வியாழன், 30 நவம்பர், 2017

மாற்றுத் திறனாளிகள் பிரச்னையை தீர்க்க மாதம் தோறும் குறைதீர் கூட்டம்.

'மாற்றுத் திறனாளிகளின் பிரச்னைகளுக்கு தீர்வு காண, மாதம் தோறும், டி.ஆர்.ஓ.,க்கள் தலைமையிலும்; இரு மாதங்களுக்கு ஒருமுறை, கலெக்டர்கள் தலைமையிலும்; மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, மாநில அளவிலும், குறைதீர் கூட்டங்கள் நடத்தப்படும்,'' என, வருவாய் நிர்வாக ஆணையர், சத்யகோபால் தெரிவித்தார்.

சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்குவதில் உள்ள சிக்கல்களுக்கு தீர்வு காண, உயர்மட்டக் குழுவின் கலந்தாய்வுக் கூட்டம், சென்னையில், நேற்று முன்தினம் நடந்தது. 
ஆலோசனைக்குப் பின், மாநில வருவாய் நிர்வாக ஆணையர், சத்யகோபால் கூறியதாவது:


மாற்றுத்திறனாளிகள் பிரச்னைக்கு தீர்வு காண, மாதந்தோறும் கோட்டாட்சியர் தலைமையிலும், இரு மாதங்களுக்கு ஒரு முறை, மாவட்ட கலெக்டர் தலைமையிலும், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, வருவாய் நிர்வாக ஆணையர் தலைமையிலும், குறை தீர் கூட்டங்கள் நடத்தப்படும்.


கலெக்டர் நடத்தும் கூட்டங்களில், அனைத்துத் துறை அதிகாரிகளும் பங்கேற்க வேண்டும். அதற்கு முன், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தை, கலெக்டர் கூட்டவும் உத்தரவிடப்படும்.


மன நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவித்தொகை வழங்க, விரைவில் விதிமுறைகள் உருவாக்கப்படும். கடும் ஊனமுற்றோர், 100 சதவீத பார்வைத் திறனற்றோருக்கான உதவித் தொகையை, 1,500 ரூபாயாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.


கூட்டத்தில், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மாநில ஆணையர், அருண் ராய், சமூகப் பாதுகாப்புத்திட்ட இயக்குனர், சம்பத் உள்ளிட்ட உயர் அதிகாரிகள், மாற்றுத் திறனாளிகள் சங்க பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக