வியாழன், 23 நவம்பர், 2017

சொத்துக்களுடன் ஆதாரை இணைப்பது கட்டாயமாகிறது - பிரதமர் மோடியின் அடுத்த அதிரடி.. ​

நாட்டில் கருப்புபணப் புழக்கத்தை ஒழிக்க சொத்துக்களுடன் ஆதார் எண்ணை இணைப்பதை மத்திய அரசு விரைவில் கட்டாயமாக்க உள்ளது.

இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆதார் எண்ணை, வங்கிக்கணக்கு, செல்போன் எண், இன்சூரன்ஸ் பாலிசி, பான்கார்டு, பி.பி.எப்., என்.எஸ்.சி., சமையல் எரிவாயு உள்ளிட்டவற்றுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கியள்ளது பிரதமர் மோடி தலைமையிலான மத்தியஅரசு. இதற்கு நாட்டு மக்களின் பல்வேறு தரப்பில் இருந்து கடும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

ஆனால், இந்த நடவடிக்கை இதோடுமுடியாமல், கருப்பு பணத்தை முற்றிலும் ஒழிக்கும் வகையில், சொத்துக்களுடன் ஆதார் எண்ணை இணைப்பதை கட்டாயமாக்க பிரதமர் மோடி அரசு முடிவு செய்துள்ளது. பிரதமர் மோடி பல நேரங்களில் பேசும் போது, கருப்புபணப் புழக்கத்தை கட்டுப்படுத்த பல ஸ்திரமான முடிவுகள், நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறிவருகிறார். அந்த அடிப்படையில் இந்த அறிவிப்பு மிகவிரைவில் ெவளியாகும்.

கருப்புபணத்தை பினாமி பெயரில் பலர் அசையா சொத்துக்களாக வாங்கி குவித்துள்ளனர். இவை அனைத்தும் ஆதார் எண்ணுடன் இணைக்கப்படும் போது, பல்வேறு ஆய்வுகளுக்கு உட்படும். உண்மையில் சொத்துக்களின் உரிமையாளர் யார், அவருக்கு வந்த வருமான உள்ளிட்டவைகள் வெளியாகும்.

இது தொடர்பாக மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்புற விவகாரத்துறை அமைச்சர் ஹர்தீப் பூரி  நிருபர்களிடம் கூறுகையில், “ மிகவிரைவில் சொத்துக்களுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்படும். சொத்துக்கள் வாங்கினாலும், விற்பனை செய்தாலும் ஆதார் கட்டாயமாக்கப்படும். இதற்கான பணிகளில் மத்திய வீட்டு வசதி துறையும்,  மத்திய நிலவளங்கள் துறையும் இணைந்து செயல்பட்டு வருகின்றன.

இந்த விஷயம் குறித்து மத்திய அரசின் உயர் மட்ட அளவில் விவாதங்கள் நடந்து வருகின்றன. மத்திய அரசின் இந்த திட்டம் மிகச்சிறப்பானதாகும். சொத்துக்கள் விற்கும்போதும், வாங்கும்போதும் ஆதார் கட்டாயமாக்குவது கருப்புபணத்தை தடுக்கும். இந்த திட்டம் விரைவில் நனவாகும், அதில் சந்தேகம் ஏதும் இல்லை” என்று தெரிவித்தார்.

சொத்துக்களுடன் ஆதார் எண்ணை இணைத்துவிட்டால், அந்த சொத்துக்கள் இரு நபர்களுக்கு இடையே விற்பனையாகும் போது அதை அரசு கண்காணிக்க முடியும். கருப்புபணத்தின் அடிப்படையில் சொத்துக்கள் வாங்கப்படுகிறதா, முறையாக முத்திரைத்தாள் செலுத்தப்படுகிறதா என்பதையும் கண்டுபிடிக்க முடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக