திங்கள், 22 மே, 2017

முழு அளவில் ரேஷன் பொருள் பெற ஜூன் முதல் 'ஆதார்' எண் கட்டாயம்.

ரேஷனில் 'ஆதார்' எண் வழங்கியவர்களுக்கு மட்டுமே முழு அளவில் பொருட்களை வழங்க உணவு துறை முடிவு செய்துள்ளது. தமிழக ரேஷன் கடைகளில் அரிசி, கோதுமை இலவசம்; சர்க்கரை, பருப்பு உள்ளிட்டவை, குறைந்த விலையில் விற்கப்படுகின்றன.  
ரேஷன் முறைகேட்டை தடுக்க தற்போது, 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு வழங்கப்படுகிறது. இதற்காக, ஏற்கனவே உள்ள கார்டுதாரர்களிடம் இருந்து, ரேஷன் கடைகளில், ஆதார் எண் விபரம் பெறப்பட்டது.
 
தற்போது, 1.90 கோடி ரேஷன் கார்டுகள் செயல்பாட்டில் உள்ளன. அவற்றில், 1.35 கோடி கார்டுதாரர்கள், தங்கள் வீட்டில் உள்ள அனைத்து உறுப்பினர்களின் ஆதார் விபரங்களை வழங்கி உள்ளனர். மீதமுள்ளவர்களில், 53 லட்சம் கார்டுதாரர்கள், பாதி உறுப்பினர்களின் விபரங்களை தந்துள்ளனர். இரண்டு லட்சம் பேர், ஒருவரின் ஆதார் விபரத்தையும் வழங்கவில்லை.
 
இது குறித்து, உணவு மற்றும் கூட்டுறவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: தமிழகத்தில், உணவு பாதுகாப்பு சட்டம் அமலுக்கு வந்தது முதல், ரேஷன் கார்டில், நான்கு பேர் உள்ள குடும்பத்துக்கு, 20 கிலோ இலவச அரிசி; அதற்கு மேல் உள்ள, ஒவ்வொரு நபருக்கும், கூடுதலாக, 5 கிலோ இலவச அரிசி வழங்கப்படுகிறது. ரேஷன் கார்டில் உள்ள நபர்களில், சிலரது ஆதார் விபரம் தராவிட்டாலும், முழு அளவில் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
 
மத்திய அரசு, ஆதார் விபரங்களை வழங்கியோருக்கு மட்டுமே, ரேஷன் பொருட்களை வழங்கும்படி தெரிவித்துள்ளது. இதனால், ஒரு கார்டில், ஆதார் விபரம் தந்தவர்களை மட்டும் கணக்கில் எடுத்து, பொருட்கள் வழங்கப்படும். அதை, ஜூன் முதல் செயல்படுத்த, அரசிடம் ஒப்புதல் கோரப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக