் புகுந்திருந்தது.. கொட்டும் மழையின் ஈரத்தையும் குளிர்வையும் தாண்டி தீண்டாமை என்னும் நெருப்பு அவனை எரித்துகொண்டிருந்தது.

பள்ளியின் தொடக்கநாளில் ஆசிரியர் இவனை பார்த்து நீ மற்ற மாணவர்களோடு சரிசமமாய் உட்கார கூடாது நாளை நீ பள்ளிக்குள்ளாக அனுமதிக்க படவேண்டுமென்றால் ஒரு கோணி சாக்கு கொண்டுவா.. இனி அதில் தான் நீ அமரவேண்டும் என்றார். அந்த பிஞ்சு வயதில் முதன் முறையாக அந்த நாள் இரவு தன் பிறப்பு நினைத்து அவன் அழுதான்.

காலங்கள் கரைந்தன..ஆண்டு 1947 அதே சிறுவன் ஐம்பது வயதிற்குரிய வளர்ச்சியோடு இந்திய பாராளுமன்றத்தின் வாசலில் நின்றிருந்தான். அவன் கைகளில் கோணி சாக்கிற்கு பதிலாக கோப்புகள் இருந்தது.. அதில் இந்திய அரசியல் சாசன சட்டம்..ஒட்டு மொத்த இந்திய பெருந்தேசமுமே அவன் வருகைக்காக பாராளுமன்றம் நோக்கி பார்த்திருந்தது.. இவன் உள்ளே நுழைந்தான்.. அனைவரும் எழுந்து நின்றார்கள்..

அந்த காட்சியை பார்த்த.. சாதியென்னும் தீண்டாதகாதவன் என்று புறந்தள்ள பட்ட ஒவ்வொரு ஒடுக்கப்பட்டவனின் கண்களிலும் கண்ணீர் பொங்கியிருக்கும்.. அந்த கண்ணீர் துளிகளே உலகின் மிக சிறந்த உன்னதமான கண்ணீர் துளிகளாக இருந்திருக்கும்.

அந்த கோட் சூட் அணிந்த மனிதன்.. பல நூற்றாண்டு கால தீண்டாமையை கல்வி என்னும் வெடிவைத்து தகர்த்த புரட்சியாளன் அம்பேத்கர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக