திங்கள், 20 நவம்பர், 2017

ஆன்லைன் பத்திரப்பதிவு : ஜனவரி 1க்கு தள்ளிவைப்பு.

தமிழகம் முழுவதும், ஆன்லைன் பத்திரப்பதிவை கட்டாயமாக்கும் திட்டம், ஜன., 1க்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், சொத்து பரிமாற்ற பத்திரங்களை பதிவு செய்ய, 578 சார் - பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. இங்கு, பத்திரங்கள் பதிவை முற்றிலும், ஆன்லைன் முறைக்கு மாற்ற, டி.சி.எஸ்., நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம் செய்தது. இந்நிறுவனம், 'ஸ்டார் - 2.0' என்ற பெயரில், புதிய மென்பொருளை உருவாக்கியது. இத்திட்டம் சோதனை முறையில், 154 சார் - பதிவாளர் அலுவலகங்களில் செயல்படுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து, அனைத்து அலுவலகங்களிலும், இம்முறையை நவ., 15 முதல் கட்டாயமாக்க திட்டமிடப்பட்டது. இதற்கான பணிகள் துரிதப்படுத்தப்பட்டன. ஆனால், திட்டமிட்டபடி நடைமுறைப்படுத்த முடியவில்லை.

இது குறித்து பதிவுத்துறை தலைமையக அதிகாரி ஒருவர் கூறியதாவது: பத்திரப்பதிவில் வெளிப்படை தன்மையை உறுதி செய்யும், ஆன்லைன் பதிவு முறையை செயல்படுத்துவதில், சில கூடுதல், ஐ.ஜி.,க்களுக்கு உடன்பாடு இல்லை. அதனால், திட்டத்தை செயல்படுத்த, முழு கவனம் செலுத்தவில்லை. துறையில், தங்களின் முக்கியத்துவத்தை, ஐ.ஜி.,க்கு காட்டுவதற்காக இவ்வாறு செயல்படுகின்றனர். இதனால், அனைத்து அலுவலகங்களிலும், டிச., 1 முதல் சோதனை முறையில், ஆன் லைன் பத்திரப்பதிவை அமல்படுத்துவது என்றும், அதிகாரப்பூர்வ துவக்க விழாவை, ஜன.,1க்கு பின் நடத்தவும் ஆலோசித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக