புதன், 24 மே, 2017

11 மற்றும் 12ஆம் வகுப்புக்கான தேர்வு முறையில் மாற்றம் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு.


வரும் கல்வி ஆண்டு முதல் 11ஆம் வகுப்புக்கும் பொதுத்தேர்வு நடைபெறும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தலைமைசெயலகத்தில் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

வரும் கல்வி ஆண்டு முதல் 11ஆம் வகுப்புக்கும்பொதுத்தேர்வு நடைபெறும். 11 மற்றும் 12ஆம் வகுப்புக்கான தேர்வு முறையில் மாற்றம் கொண்டு வந்துள்ளதற்கான அரசாணை வெளியீடப்பட்டுள்ளது. 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்கள் தோல்வியடைந்தால், இடைவெளி விழுந்துவிடாமல் இருக்க ஜூன், ஜூலையில் மீண்டும் தேர்வு நடக்கும்.

11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு பத்து ஆண்டுகளுக்கும் மேலாக பாடத்திட்டம் மாற்றப்படவில்லை. சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்திற்கு இணையாக தமிழக பள்ளிகளில் பாடத்திட்டம் புதிதாக உருவாக்கப்படும், தமிழர்களின் பண்பாடு கலாச்சாரம், உள்ளிட்டவை இணைத்து புதிய பாடத்திட்டம் உருவாக்கப்படும். 
நாடு தழுவிய தேர்வுகளுக்கு மாணவர்களை தயார்படுத்தும் வகையில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

2018 - 2019ம் ஆண்டு முதல் புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்படும், வழக்கமான பள்ளி நேரத்தை விட கூடுதலாக ஒரு மணி நேரம் சிறப்பு வகுப்புகள் நடைபெறும், 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான தேர்வில் தேர்வு மதிப்பெண் 1200லிருந்து 600 ஆகவும், பொதுத்தேர்வு நேரம் 3 மணி நேரத்திலிருந்து 2.30 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது. தேவைக்கேற்ப முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை தற்காலிகமாக நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக