செவ்வாய், 30 மே, 2017

தொடக்க கல்வித்துறை கலந்தாய்வில் மாற்றங்கள் : ஆசிரியர்கள் வரவேற்பு.

தொடக்க கல்வித்துறை ஆசிரியர்களுக்கான, மாவட்டங்களிடையே பணிமாறுதல் கலந்தாய்வில், இந்தாண்டு பின்பற்றப்பட்ட புதிய மாற்றங்களை ஆசிரியர்கள் வரவேற்றனர்.

தொடக்க கல்வியில், இடைநிலை ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டத்திற்கான பணி மாறுதல் கலந்தாய்வில் இம்முறை, 'ஒரு மாவட்டத்தில் இருந்து மாறுதல் கேட்ட ஆசிரியர் வேறு மாவட்டத்தில் ஒரு இடத்தை தேர்வு செய்யும்போது ஏற்கெனவே அவர் இருந்த இடம் 'காலி' என அடுத்த நொடியில் ஆன்லைனில் காண்பிக்கப்படும் முறை அமல்படுத்தப்பட்டது.
அதேபோல் மண்டலம் 'ஏ', 'பி', 'சி', 'டி', என மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு, கலந்தாய்வில் விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் சம்பந்தப்பட்ட மண்டலத்திற்கு உட்பட்ட மாவட்டங்களில் மட்டுமே பணி மாறுதல் கோர முடியும் என்ற நிலை இருந்தது. இந்த நடைமுறையும் மாற்றப்பட்டு, எந்த மண்டலத்திற்கு உட்பட்ட மாவட்டங்களிலும், காலி இடங்களை ஆசிரியர்கள் தேர்வு செய்யலாம் என பின்பற்றப்பட்டது.பழைய முறையில் கலந்தாய்வு ஒரே நாளில் நடக்கும். இதனால் நள்ளிரவு, அடுத்த நாளை தாண்டி கலந்தாய்வு தொடரும். ஆனால், இந்தாண்டு சீனியாரிட்டி அடிப்படையில் முதல் நாளில் ஒன்று முதல் ஆயிரம், இரண்டாம் நாளில் 1000 முதல் 2000 பேர், அதற்கு மேல் உள்ளவர்கள் மூன்றாவது நாள் என மூன்று கட்டங்களாக கலந்தாய்வு நடத்தப்பட்டது.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், செயலாளர் உதயசந்திரனின் இந்த முயற்சி, ஆசிரியர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த மாற்றங்கள் குறித்து ஆசிரியர்கள் கூறியதாவது: மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வில் பின்பற்றப்படும் முறை வரவேற்கத்தக்கது. முந்தைய கலந்தாய்வில், ஒரு மாவட்டத்தில் எதிர்பார்த்த பணியிடம், சீனியாரிட்டி அடிப்படையில் வேறு ஒருவர் எடுத்து விட்டால், அடுத்த வாய்ப்பு இருக்காது என கலந்தாய்வு அறையை விட்டு ஆசிரியர் வெளியேறி விடுவர். அந்த இடங்கள் மறைக்கப்பட்டு, பின் பல லட்சம் ரூபாய் பேரம் பேசப்படும்.
ஆனால் தற்போதைய நடைமுறையில், அந்த மாவட்ட ஆசிரியர், வேறு மாவட்டத்திற்கு மாறுதலாகி சென்றால், அவரது காலி இடம் அடுத்த நொடியில் ஆன்லைன் கலந்தாய்வில் காண்பிக்கப்படுகிறது. இதனால் அடுத்தடுத்த வாய்ப்பு ஆசிரியர்களுக்கு கிடைக்கிறது, என்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக