புதன், 29 நவம்பர், 2017

நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்க பள்ளிகளில், 'ஆன்லைன்' வசதி.

பிளஸ் 2 மாணவர்கள், உயர்கல்விக்கான நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்க, அரசு பள்ளிகளில், இலவச, 'இ - சேவை' வசதி செய்து தர, தமிழக அரசுக்கு கோரிக்கை எழுந்துள்ளது.

நாடு முழுவதும் பெரும்பாலான உயர்கல்வி படிப்புகளில் சேர, நுழைவு தேர்வு எழுதி, அதில், முன்னணியில் தேர்ச்சி பெற வேண்டும். எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கு, இந்த ஆண்டு முதல், அனைத்து மாணவர்களும், 'நீட்' நுழைவு தேர்வை கட்டாயம் எழுத வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.


அதே போல், ஐ.ஐ.டி., - ஐ.ஐ.ஐ.டி., - என்.ஐ.டி., - ஐ.ஐ.சி.பி.டி., போன்ற தேசிய உயர்கல்வி நிறுவனங்களில் படிக்க, மத்திய அரசின், ஜே.இ.இ., நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இது போன்ற நுழைவு தேர்வுகளில், தமிழக மாணவர்கள், பின்தங்கி உள்ளதால், அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, போட்டி தேர்வு பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

இந்நிலையில், வரும் கல்வி ஆண்டுக்கான உயர்கல்வி படிப்புக்கு, நுழைவுத் தேர்வு அறிவிப்புகள் வெளிவர துவங்கி உள்ளன. முதற்கட்டமாக, ஜே.இ.இ., பிரதான தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம், நீட் தேர்வுக்கான அறிவிப்பு வெளியாக உள்ளது. இந்த தேர்வு களுக்கு, சி.பி.எஸ்.இ., யின் பிரத்யேக இணையதளங்களில், ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆனால், அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு, 'ஆன்லைன்' வசதிகள் குறைவாக உள்ளன. மேலும், தேர்வுக்கு விண்ணப்பிக்க சரியான வழிகாட்டுதலும் இல்லை. எனவே, தமிழக பள்ளிக் கல்வித் துறை சார்பில், போட்டி தேர்வுக்கு விண்ணப்பிக்க, 'ஆன்லைன்' வசதி செய்து தர கோரிக்கை எழுந்துள்ளது. பள்ளிகள் அல்லது போட்டி தேர்வு பயிற்சி மையங்களில், ஆன் லைன் பதிவு உதவி மையம் அமைக்கவும் கோரிக்கை எழுந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக