ஞாயிறு, 14 மே, 2017

இப்படி ஒரு மக்கள் முதல்வர் நமக்கு கிடைப்பாரா?

வீட்டுக்கு வாங்க என்று கெஞ்சிய எம்.ஜி.ஆர், மறுத்த கர்ம வீரர்: காரணம் என்ன தெரியுமா? அவர் தான் மக்கள் முதல்வர்

மக்கள் திலகம் எம்ஜிஆர் ஒரு திமுக காரர்,பின்பு பிரிந்து அதிமுக என்கிற கட்சியைத் துவங்கினார்  முதல்வர் ஆனார். இவ்வளவுதானே நமக்கு  தெரியும்.

ஆனால் பலருக்கு தெரியாத விஷயம் இருக்கிறது. எம்ஜிஆர் ஆரம்பத்தில் தீவிர காங்கிரஸ் ஆதரவாளர். காந்தியையும், கர்ம வீரர் காமராஜரையும் அதிகம் நேசித்தவர் என்பது தான்.

ஆரம்பம் தொட்டே கதர் ஆடை தான் அணிந்தார் எம்ஜிஆர். அதன் பின் தந்தை பெரியார், அறிஞர்  அண்ணா,கலைஞர் ஆகியோர் நட்பு கிடைத்து திமுகவில் இணைந்தார்.

ஆனாலும் கடைசி வரை கர்மவீரர் காமராசர் மீது தீராத பாசம் வைத்திருந்தார் எம்ஜிஆர். நேரம் கிடைக்கும் போதெல்லாம் காமராஜரை சந்தித்து மகிழ்ந்தார்.

தனது  இல்லத்திற்கு எத்தனையோ தலைவர்களை அழைத்து விருந்து கொடுத்து மகிழ்ந்த எம்ஜிஆருக்கு ஒரு தீராத ஏக்கம் இருந்தது.

ஒரே ஒரு முறை காமராஜரை தனது இல்லத்திற்கு அழைத்து வந்து விட வேண்டும் அருகே அமர்ந்து உணவு சாப்பிட வேண்டும். ஆனால் எப்போது அழைத்தாலும் காமராஜர் சிரித்தபடி “சொல்றேன்” என்கிற ஒற்றை வார்த்தையால் தவிர்த்து விடுவார்.

கடைசியாக ஒரு முறை அழைத்து விடுவது என்கிற நம்பிக்கையில் சிவாஜி, எம்ஜிஆர் பங்கு பெற்ற ஒரு விழாவிற்கு முதல்வர் காமராஜர் வந்திருந்தார்.

வழியனுப்பும் போது மீண்டும் அழைப்பு விடுத்தார் எம்ஜிஆர். அப்போதும் அதே புன்னகை மாறாமல் “ராமச்சந்திரா நான் உன் இல்லம் வரக் கூடாது என்றில்லை.

“உன் வீட்டு விருந்து பற்றி நிறைய கேள்விப் பட்டுள்ளேன். அறுசுவை உணவும் மீன் இறைச்சியும் அசைவ உணவுகளும் நிறைந்திருக்கும் என்று கூறுவார்கள்.

“நான் மக்கள் ஊழியக்காரன் ரெண்டு இட்லி, தயிர் சோறு தான் எனக்கு சரிப்படும் உன் வீட்டில் அறுசுவை உணவு சாப்பிட்டு விட்டால் திருப்பியும் அந்த ருசி நாக்கு தேடும்..அதுக்கு நான் எங்கே போறது” என்று கூற ஆடிப்போனார் எம்ஜிஆர்.

தன்னையும் அறியாமல் காமராஜரை வணங்கி விட்டாராம் மக்கள் திலகம் எம்ஜிஆர். அதுமுதல் காமராஜரை அழைப்பதில்லை..!

இப்படி ஒரு முதல்வர் நமது தமிழ் நாட்டில் இருந்திருக்கிறார். மீண்டும் இப்படி ஒரு மக்கள் முதல்வர் நமக்கு கிடைப்பாரா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக