ஞாயிறு, 28 மே, 2017

மைலேஜை அதிகரிக்க சில குறிப்புகள்!

பெட்ரோல்/டீசல் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து வருகிறது, இந்தப் பிரச்சனையை சமாளிக்க நம்முடைய வாகனத்தின் மைலேஜை அதிகரிப்பதே சிறந்த வழியாகும்.

நமது வாகனத்தின் மைலேஜை அதிகரிக்க செய்ய வேண்டிய வழிமுறைகள் குறித்து இந்த தொகுப்பில் தொடர்ந்து காணலாம். கார் அல்லது பைக் எதுவாக இருந்தாலும் இந்த முறையில் நம் வாகனத்தின் மைலேஜை அதிகரிக்கலாம்.

சரியான அளவிலான காற்று
டயர்களில் சரியான அளவிலான காற்று இருத்தல் அவசியம். நிர்ணயிக்கப்பட்ட அளவைக்காட்டிலும் குறைந்த அளவில் காற்று இருந்தால் அது மைலேஜை குறைத்துவிடும். இதன் மூலம் 5% கூடுதல் மைலேஜ் கிடைக்கிறது.

சீரற்ற காற்றழுத்தம் 10 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை எரிபொருளை உறிஞ்சும்.

லோ ரோலிங் ரெஸிஸ்டன்ஸ் டயர்கள்

டயர் தொழில்நுட்பத்தில் சமீபத்திய வரவு லோ ரோலிங் ரெஸிஸ்டன்ஸ் டயர்கள், இவை தரையில் குறைந்த உராய்வு விசையை கொண்டிருப்பதால் அதிக தேய்மானம் ஆவது இல்லை. இந்த டயர்கள் உபயோகிப்பதன் மூலம் 5% முதல் 15% கூடுதல் மைலேஜ் கிடைக்கிறது.

இஞ்சின் டியூனிங்

புதிதாக வாங்கப்பட்ட வாகனம் அதிக பிக் அப் கொண்டதாக இருக்கும், இதன் காரணமாக இஞ்சினின் ஆற்றல் அதிகமாக செலவிடப்படலாம். இதனை ஓரளவு குறைத்து டியூனிங் செய்வது மைலேஜ் கூடுதலாக கிடைக்க உதவும்.

ஏர் ஃபில்டர்

தூய்மையற்ற ஏர் ஃபில்டர்கள் உபயோகிக்கும் போது அது மைலேஜை நேரடியாக பாதிக்கும், அதே போல வாகனம் இயக்கப்படாமல் இஞ்சின் மட்டும் இயங்கும் போது அது தானாக ஆஃப் ஆகி விடும். ஏர் ஃபில்டரை சரியான கால நேர இடைவெளியில் மாற்றிக் கொள்வது இஞ்சினுக்கும், மைலேஜுக்கும் நல்லது.

எரிபொருள் அளவு

சிலர் பைக்கை எப்போதும் ரிசர்விலேயே ஓட்டிக்கொண்டிருப்பர், இது எரிபொருள் சிக்கனத்திற்கு எதிரானதாகும். இதன் மூலம் ஃபியூயல் பம்ப் அதிக அளவில் எரிபொருளை உபயோகிக்க உந்தப்படும். எனவே குறைந்தபட்சம் அரை டேங்க் அளவிலாவது எரிபொருள் வைத்திருப்பது மைலேஜை அதிகரிக்க உதவும்.

குறைந்த வேகம்

நாம் ஓட்டும் முறையிலும் வாகனத்தில் எரிபொருளை சேமிக்க முடியும். பொதுவாக குறைந்த அளவிலான வேகத்தில் செல்வது எரிபொருள் சேமிப்பிற்கு உதவும். குறைந்த வேகத்தில் வாகனத்தை இயக்கும் போது 33% எரிபொருள் சேமிப்பை தருகிறது.

மென்மையான ஆக்ஸிலரேஷன்

மேலும் ரேஷ் டிரைவிங்கில் சென்றால் நிச்சயம் எரிபொருள் சேமிப்பை பெற இயலாது. எப்போதும் மிதமான முறையில் மென்மையான ஆக்ஸிலரேஷன் கொண்டு வாகனத்தை இயக்க வேண்டும். இது நீண்ட கால அடிப்படையில் வாகனத்திற்கு நல்லது என்பதை நினைவில் கொள்க.

சரியான கியரில் செலுத்த வேண்டும்

கூடுமான வரையிலும் அதிகமான கியர்களை உபயோகித்தல் நல்லது. இரண்டாம் அல்லது மூன்றாம் கியர்களில் இயங்குவதைக் காட்டிலும் உச்சபட்ச கியரில் இயங்கும் போது மட்டுமே எரிபொருள் சிக்கனத்தை வாகனம் வழங்கும். (அதற்காக ஸ்டார்ட் செய்தவுடன் கடைசி கியருக்கு மாற்றி விடாதீர்கள்..!)

பிரேக் பிடிப்பதை குறைத்தல்

வாகனத்தில் செல்லும் போது கூடுமான வரையிலும் பிரேக் பிரயோகிப்பதை குறைக்க வேண்டும். இதற்கு வாகனத்தை சீரான வேகத்தில் இயக்குதல் அவசியமாகிறது. பிரேக் பிரயோகிக்கும் போது அது அதிகபட்ச எரிபொருளை செலவழிக்கிறது என்பதனை எப்போதும் மனதில் கொள்ள வேண்டும்.

காரின் வேகத்தைக் குறைப்பதற்கு பிரேக்கை உபயோகிப்பதற்குப் பதிலாக கியரை மாற்றி வேகத்தைக் கட்டுக்குள் கொண்டு வரலாம். இதன் மூலம் எரிபொருள் வீணாவதைத் தவிர்க்கலாம்.

காரை எந்த கியரில் செலுத்தினாலும் 2,000 முதல் 2,400 ஆர்பிஎம் என்ற நிலையிலேயே செலுத்துங்கள். இது இன்ஜினுக்கு கூடுதல் சுமையோ அல்லது குறைவான சுமையோ தராமல் சீராக இயக்கும். இதன் மூலம் மைலேஜ் மேம்படும்.

வாகனம் இயக்கப்படாமல் இஞ்சின் மட்டும் ஆன் நிலையில் இருந்தாலும் அது எரிபொருளை எரித்துக் கொண்டே இருக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். 30 நொடிகளுக்கும் கூடுதலாக வாகனம் இயக்கப்படாமல் இருக்க நேர்ந்தால் இஞ்சினை ஆஃப் செய்துவிட்டு பின் மீண்டும் ஆன் செய்து கொள்ளலாம்.

மைலேஜை அதிகரிக்க வேண்டிய மேலும் சில குறிப்புகள்

வாகனத்தில் அதிக எடை கொண்ட பொருட்களை வைத்துக்கொள்வது மைலேஜை குறைக்கும். தேவைப்படாத பொருட்களை காரின் பின்பகுதியில் சேமித்து வைத்துக் கொள்வது நல்லதல்ல. அதிக எடை கொண்ட வாகனத்தை தேர்வு செய்யாமல் இருப்பதே நலம்.

மைலேஜை அதிகரிக்க வேண்டிய மேலும் சில குறிப்புகள்

இருசக்கர வாகனங்களில் அதிக அகலம் கொண்ட டயர்களை உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும். மெலிதான டயர்கள் சிறந்த ஏரோடைனமிக்ஸ் பெற்றிருப்பதால் அவற்றை தேர்ந்தெடுப்பது மைலேஜை அதிகரிக்கும். எரிபொருள் நிலையங்களில் எரிபொருள் நிரப்பும் போது கடைசி சொட்டு வடியும் வரையிலும் நிரப்ப வேண்டும். ஏனெனில் அதற்கும் சேர்த்து தான் பணம் செலுத்துகிறீர்கள். ஒவ்வொரு சொட்டும் மைலேஜிற்கு முக்கியமானதே.

வேறு வேறு நிறுவன எரிபொருள் நிலையங்களில் எரிபொருள் நிரப்புவதை விட தூய்மையான எரிபொருள் கிடைக்கும் ஒரு பங்கை தேர்ந்தெடுத்து அங்கு மட்டுமே எரிபொருள் நிரப்புவது பலனளிக்கும். கார்களில் ஏசி உபயோகிப்பதை தவிர்ப்பது எரிபொருள் சிக்கனத்தை அளிக்கும்.

மைலேஜை அதிகரிக்க வேண்டிய மேலும் சில குறிப்புகள்

இதேபோல நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் போது ஜன்னல்களை இறக்காமல் இருப்பதும் நல்லது. ஜன்னல்கள் திறந்திருந்தால் உராய்வு விசை அதிகரித்து எரிபொருளை வீணாக்கும். தெரியாத இடங்களுக்கு செல்லும் போது அந்த இடம் குறித்து சரியாக தெரிந்து கொண்டு செல்லும் போது வீணாக அலைவது தடுக்கப்படும். இதன் மூலமும் எரிபொருளை சேமிக்க இயலும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக