வெள்ளி, 26 மே, 2017

சட்டப் படிப்பில் சேர வயது உச்ச வரம்பு இல்லை: 2017-18 கல்வியாண்டுக்கு மட்டும் பொருந்தும்.

        தமிழகத்தில் சட்டப் படிப்புகளில் சேருவதற்கு இந்தக் கல்வியாண்டில் (2017-18) மட்டும் வயது உச்ச வரம்பே கிடையாது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.         வயது வரம்பு நீக்கப்பட்டது ஏன்?: நாடு முழுவதும் வழங்கப்பட்டு வரும் சட்டப் படிப்புகள் அனைத்தையும் இந்திய பார் கவுன்சில் (பிசிஐ) கட்டுப்படுத்தி வருகிறது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த சட்டப் படிப்புகளில் சேருவதற்கு வயது உச்ச வரம்பு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அதாவது, ஐந்தாண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்பில் சேர அதிகபட்ச வயது 20. அதுபோல, மூன்றாண்டு சட்டப் படிப்பில் சேர அதிகபட்ச வயது 30 என நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், பல்வேறு தரப்பினர் சார்பில் தொடரப்பட்ட வழக்குகளில் பஞ்சாப், ஹரியாணா உயர்நீதிமன்றம் உள்ளிட்ட பல்வேறு உயர் நீதிமன்றங்கள் இந்த வயது உச்ச வரம்பை நீக்கி உத்தரவிட்டன. அதனைத் தொடர்ந்து, இந்திய பார் கவுன்சிலும், சட்டப் படிப்புகளுக்கான வயது உச்ச வரம்பை நிர்ணயிக்கும் 'சட்டப் படிப்பு விதிகள் 2008'-இன் பிரிவு 28-ஐ கைவிட்டது. அதாவது, வயது உச்ச வரம்பு அதிகாரப்பூர்வமாக நீக்கப்பட்டது. இருந்தபோதும், தமிழகத்தில் மட்டும் கடந்த 2009-10 கல்வியாண்டு முதல் சட்டப் படிப்புகளுக்கான வயது உச்ச வரம்பு தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வந்தது.

தமிழக அரசு உத்தரவு: இந்நிலையில், பிற மாநிலங்களைப் பின்பற்றி தமிழகத்திலும் 2015-16 கல்வியாண்டில் சட்டப் படிப்புகளுக்கான வயது உச்ச வரம்பு தளர்த்தப்பட்டது. அதாவது, 2015-16 கல்வியாண்டு முதல், மூன்றாண்டு சட்டப் படிப்புகளுக்கான வயது உச்ச வரம்பை நீக்கியும், ஐந்தாண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்புகளுக்கான வயது உச்ச வரம்பை 21-ஆக உயர்த்தியும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.

ஆனால், இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், சட்டப் படிப்புகளுக்கு வயது உச்ச வரம்பை நீக்கம் செய்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது.

இதனால், தொடர்ந்து முன்பு இருந்தது போன்றே 2015-16 கல்வியாண்டிலும், 2016-17 கல்வியாண்டிலும் வயது உச்ச வரம்பு நிர்ணயிக்கப்பட்டே மாணவர் சேர்க்கை தமிழகத்தில் நடைபெற்றது.

மீண்டும் வயது உச்ச வரம்பு:
இதற்கிடையே, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவை எதிர்த்து, இந்திய பார் கவுன்சில் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் இந்திய பார் கவுன்சிலின் மனுவை ரத்து செய்து 11-12-2015-இல் உத்தரவிட்டது. இதன் காரணமாக, சட்டப் படிப்புகளுக்கு வயது உச்ச வரம்பை இந்திய பார் கவுன்சில் மீண்டும் கொண்டுவந்தது. அதாவது, சட்டப் படிப்பு விதிகள் 2008-இன் பிரிவு 28 கைவிடப்பட்டதை ரத்து செய்து 17-9-2016-இல் உத்தரவிட்டது. பார் கவுன்சில் உத்தரவு ரத்து: இந்த நிலையில், இந்திய பார் கவுன்சிலின் 17-9-2016 உத்தரவை எதிர்த்து ரிஷப் துகால் மற்றும் ஏஎன்ஆர் ஆகிய மனுதாரர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இம்மனுவை கடந்த மார்ச் மாதம் விசாரணைக்கு எடுத்த உச்சநீதிமன்றம், இந்திய பார் கவுன்சிலின் 17-9-2016 உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்ததோடு, வழக்கு மீதான அடுத்தகட்ட விசாரணையை ஜூலை 3-ஆவது வாரத்துக்கு ஒத்திவைத்துள்ளது.
இதன் மூலம், நாடு முழுவதும் மூன்று ஆண்டு எல்.எல்.பி. சட்டப் படிப்புகள், 5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்புகளுக்கு வயது உச்ச வரம்பு மீண்டும் நீக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திலும் வயது வரம்பு இல்லை: இதுகுறித்து தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக பேராசிரியர்கள் கூறியது: உச்சநீதிமன்ற உத்தரவு காரணமாக, தமிழகத்திலும் மூன்று மற்றும் 5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்புகளுக்கு வயது உச்ச வரம்பே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

வரும் 2017-18 கல்வியாண்டு சட்டப் படிப்புகள் சேர்க்கை மட்டுமே வயது உச்ச வரம்பு இல்லாமல் நடைபெறும். தமிழகம் முழுவதும் உள்ள அரசு சட்டக் கல்லூரிகளில் மட்டுமின்றி, பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள ஆற்றல்சார் பள்ளியில் வழங்கப்படும் ஹானர்ஸ் சட்டப் படிப்புகளிலும் இந்த அடிப்படையிலேயே சேர்க்கை நடைபெற உள்ளது.

இது அடுத்த ஆண்டுகளுக்கும் தொடருமா என்பது உச்ச நீதிமன்றத்தின் ஜூலை 3-ஆவது வார உத்தரவுக்குப் பிறகே தெரியவரும்.

மேலும், ஆற்றல்சார் பள்ளி சட்டப் படிப்புகளுக்கான சேர்க்கை அறிவிப்பு மே இறுதியில் அல்லது ஜூன் முதல் வாரத்தில் வெளியிடப்படும் என்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக