வியாழன், 13 ஜூலை, 2017

பெங்களூரில் 3 குழந்தைகளுக்கு இழந்த குடும்பத்தை மீட்டுக் கொடுத்தது ஆதார் அட்டை.

நேற்றைய நாள் பெங்களூரு அரசுக் காப்பகத்தில் இருந்த அந்த மூன்று குழந்தைகளுக்கும் தங்களது வாழ்வில் மறக்க முடியாத பொன்னாள் ஆகியது. இந்த மூவருமே அறிவுத்திறன் மற்றும் மூளை வளர்ச்சிக் குறைபாடு உள்ளிட்ட பிரச்னைகள் உடைய குழந்தைகள். இவர்கள் மூவரும் ஓசூர் சாலையில் உள்ள அரசினர் குழந்தைகள் காப்பகத்தில் பல ஆண்டுகளாகப் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.

மோனு, ஓம்பிரகாஷ், மற்றும் நீலகண்டா எனும் அந்த மூன்று குழந்தைகளும் தங்களது பெற்றோர் மற்றும் குடும்பத்தினரிடமிருந்து  பல ஆண்டுகளுக்கு முன்பே வெவ்வேறு விதமான காரணங்களுக்காக பிரிய நேர்ந்து பல விதமான சந்தர்பங்களில் தனித்தனியாக கண்டுபிடிக்கப் பட்டு இந்த காப்பகத்தில் ஒப்படைக்கப் பட்டவர்கள். இவர்கள் ஒப்படைக்கப் பட்ட அந்த அரசு காப்பகத்தில் சமீபத்தில் அங்கிருந்த குழந்தைகளுக்கான ஆதார் அடையாள எண் பதிவு நடத்தப் பட்டது. அப்போது இந்த மூன்று குழந்தைகளின் பயொமெட்ரிகள் அடையாளங்கள் அதாவது கண் கருவிழி மற்றும் கை ரேகை அடையாளங்கள் வேறு மாநில குழந்தைகளுடன் ஒத்துப் போகவே இவர்களது ஆதார் பதிவு நிராகரிக்கப் பட்டது. ஆனால் இவர்களது பதிவுகள் ஒத்துப் போன இடங்களில் உள்ள முகவரிகளை ஆராய்ந்ததில் அங்கிருந்த பெற்றோர் குறிப்பிட்ட ஆதார் எண்களுக்கு உரியவர்களான தங்களது குழந்தைகள் நெடுங்காலமாகக் காணவில்லை என்று புகார் அளித்திருந்தமை கண்டுபிடிக்கப் பட்டது. அதையொட்டி அறிவு சார் மூளைத்திறன் வளர்ச்சி குறைந்த மேற்கண்ட மூன்று குழந்தைகளும் அவர்களது பயோமெட்ரிகள் ஆதார் அடையாளங்கள் கண்டறியப்பட்ட முகவரிகளில் இருந்த அவரவர் பெற்றோரிடம் ஒப்படைக்கப் பட்டனர். உண்மையில் இந்திய அரசு ஆதார் அடையாள எண் என ஒன்றை நடைமுறைப்படுத்தியதற்காக பெருமை கொள்ள வேண்டிய தினமாக நேற்றைய தினம் அமைந்தது என்றால் அது மிகையில்லை.

இதே விதமாக இவர்களைப் போலவே பல்வேறு காரணங்களை முன்னிட்டு காணாமல் போன குழந்தைகளுடன் ஒத்துப் போகக் கூடிய ஆதார் அடையாளங்களை மையமாக வைத்து கடத்தப் பட்டு பிச்சையெடுத்தல், போதை மருந்து கடத்தல் உள்ளிட்ட அபாயகரமான வேலைகளுக்கு உட்படுத்தப் படும் குழந்தைகளையும் நம்மால் எளிதில் கண்டுபிடித்து விட முடியும் என்கிறார்கள் பெங்களூரு காவல்துறையினர். நாடு முழுதும் ஆதார் நடைமுறைப் படுத்தப்பட்டதனால் உண்டான பலன் இது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக