திங்கள், 22 மே, 2017

பள்ளிகளில் சுகாதார பணியாளர்கள் உடனே நியமிக்க வேண்டும்.

இரண்டாண்டு முன் பள்ளிகளில், கழிப்பறை மற்றும் துாய்மை பணிகளை செய்ய உள்ளாட்சி அமைப்புகளிடம் அரசு ஒப்படைத்தது. அப்போது துாய்மை பணிகள் முழுமையாக நடைபெறவில்லை. தற்போது உள்ளாட்சி அமைப்புகள் இல்லாத நிலையில், நுாறு நாள் வேலை திட்டத்தில் துாய்மை பணி மேற்கொள்ளப்போவதாக வெளியான தகவலையடுத்து முழு அளவில் இந்த பணி நடைபெறுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. 

விருதுநகர் மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில் உள்ள பள்ளிகளில் மாணவர்கள் திறந்த வெளியை பயன்படுத்தக் கூடாது என்பதற்காக, கழிப்பறை அமைத்துக்கொடுக்கப்பட்டது. தண்ணீர் பற்றாக்குறையால் சரிவர சுத்தம் செய்யாமல் துர்நாற்றம் ஏற்பட்டு, பயன்படுத்த முடியாமல் மீண்டும் திறந்த வெளியை பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. 

மாணவிகள் சுத்தமில்லாத கழிப்பறையை பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தால் தவித்தனர். பள்ளி நிர்வாகம் அனைவருக்கும் கல்வி திட்ட நிதியில் அவ்வப்போது பிளீச்சிங் பவுடர் துாவி துர்நாற்றத்தை குறைத்தது. சில பள்ளிகளில் மாணவிகள் குடிநீர் குடிப்பதையே தவிர்த்து, வீடுகளுக்கு சென்று குடிநீர் குடித்தனர். உடல் சோர்வு ஏற்பட்டு பல மாணவிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.

பாதியில் நின்ற பணி

பெற்றோர் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றதையடுத்து, இரு ஆண்டுகளுக்கு முன் சுத்தம் செய்யும் பணியை உள்ளாட்சி அமைப்புகளிடம் ஒப்படைத்தது. அந்தந்த தலைவர்களால் நியமிக்கப்பட்ட பணியாளர்களுக்கு மாதம் 750 ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டது. குறைந்த சம்பளம் என்றாலும், சிலர் பணியை தொடர்ந்தனர். இந்நிலையில் சில மாதங்களாக பலருக்கு சம்பளம் வழங்கவில்லை. இதனால் துப்புரவு பணி பாதியில்நின்றது. அவ்வப்போது மாணவர்களே சுத்தம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டு, பல பள்ளிகளில் பிரச்னை ஏற்பட்டது. 

உடனடி நடவடிக்கை தேவை
தற்போது உள்ளாட்சி அமைப்புகள் இல்லை. பணியாளர்கள் நியமிப்பதில் சிரமம் உள்ளது. அதோடு, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி நிர்வாகங்களில் போதிய பணியாளர்கள் இல்லாமல் துாய்மை பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதில் பள்ளி பணியையும் கூடுதலாக கவனிக்க பணியாளர்கள் முன்வரமாட்டார்கள். இந்நிலையில் பள்ளிகளில் துாய்மை பணிகளை மேற்கொள்ள நுாறு நாள் வேலை திட்டத்தின் கீழ் பணிகள் மேற்கொள்ளப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. 

நுாறு நாள் திட்ட பணியாளர்கள் குப்பையை சுத்தம் செய்வார்கள். கழிப்பறையை சுத்தம் செய்வார்களா என்பது சந்தேகமே. பிரச்னை இப்படி இருக்க விரைவில் பள்ளிகள் திறக்க உள்ளது. முன்கூட்டியே பள்ளிகளை சுத்தம் செய்ய வேண்டும். இந்த பணியை எப்படி மேற்கொள்வது என ஆசிரியர்கள்புலம்பி வருகின்றனர். கழிப்பறையை மாணவர்கள் பயன்படுத்தினால் அன்றாடம் சுத்தம் செய்ய வேண்டும். ஒரு நாள் விட்டால் கூட சுகாதாரக் கேடு ஏற்படும் என்பதால் பள்ளிகளில் துாய்மை பணி கேள்விக்குறியாக உள்ளது. 

மாணவிகள் திண்டாட்டம்
பழனிச்சாமி, காரியாபட்டி: மாணவர்கள் உரிய நேரத்தில் இயற்கை உபாதைகளுக்கு செல்ல வேண்டும் என்பதற்காகத்தான் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி வைத்துள்ளனர். ஆனால் அங்குள்ள கழிப்பிடத்தை நினைத்தால் மாணவர்களுக்கு குமட்டல் ஏற்படும். மாணவிகள்பாடு திண்டாட்டம்தான். உள்ளாட்சி நிர்வாகம் செய்ய முடியாது என்ற நிலையில், நுாறு நாள் வேலைத் திட்டத்தில் இந்த பணி நடக்குமா என்பது கேள்விக்குறி தான். மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு, ஒவ்வொரு பள்ளியிலும், தற்சமயம் பகுதி நேர துப்புரவு பணியாளர்களை உடனடியாக நியமிக்க வேண்டும். காலபோக்கில் இவர்களை நிரந்தரமாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக