ஞாயிறு, 16 ஜூலை, 2017

நாம் அனைவரும் கூட ஏதோ ஒரு வகையில் குறைவுபட்டவர்களே ! நம்மை சுமக்கும் இறைவனுக்கும் நம் குறை தெரியும் ! நம்மையும் உபயோகிக்க விழைவோம்!

இரண்டு பானைகளை ஒரு மூங்கில் கொம்பின்  இருபுறமும் கட்டி அதை தன் தோளின் மேல் சுமந்து, அந்த பானைகள் நிறைய தண்ணீரை கீழே ஓடும் ஆற்றிலிருந்து எடுத்து கொண்டு வந்து, மேடான இடத்தில் இருந்த ஒரு வீட்டிற்கு கொடுப்பது அந்த வேலைக்காரரின் வழக்கம் !

அதில் ஒரு பானையில் கீறல் விழுந்து இருந்தது. அதனால் அவர் கொண்டு வரும் தண்ணீர் வீடு வந்து சேரும்போது  பாதிதான் இருக்கும் !


மற்றொரு பானை பழுதில்லாமல் இருந்ததால் அதில் தண்ணீர் முழுவதுமாக வீடு வந்து சேரும்.

 இப்படி அந்த தண்ணீர் கொண்டுவருபவர் ஒன்றறை பானை தண்ணீர் தான் கொண்டு வர முடிந்தது.

ஒருநாள் கீறல் இல்லாத பானை மிகவும் பெருமையுடன், கீறல் பானையைப் பார்த்து "உன்னால் பாதி பானை தண்ணீர்தான் கொண்டு வர முடிகிறது !  என்னைப் பார், முழு பானை தண்ணீர் கொடுக்கிறேன் " என்று பெருமிதத்துடன் சொல்லி கொண்டது.

அதை கேட்ட கீறல் விழுந்த பானைக்கு துக்கம் தாள முடியவில்லை. தண்ணீர் மொள்பவர் தண்ணீரை எடுக்கும் போது, அவரிடம்,  "ஐயா, என்னால் உங்களுக்கு எந்த பிரயோஜனமுமில்லை, நான் கீறல் விழுந்த பானை, தண்ணீரை சரியாக வைக்க முடியவில்லை. வழியெல்லாம் தண்ணீரை சிந்தி பாதி தண்ணீர்தான் தினமும் என்னால் வைக்க முடிகிறது. என்னால் உங்களுக்கு மிகுந்த கஷ்டம்"  என்று வருத்தப்பட்டது.

அதற்கு அந்த தண்ணீர் சுமப்பவர்,  ‘நாம் போகும் பாதையின் பக்கத்தில் பார்த்தாயா?’ என்று கேட்டார். அதற்கு அந்த பானை ‘இல்லை ஐயா’  என்றது.

அதற்கு அவர், "இன்று போகும்போது பார்" என்று கூறினார். அப்படி போகும்போது, அந்த பானையை தூக்கிசென்ற பக்கம் முழுவதும், அழகான பூக்கள் பூத்து குலுங்குவதை காண முடிந்தது.

அப்போது தண்ணீர் சுமப்பவர் சொன்னார்,  "பார்த்தாயா?  உன் பக்கம் மாத்திரம் பூக்கள் பூத்து குலுங்குவதை! மற்ற பக்கம் பூக்கள் இல்லாததை பார்த்தாயா?  நீ கீறல் விழுந்த பானை என்று எனக்கு தெரியும்,  அதை  சாதகமாக்கி நல்ல பூக்களை கொடுக்கும் விதைகளை அந்த பாதையில் விதைத்தேன் ! அப்போது உன்னிலிருந்த வழியும் தண்ணீர் அதற்கு போதுமானதாக இருந்து, நல்ல பூக்களை கொடுத்தது, இப்போது பார்,  அந்த பூக்கள், எஜமானருடைய மேஜையில் அழகாக அடுக்கி வைக்கப்பட்டு அந்த இடத்தையே அழகு படுத்துவதை!" என்றார்.

நாம் அனைவரும் கூட ஏதோ ஒரு வகையில் குறைவுபட்டவர்களே !  நம்மை சுமக்கும் இறைவனுக்கும் நம் குறை தெரியும் !
நம்மையும் உபயோகிக்க விழைவோம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக