தொழிற்பயிற்சி நிலையத்தில் 6 பாடப்பிரிவுகளில் சேர 7-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் பெருநகர சென்னை மாநகராட்சி அறிவிப்பு
தொழிற்பயிற்சி
நிலையத்தில் 6 பாடப்பிரிவுகளில் சேர 7-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்
என்று பெருநகர சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இதுதொடர்பாக பெருநகர
சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு
இருப்பதாவது:- இலவச பயிற்சி பெருநகர சென்னை மாநகராட்சி தொழிற்பயிற்சி
நிலையத்தில் 6 பாடப்பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. சென்னை
பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கும்,
பெருநகர சென்னை மாநகராட்சி ஊழியர்களின்
குழந்தைகளுக்கும் மாணவர்கள் சேர்க்கையில் முன்னுரிமை அளிக்கப்படும். மீதி
காலியாக உள்ள இடங்கள் சென்னை மாவட்டத்தில் உள்ள பிற பள்ளிகளில் படித்த ஏழை
மாணவர்களுக்கு அரசால் வெளியிடப்படும் விதிகளின்படி சேர்க்கை வழங்கப்படும்.
தொழிற்பயிற்சி நிலையத்தில் முற்றிலும் இலவச பயிற்சி அளிப்பது
சிறப்பம்சமாகும். பயிற்சி பெறும் மாணவர்களுக்கு இலவச சீருடை, பஸ் பாஸ்,
பயிற்சி காலத்தில் மாதந்தோறும் பயிற்சி உதவித்தொகையாக ரூ.500, இலவச
மடிக்கணினி வழங்கப்படுகிறது.
பயிற்சி முடித்த பயிற்சியாளர்களுக்கு முன்னணி
நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்று தரப்படுகிறது. கலந்தாய்வு
விண்ணப்பப்படிவம் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. பூர்த்தி செய்யப்பட்ட
விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் அடுத்த மாதம் (ஜூன்) 7-ந்
தேதி ஆகும். விண்ணப்பப் படிவம் சமர்ப்பித்தவர்கள் சேர்க்கைக்காக 9-ந் தேதி
காலை 10 மணிக்கு சென்னை மாநகராட்சி தொழிற்பயிற்சி நிலையம், இ-டிப்போ லாரி
நிலையம் ரோடு, முத்தையா தெரு அருகில், லாயிட்ஸ் காலனி, ராயப்பேட்டை,
சென்னை-14 என்ற முகவரியில் நடைபெறும் கலந்தாய்வில் அனைத்து அசல்
சான்றிதழ்களுடன் கலந்துகொள்ள வேண்டும். கலந்தாய்வின் போது விண்ணப்பதாரரின்
மதிப்பெண் தகுதி தரவரிசையின்படி மற்றும் இடஒதுக்கீட்டின் அடிப்படையில்
பாடப்பிரிவு ஒதுக்கீடு செய்து பயிற்சியில் சேருவதற்கு அனுமதி வழங்கப்படும்.
பயிற்சியில் சேர வயது வரம்பு 15 முதல் 40 வயது ஆகும். இவ்வாறு அதில்
கூறப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக