இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
சென்னை தலைமைச் செயலகத்தில் உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல்துறை அமைச்சர் காமராஜ் தலைமையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக நிர்வாக இயக்குனர், உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையாளர் ஆகியோருடன் பொது வினியோகத் திட்டம் தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது.
பொது வினியோக திட்டத்தை முழு கணினிமயமாக்கும் திட்டத்தின்கீழ் கடந்த ஏப்ரல் 1-ந்தேதி முதல் மின்னணு ரேஷன் கார்டு (ஸ்மார்ட் கார்டு) வழங்கப்பட்டு வருகிறது. 1.93 கோடி குடும்ப அட்டைகளில் இதுவரை 1.71 கோடி குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. பொது வினியோக திட்டத்தின் மொத்த பயனாளிகள் 6 கோடியே 74 லட்சத்து 74 ஆயிரத்து 478 ஆகும்.
ஆதார் எண்களை குடும்ப அட்டையுடன் இணைக்காத குடும்ப உறுப்பினர் விவரங்களை பெறுவதற்காக அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் அறிவுரைகள் வழங்கப்பட்டு, தற்போது அந்தந்த மாவட்டங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை ஸ்மார்ட் கார்டு கிடைக்க பெறாதவர்கள், உடனடியாக வட்ட வழங்கல் அலுவலர்கள் அல்லது மாவட்ட வழங்கல் அலுவலர்கள் அல்லது உதவி ஆணையாளர்கள் மற்றும் துணை ஆணையாளர்களை அணுகி உரிய ஆவணங்களை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதுவரை வழங்கப்பட்டுள்ள ஸ்மார்ட் கார்டுகள் போக மீதமுள்ள 22 லட்சம் ரேஷன் கார்டுகளில் புகைப்படம் மற்றும் திருத்தங்கள் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. டிசம்பர் 15-ந் தேதிக்குள் அனைவருக்கும் ஸ்மார்ட் கார்டுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும், அனைத்து பொது வினியோக கிடங்குகளிலும் அத்தியாவசிய பொருட்கள் தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. அதிக மழைப்பொழிவு போன்ற நிலை ஏற்பட்டாலும், அதை சமாளிக்கும் வகையில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதியில் உள்ள பொது வினியோக கடைகளில் உள்ள அத்தியாவசிய பொருட்களை பாதுகாப்பாக வைக்கவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
இந்தக்கூட்டத்தில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக நிர்வாக இயக்குனர் எம்.சுதாதேவி, உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையாளர் எஸ்.மதுமதி மற்றும் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக