புதன், 29 நவம்பர், 2017

4 மாணவியர் தற்கொலை: 18 தற்காலிக ஆசிரியர்கள் 'டிஸ்மிஸ்'.

வேலுார்: நான்கு மாணவியர் தற்கொலையை அடுத்து, அந்த பள்ளியில் பணியாற்றிய தற்காலிக ஆசிரியர்கள் அனைவரும் கூண்டோடு, 'டிஸ்மிஸ்' செய்யப்பட்டனர்.

வேலுார் மாவட்டம், அரக்கோணம் அடுத்த, பனப்பாக்கத்தில், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு, 16 வயதுடைய நான்கு மாணவியர், பிளஸ் 1 படித்து வந்தனர். 


இவர்களை ஆசிரியர் திட்டியதால், நவ.,24ல் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.மாவட்ட கல்வி அலுவலர், அமுதா, நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்று விசாரணை செய்தார். அதில் பள்ளியில் பணியாற்றும் தற்காலிக ஆசிரியைகள், மாணவியரை மிகவும் அசிங்கமாகவும், சாதி பெயரை குறிப்பிட்டு திட்டுவதும் தெரியவந்தது.

பட்டியல் தயாரிப்பு : இதைடுத்து, பெற்றோர் - ஆசிரியர் கழகத்தின் மூலம் நியமிக்கப்பட்டு, 10 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் பணியாற்றி வரும் தற்காலிக ஆசிரியைகள் குறித்த பட்டியல் தயாரிக்கப்பட்டது. அதில், பள்ளியில் பணியாற்றும், 48 ஆசிரியைகளில், 18 பேர் தற்காலிகமாக பணியாற்றி வருவது தெரியவந்தது.தற்காலிக ஆசிரியர்கள், 18 பேரையும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் நேற்று கூண்டோடு டிஸ்மிஸ் செய்தார். மேலும், இவர்கள் வேறு எந்த அரசு பள்ளியிலும் பணியாற்றவும் தடை விதித்துள்ளார்.மாணவியர் தற்கொலை விவகாரத்தில், தற்காலிக ஆசிரியர்கள் பலர் காரணமாக இருந்துள்ளதால், அவர்கள் பனப்பாக்கத்தை விட்டு செல்லவும், எப்போது அழைத்தாலும் விசாரணைக்கு வர வேண்டும் என, தனிப்படை போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.

வீடுகளில் டியூஷன் : இந்நிலையில், பள்ளியில் பணியாற்றும் நிரந்தர ஆசிரியைகள் சிலர், தங்கள் வீடுகளில், 'டியூசன்' எடுத்து வருவதாகவும், இதில், மதிப்பெண் குறைவாக வாங்கும் மாணவியரை சேரும்படி கட்டாயப்படுத்துவதாகவும் விசாரணையில் மாணவியர் கூறினர்.
இதையடுத்து, 'பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள், யாரும் தங்கள் வீடுகளில் டியூசன் நடத்தக் கூடாது. மீறி நடத்தினால் அவர்கள், 'சஸ்பெண்ட்' செய்யப்படுவர்' என, மாவட்ட கல்வி அலுவலர் அமுதா எச்சரித்துள்ளார்.வேலுார் மாவட்ட அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, மன நல மருத்துவர் நேற்று பள்ளிக்கு சென்று, 10ம் வகுப்பு, பிளஸ், 1, பிளஸ் 2 மாணவியரை தனித்தனியாக அழைத்து 'கவுன்சிலிங்' செய்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக